கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 7 நாள்

சீனாய் மலை! கல்வாரிமலை

சரித்திரம் அறிந்து சத்தியத்தைப் போதிக்கும் அப்போஸ்தலனாகிய பவுலின் ஞானம், பாங்கு மிகவும் அருமையானது. போற்றுதலுக்குரியது. விசுவாசத்தினால் கிருபைக்கு கீழ்ப்படிந்தவர்கள், தங்களது விசுவாசத்தில் தளர்ந்து, தடுமாறி குழப்பமான மனநிலையில் காணப்பட்ட, கலாத்தியநாட்டு திருச்சபைகளை உற்சாகப்படுத்தி, தெளிவுறச் செய்யும் வேதப்பகுதியே இன்றைய தியானம். பழைய ஏற்பாட்டு வரலாற்று சம்பவங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி, ஞானக்கன்மலையாகிய கிறிஸ்துவை, கிறிஸ்து தரும் கிருபையை விளக்கிக் காட்டும் உன்னதமான தியானத்திற்குள் பரிசுத்தஆவியானவரின் உதவியோடு கடந்து செல்வோம்.

நியாயப்பிரமாணம் - கிருபை:-

நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதை…எனக்குச் சொல்லுங்கள் (கலா 4:21) என்று பவுல் கலாத்தியரைப் பார்த்து கேட்கின்றார். நியாயப்பிரமாணம் வாழவேண்டிய வழிமுறைகளை, நெறிமுறைகளை, சத்தியத்தைக் காண்பிக்கிறது. நீதி, நியாயங்களைப் போதிக்கிறது. தவறும்போது அதற்கானத் தண்டனையும் எடுத்துக்காட்டுகிறது. கிருபை வாழ வைக்கிறது. மனிதன் பாவத்திலிருந்தும், பாவத்திற்கான தண்டனையிலிருந்து விடுதலை தருகிறது. கர்த்தரின் கிருபையானது, கர்த்தரின் அன்பின் பிரவாகங்களுக்குள்ளே வழிநடத்தி நீதி, நியாயங்களை செய்யவைக்கிறது. சத்தியபரனாகிய இயேசுகிறிஸ்துவின் அன்பின் அடிச்சுவடுகளில் நடக்கச்செய்து, கிறிஸ்துவின் சாயலால் நம்மை அலங்கரிக்கிறது.

ஆகார் - சாராள்:

“ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளை இல்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட அடிமைப்பெண்…என் அடிமைப் பெண்ணோடு சேரும்…அவள் தான் கர்ப்பவதியானபோது தன் நாச்சியாரை (சாராயை) அற்பமாக எண்ணினாள்…அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக” (ஆதி 16:1-11). அடிமைப்பெண்ணாகிய ஆகார், வாழப்பிறந்தவளை, வாழ்க்கைப்பட்டவளை, ஆபிரகாமின் வாழ்க்கைத்துணையை ஆளுகை செய்கிறாள், அரட்டை செய்கிறாள்.“நான் அவளை (சாராயை) ஆசீர்வதித்து, அவளாலே ஒரு குமாரனைத் தருவேன். அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும் அவளை ஆசீர்வதிப்பேன்” (ஆதியாகமம் 17:16). கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்கு செய்தருளினார்…சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான் (ஆதியாகமம் 21:1-3).

சாராள் ஆபிரகாமின் மனைவி, ஆகார் அடிமைப்பெண், இஸ்மவேல் அடிமைப்பெண்ணின் வழித்தோன்றல், ஈசாக்கு வாக்குத்தத்தின் வாரிசு. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஆபிரகாமின் வாக்குத்தத்தின் சந்ததியில் தோன்றினபடியால், அவரை நாம் விசுவாசிக்கிறபடியால், கிருபை மேல் கிருபை பெற்றிருக்கிறோம். நாம் பாவத்திற்கு அடிமையல்ல, கிருபைக்குட்பட்டு தேவநீதியை அன்பின் பிரமாணத்தினால் நிறைவேற்றுகிறவர்களாயிருக்கிறோம்.

சீனாய் மலை! கல்வாரிமலை:-

ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய் மலை. அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்கு சரி. இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. மேலான எருசலேமோ, சுயாதீனமுள்ளவள், அவளே நம் எல்லாருக்கும் தாயானவள் (கலாத்தியர் 4:25,26). சீனாய் மலையிலே, மோசே மூலமாக, கர்த்தர் பத்துக் கட்டளைகளைப் பிரகடனபடுத்தினார். கல்வாரி மலையிலே, பிதாவின் அன்பு வெளிப்பட்டது. தனது ஒரேபேறான குமாரனை நமக்கென்று பலியிட்டார். நாம் ஈசாக்கைப் போல வாக்குத்தத்தின்படி தேவனுடைய பிள்ளைகளும் சுதந்திரவாளிகளாயும் இருக்கிறோம். நாம் பரமஎருசலேமுக்கு, கானானுக்கு பயணம் செய்யும் பரலோகவாசிகள்.

அன்பின் தகப்பனே, பரமஎருசலேமாகிய கானானுக்கு பயணம் செய்ய உதவி செய்யும். ஆமென்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org