கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 8 நாள்

செயல்படும் அன்பு

“நாம் ஒருவரிலொருவர் அன்புகூறவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது… என் பிள்ளைகளே வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையிலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவான் 3:11,18).

ஏன் இந்த சண்டை சச்சரவுகள், கூச்சல் குழப்பங்கள், வன்முறை கலாச்சாரம், மாய்மாலமான வாழ்க்கை? சத்தியத்தில் நடப்பவர்களை தடுமாறச் செய்யும் குழப்பவாதிகளுக்கு விலகியிருக்க வேண்டுமல்லவா! கற்று நிச்சயித்திரு ஆவிக்குரிய காரியங்களில் நிலைத்திருக்க வேண்டாமா? நாம் நம்மைக் கலக்குகிறவர்களால் கலங்கிப் போய் விடாதபடிக்கு, அப்படிப்பட்டவர்களை அடையாளங்களோடு ஜாக்கிரதையாயிருக்க தீர்மானிப்போம். கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கும் நாம், நமது அன்பை, விசுவாசத்தை கிரியைகளில் காண்பிக்க வலியுறுத்தும் வேதப்பகுதியே இன்றைய தியானம்.

கலக்கத்தில் கலாத்தியர்:

சத்தியத்திற்கு கீழ்படியாமற் போக உங்களை தடைசெய்தவன் யார்? உங்களை கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினை அடைவான் (கலாத்தியர் 5:7,10). தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்கள் அடிப்படையில் போதிக்கிறவர்களாகவோ, ஏற்றுக் கொள்கிறவர்களாகவோ இருக்கக்கூடாது. அனுபவம் கர்த்தரின் வார்த்தையோடு ஒத்துப்போகுமானால், அப்படிப்பட்ட அனுபவங்களை ஏற்றுக்கொள்ளலாம். கலாத்திய திருச்சபை பாரம்பரிய கட்டுக்களிலிருந்து மீட்கப்பட்டு சுயாதீன நிலைமையில் நிலைகொண்டிருக்க அழைக்கப்பட்டிருந்தது. விருத்தசேதனம் பண்ணுதல் கட்டாயப்படுத்தப்படவில்லை. காரணம் விருத்தசேதனம் பண்ணிக் கொண்ட எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான். நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றினவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே. மற்றபடி நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள். நாம் அன்பின் பிரமாணத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தெளிவில் தேவமனிதர்கள்:

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தரித்துக் கொண்டிருக்கிற (ரோமர் 13:14), விசுவாசிகளாகிய ஒவ்வொருவரும் அன்பினால் கிரியை செய்கிற விசுவாச (கலாத்தியர் 5:6) வாழ்க்கை வாழவேண்டும். கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது (யாக்கோபு 2:13) அது எதற்கும் உதவாது. நாம் அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய (கலாத்தியர் 5:13) அழைப்பைப் பெற்றவர்கள். கிரியைகளில்லாத அன்பு மாய்மாலமானது. செயல்படும் அன்பே இன்றைய பிரதான தேவை. “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலாத்தியர் 3:14).

அன்பிலே நடக்கிற நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாய் வாழ்ந்து, கலக்கத்தில், குழப்பத்தில் வாழும் மக்களின் கலக்கம் தீர மயக்கம் மறைய நம்மை நாமே அர்ப்பணிப்போம். தேவகிருபை நம்மை கர்த்தரின் அன்பில் நிரப்புவதாக!

பரலோகப்பிதாவே, அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யவும், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து, உம்முடைய அன்பிலே நிலைத்திருக்க உதவி செய்யும். ஆமென்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org