கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

மனுஷரையா! கிறிஸ்துவையா!
மனுஷரைப் பிரியப்படுத்தி மனுஷருக்காய் வாழ்ந்தது போதும், கிறிஸ்துவைப் பிரியப்படுத்தி கிறிஸ்துவுக்காய் வாழ்வோம்.
ஓர் அறிமுகம்:
அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியா நாட்டிலுள்ள கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு எழுதின கிருபையின் கடிதமே „கலாத்தியர் நிருபம்’! எல்லாவற்றைக் காட்டிலும் கர்த்தரின் கிருபை மாத்திரமே உயர்ந்தது, மேன்மையானது என்பதை தெளிவாக விவரிக்கும் நிருபமே „கலாத்தியர் நிருபம்.‟ விசுவாசிகளாகிய நாம் கர்த்தரின் கிருபையை அறிந்து, அனுபவித்து, அறிவிக்க அழைக்கப்படுகிறோம். அழைக்கப்பட்ட அழைப்பை நிறைவேற்ற செயல்படும் போது மனுஷரையல்ல, கிறிஸ்துவையே பிரியப்படுத்துவது நமது நோக்கமாக மாறவேண்டும்.
வார்த்தை கிருபையானது:
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவான் 1:1), அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார் (யோவான் 1:14). கிருபையாகிய கிறிஸ்து பவுலை சந்தித்து, அவருக்குள் வாசம் பண்ணி, பவுலை „அப்போஸ்தலனாக‟ நியமனம் செய்தார். நாம் நிர்மூலமாகதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை, அவைகள் காலைதோறும் புதியவைகள் (புல 3:22,23). பிதாவானவர் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டெடுக்க, தமது ஒரேபேறான குமாரனை ஒப்புக்கொடுத்தார். நமக்காகத் தம்மைத் தந்தஇயேசுகிறிஸ்துவின் கிருபை அளவிடப்பட முடியாதது.
சுவிசேஷம்:
நீதிமான் ஒருவனும் இல்லை…நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10,11). எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமை அற்றவர்களானோம். இலவசமாய் அவருடைய கிருபையானது, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 3:23,24). நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டு, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்பதை விசுவாசிக்கும்போது நாம் இரட்சிக்கப்படுகிறோம் (1 யோவான் 1:7-10). கிறிஸ்துஇயேசுவின் கிருபையும், நம்முடைய விசுவாசமும் செயல்படும்போது இரட்சிப்பு நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இதுவே சுவிசேஷம்…இந்த சுவிசேஷத்தை அறிந்து, அனுபவித்து, அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமையாகும்.
நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்:
கிறிஸ்துவின் கிருபையினால் அழைத்தவரை விட்டு வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புவது ஆச்சரியமானது மாத்திரமல்ல, அபத்தமானது மற்றும் ஆபத்தானது. வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவன், சபிக்கப்பட்டவன், அதை ஏற்றுக்கொள்பவன் சாபத்திற்குட்பட்டவன். நமக்காக பாவமான மற்றும் சாபமான, கிறிஸ்துவின் கிருபையை உதாசீனப்படுத்துகிறவனுக்கு ஐயோ! நாம் யாரைப் பிரியப்படுத்த விரும்புகிறோம்! கிறிஸ்துவையா, மனுஷரையா! மனுஷரை பிரியப்படுத்துகிறவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரராயிருக்க முடியாது.கிறிஸ்துவின் கிருபையை, சிலுவையின் மேன்மையை உயர்த்துகிறவர்கள் மாத்திரமே கிறிஸ்துவின் ஊழியர்கள்
ஆண்டவரே, மனுஷரைப் பிரியப்படுத்தி மனுஷருக்காய் வாழ்ந்தது போதும், உம்மை பிரியப்படுத்தி உமக்காய் வாழ உதவி செய்யும். ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org




