கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 2 நாள்

மகிமை தரும் கிருபை

அவர்கள் கேள்விப்பட்டிருந்து, என்னைப் (பவுலைப்) பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள். (கலா 1:23,24)

கர்த்தரின் கிருபை நமக்கு வாழ்வு தந்து, வாழ்க்கைக்கு நிறம், சுவை தந்து, நமது வாழ்வை வண்ணமயமாக்குகிறது. வாழ்வின் நோக்கங்களை அறிந்து கொள்ளவும், நோக்கங்களை நிறைவுபடுத்தப்படவும் தேவகிருபை அவசியமானது. வாழ்விலே நொந்து, வெந்து, வெறுமையாய், வீணராய் வாழாமல், மனநிறைவோடு, மகிழ்ச்சியாய் நாம் வாழ வழி செய்வது தேவகிருபையே. கசப்போடும், கண்ணீரோடும் வாழாமல், கிறிஸ்துவுக்காய், கிறிஸ்துவோடு வாழ வழி செய்வது தேவக்கிருபையே!

கிருபை தரும் மாற்றம்:-

தேவனுடைய சபையை பாழாக்கின பவுல், கிருபையினால் ஸ்திரப்பட்டு, தேவனுடைய சபைகளை ஸ்தாபித்தார். விசுவாசிகளைத் துன்பப்படுத்தி, பாடுகளுக்குட்படுத்திய பவுல் கிருபையினால் ஆட்கொள்ளப்பட்டு, கர்த்தருக்காய் பாடுகளை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவுக்கெதிராய் தீவிரமாக சீறிப்பாய்ந்த பவுல், கிருபையினால் கிறிஸ்துவுக்காக பட்டணங்கள், கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்தார். வாழ்க்கையை மாற்றும் வல்லமை கிருபைக்கு உண்டு. பாரம்பரிய பக்தி வைராக்கியங்களிலிருந்து அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விடுதலை தந்ததும் தேவக்கிருபையே!

கிருபை தரும் அழைப்பு:-

கர்த்தர் தமது திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்ற நம்மைத் தெரிந்து கொள்கிறார்; பிரித்தெடுக்கிறார்;; கிருபையினால் அவர்தம் பணிக்கு நம்மை அழைக்கிறார். அழைப்பின் கிருபைக்குக் கீழ்ப்படிபவர்கள் ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாக மாறுகிறார்கள். அநேகரை பஞ்சக் காலத்தில் போஷிக்கும்படி கர்த்தர் யோசேப்பை முன்குறித்தார். குழியிலிருந்து அரண்மனைக்கு சிறைச்சாலை வழியாக வழிநடத்தப்பட்டார். தெரிந்து கொண்ட ஜனத்தின் சிறையிருப்பை மாற்ற, மோசேயைத் தெரிந்து கொண்டு அழைத்தார். கிறிஸ்துவை அறியாத “புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” (அப்போஸ்தலர் 9:15). அப்போஸ்தலனாகிய பவுல் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யோசனை பண்ணாமல் (கலா 1:16) அழைப்புக்கு கீழ்ப்படிந்தார். நாம் நம்மை அழைக்கும் கர்த்தரின் கிருபைக்கு கீழ்ப்படிவோமா?முகமறியாதவருக்கு முகவரி தரும் கிருபை:-

கிருபை தரும் முகவரி:-

அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவராய் (கலா 1:22) இருந்தார். கர்த்தரின் கிருபை பவுலைப் பலப்படுத்தியது. கிறிஸ்துவுக்காய் ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணவும், சபைகளை ஏற்ப்படுத்தவும் „தேவக்கிருபை‟ பவுலிலே வெளிப்பட்டது. சுவிசேஷத்தை அறிவியாதிருந்தால் எனக்கு ஐயோ! என்று அர்ப்பணிப்போடு, கர்ப்பவேதனையோடு ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணினார். முகமறியாத பவுலுக்கு முகவரி தந்தது தேவக்கிருபை மாத்திரமல்ல, அப்போஸ்தலனாகிய பவுலைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள். கிருபைதரும் மனமாற்றத்தை அனுபவித்து, அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, வாழ்கிறபோது நம் மூலமாக தேவநாமம் மகிமைப்படும். கிருபைக்கு கீழ்ப்படிவோமா!

ஆண்டவரே, கிருபைதரும் மனமாற்றத்தை அனுபவித்து, கிருபைக்கு கீழ்ப்படிய உதவி செய்யும். ஆமென்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org