கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 3 நாள்

கிரியையா! கிருபையா!

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. (எபேசியர் 2:8)

திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் படும் உபத்திரவங்கள் களையப்பட வேண்டும். ஏழைகள் ஆதரிக்கப்பட வேண்டும். அடிமைத்தன விலங்குகள் முறிக்கப்படவேண்டும். சமுதாய மற்றும் தனி மனித சீர்திருத்தங்கள் மூலம் ஒழுக்க சீர்கேடுகள் ஒழிக்கப்பட வேண்டும். சமத்துவம், சமூகநீதி நிலைநிறுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக, நன்மை செய்கிறவனாக, நற்கிரியைகளில் பெருகிறவனாக மாறவேண்டும். இவையெல்லாம் மனிதன் மனிதனாக வாழ உதவுமே தவிர, மனிதன் இரட்சிக்கப்பட, பாவமன்னிப்படைய வழிவகுக்காது. “நற்கிரியைகள் செய்வதால் இரட்சிப்படைவதில்லை. மாறாக இரட்சிக்கப்பட்டதால் நற்கிரியைகளை செய்ய கடனாளிகளாயிருக்கிறோம்” என்பதே வேதாகமம் நிலைநிறுத்தும் அடிப்படை உண்மை, சத்தியம்.

நியாயப்பிரமாணம்:-

நாம் எதை செய்யவேண்டும், எவைகளை செய்யக்கூடாது என்பதை நியாயப்பிரமாணத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். பிரித்தெடுக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட தேவஜனம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை வழிமுறைகளை நியாயப்பிரமாணம் எடுத்துரைக்கிறது. விருத்தசேதனம், புறமார்க்கத்தாரோடே கலவாமை, காணிக்கைக்குரிய பிரமாணம் என்று அநேகக்காரியங்களில் பக்திவைராக்கியமாயிருக்கும்படி நியாயப்பிரமாணம் நிர்பந்திக்கிறது. மேலும் எவையெல்லாம் பாவம் என்பதை நியாயப்பிரமாணத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். நியாயப்பிரமாணத்தில் போதிக்கப்பட்டபடி வாழமுடியாதபோது, குற்றமனசாட்சியால் வாதிக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறோம்.” நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே” (கலாத்தியர் 2:16). அப்படியானால் நாம் நீதிமானாக்கப்படுவது எப்படி?

கிருபையின் பிரமாணம்:-

“நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்கு, கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்” (கலாத்தியர் 2:15). கிரியைகளினால்ல, கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல கர்த்தர் தரும் சுயாதீனத்தின்படி அன்பின் வழியில் நடக்க கிருபையின் பிரமாணம் உதவி செய்கிறது. „பாவத்திற்கு மரித்து’ நீதிக்குப்பிழைக்கச் செய்கிறது கிருபையின் பிரமாணம். வெளிப்புற அடையாளங்களினாலும் அல்ல, பக்தி வைராக்கியத்தினாலும் அல்ல, கிறிஸ்துவின் அச்சடையாளங்களினாலே பரிசுத்தமாய் வாழ கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணம் - அன்பின் பிரமாணம் உதவி செய்கிறது.

கிருபையின் அறைகூவல்:

கிருபையின் சுவிஷேசத்திற்கு விசுவாசத்தின் வழியாய் கீழ்ப்படிந்தவர்களின் வாழ்க்கையில் காணப்படவேண்டிய வாழ்க்கை வழிமுறைகளை இன்றைய வேதப்பகுதி தெளிவாக எடுத்துரைக்கிறது. „என்னுடனே கூட இருந்த தீத்து, கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படி கட்டாயம் பண்ணப்படவில்லை‟ (வசனம் 3). விருத்தசேதனம் பெற்றுக் கொள்ளாதவனும் கிருபைக்குட்படமுடியும் (வசனம் 7,8). தரித்திரரை நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கமுடியும் (வசனம் 9,10). மாய்மாலம் பண்ணாதபடிக்கும், மாய்மாலம் செய்கிறவர்களை முதுகுக்குப் பின்னாக அல்ல, முகமுகமாக சுட்டிக்காண்பிக்கின்ற பண்பு (வசனம் 11-14) தேவனுக்கென்று பிழைக்கும்படி, நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரிக்க முடியும் (வசனம் 19). கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் (வசனம் 20). கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள். இயேசுகிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொண்டு, கிறிஸ்துவின் நிருபங்களாக மாறமுடியும்.

ஆண்டவரே, இயேசுகிறிஸ்துவின் சாயலைத் தரித்துக்கொண்டு, பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும். ஆமென்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org