கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 5 நாள்

சந்ததி…சுதந்திரவாளிகள்

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தின்படி சுதந்திரராயும் இருக்கிறீர்கள். (கலாத்தியர் 3:29)

கர்த்தரின் கிருபையும், நமது விசுவாசமும் செயல்படும்போது, நாம் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் கடந்து வருகிறோம். இயேசுகிறிஸ்துவின் கிருபை, நம்மை ஆபிரகாமின் சந்ததியாயும், ஆபிரகாமின் வாக்குத்தத்திற்கு உடன் சுதந்திரராயும் மாற்றுகிறது. கிருபைக்கு நேராக வழிநடத்தும் „வேதாகம சித்தாந்தங்களே‟ இன்றைய தியானப்பகுதி. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டையும், புதியஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு அற்புதமான பாலமாக இன்றைய வேதப்பகுதி அமைந்துள்ளது. வாக்குத்தத்தமாகிய உடன்படிக்கை, நியாயப்பிரமாணம், கிருபையின் பிரமாணம் போன்ற அடிப்படை சத்தியங்களை அறிந்து அனுபவித்தல் நம் விசுவாச வாழ்வின் அஸ்திபாரமாகும்.

வாக்குத்தத்தம்:-

நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப்போ (ஆதி 12:1-3) என்கிற கட்டளையும், பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்கிற வாக்குத்தத்தமாகிய உடன்படிக்கையையும் கர்த்தர் ஆபிரகாமோடு ஏற்படுத்துகிறார். அப்படியே ஆபிரகாம் விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் (கலாத்தியர் 3:6,7). மனுஷர்களுக்குள்ளே, உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை (கலா 3:15). அப்படியிருக்கும்போது வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தர், தன்னுடைய படைப்பின் மகுடமாகிய மனிதனோடு ஏற்படுத்தின உடன்படிக்கையை மறப்பாரோ? நிச்சயம் நிறைவேற்றுவது அதிக நிச்சயமல்லவா! வாக்குத்தத்தின்படி நாம் ஆபிரகாமின் சந்ததியாயும்…கிறிஸ்துவின் சந்ததியாயும்… சுதந்திரவாளிகளாயும் இருக்கிறோம். (கலாத்தியர் 3:16)

நியாயப்பிரமாணம்:-

நியாயப்பிரமாணம், நம்மை, வாக்குத்தத்த உடன்படிக்கைக்கு நேராக வழிநடத்தும் „ஆசிரியராய்‟ காணப்படுகிறது. கிருபையினால் வாக்குத்தத்தம் இயேசுகிறிஸ்துவின் வழியாய் நிறைவேற்றப்படும் வரை, நியாயப்பிரமாணத்தினால் நாம் காவல் பண்ணப்பட்டிருந்தோம். ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான். கற்பனையும் பரிசுத்தமாயும், நீதியாயும், நன்மையாயும் இருக்கிறது (ரோமர் 7:12). எவையெல்லாம் பாவம் என்பதை நியாயப்பிரமாணம் காண்பித்து கொடுக்கிறதாயும், பாவம் செய்கிறவர்களுக்கான தண்டனையின் விவரமும் நியாயப்பிரமாணம் காண்பித்து கொடுக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23).

கிருபையின் பிரமாணம்:-

கிருபையும், சத்தியமும் ஆன கிறிஸ்துஇயேசு நம்முடைய பாவங்களுக்காக, தமது பரிசுத்த இரத்தத்தை சிந்தினார். மரணத்தை மரணத்தினால் வென்றார். அவர் சிலுவையில் உயர்த்தப்பட்ட பொழுது மனுக்குலம் அனைத்தையும், தன்னுடைய பாடுகள், இரத்தம், மரணம் மூலமாக தமது கிருபைக்கு சொந்தமாக்கினார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (யோவான் 1:12). பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆபிரகாமின் விசுவாசித்தின் மூலமாய் அனுபவித்த வாக்குத்தத்தங்களுக்கு சந்ததிகளாக,சுதந்திரவாளிகளாக மாறியிருக்கிறோம். எனவே யூதனென்றும் இல்லை…(கலா 3:28)

கிறிஸ்துவின் சந்ததியாகவும், நித்தியஜீவனுக்கு சுதந்திரவாளிகளாகவும், நம்மை உருவாக்கிய கிருபை மேலானது…உன்னதமானது…மேன்மையானது.

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org