கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

எதை விதைக்கிறோம்?
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7
மனிதன் ஒரு விவசாயி. நம் உள்ளத்தில் எண்ணங்கள் என்கிற விதைகள் உண்டு. மனிதஉறவுகள் என்கிற நிலமும் உண்டு. “வினையை விதைத்தால் வினையை அறுப்போம், தினையை விதைத்தால் தினையை அறுப்போம்” என்கிறது தமிழ்ப்பழமொழி. வினை என்பது செயல்பாடுகள்; தினை என்பது உணவுத்தாவரம். கசப்பை விதைத்து விட்டு இனிப்பையோ, வேஷத்தை விதைத்து விட்டு பாசத்தையோ எதிர்பார்க்க முடியாது. புன்னகையை விதைத்தால் புன்னகையும், நட்பை வளர்த்தால் நட்பையும் நாம் அறுவடை செய்யக்கூடும். காயப்படுத்தினால் காயப்படுத்தப்படுவோம். பிறரை அழவைத்தால், நாமும் அழவேண்டியிருக்கும். காரணம் நாம் ஆராதிக்கும் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. இதுவே இன்றைய தியானப்பகுதி வலியுறுத்தும் சத்தியம். தியானிப்போம் வாருங்கள்!
அன்பை, பாசத்தை…
அன்பை, பாசத்தை விதைக்கப்பழகுவோம். தவறு செய்யாத மனிதர்கள் இல்லையே! “ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவரை சீர்பொருந்தப் பண்ணுங்கள்”(கலாத்தியர் 6:1). உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக (பிலி 4:5). சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள் (மத் 5:5). நாம் குடும்பமாக, குழுவாக இணைந்து செயல்படும்போது, நம்மோடிருப்பவர்களை குறை சொல்லி, குற்றம் சொல்லி, கோபத்தால் வசைபாடுகிறோம். காயப்படுத்துகிறோம். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலாத்தியர் 6:2). என்கிற இராஜரீக பிரமாணத்தை நிறைவேற்ற கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்து, அன்பை விதைப்போம். அன்பை, பாசத்தை அறுப்போம்.
ஈகையை, தயாளத்தை…
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத் 5:7). நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும், உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும் (ஒபதியா 1:15). ஈகையின் மேன்மையைக் குறித்து 2 கொரி 8 மற்றும் 9 அதிகாரங்களில் நாம் வாசிக்கிறோம். மக்கெதேனியா நாட்டு திருச்சபைகள் உபத்திரவம், தரித்திரம் மத்தியிலும் “கொடுப்பதில்” வள்ளல்களாய் காணப்பட்டார்கள். ஊழியங்கள், ஊழியர்களை கனம்பண்ணி நம்முடைய தயாளகுணத்தை விதைப்போம். ஏழைகள், பட்டினியிருப்போர் போன்று, இல்லாதிருப்போரை சந்தித்து இருப்பதை அன்போடு பகிர்ந்திடுவோம். “கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்” (லூக்கா 6:38).
நன்மையை, நற்கிரியைகளை…
“கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு கடன்பட்டவர்கள்” என்ன ஒரு ஆழமான கிறிஸ்தவ கீர்த்தனை வரிகள். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றக்காலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6:9). நமக்கு முன் மாதிரியான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார் (அப் 10:38). நன்மை செய்யவும் தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் (எபி 13:16) என்று போதிக்கப்பட்டிருக்கிற நாம் நன்மையை விதைப்போம், நற்கிரியைகளை விதைப்போம். டாக்டா ஐடா ஸ்கடர் என்னும் ஒருவரின் ஆழமான அர்ப்பணிப்பு, இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமான மருத்துவப்பணியாய், நற்ப்பணியாய் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சி.எம்.சி வேலூர் மருத்துவமனை செயல்பட்டு வருவது சிறந்ததோர் முன்மாதிரி! விதைப்போம் நன்மைகளை! அறுப்போம் நன்மைகளை!
பரலோகப்பிதாவே, அன்பை, விசுவாசத்தை, ஈகையை நற்கிரியைகளை விசுவாசத்தோடு விதைக்க எங்களுக்கு கிருபை பாராட்டும். ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org




