கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

10 ல் 4 நாள்

நீங்கள் புத்தியீனர்களா! ஞானவான்களா! புத்திமான்களா!

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி, விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. (ரோமர் 1:17) நாம், சாதரணமாக, நமது திருச்சபை, அலுவலக மற்றும் சமுதாய உறவுகளில் “புத்தியில்லாத…அறிவுகெட்ட” போன்ற பதங்களைப் பயன்படுத்துவதில்லை. அதேவேளையில், நாம் நமது குடும்ப உறவுகளில் யாரை நல்வழிப்படுத்த, சீர்படுத்த வாஞ்சிக்கிறோமா அவர்களிடம், சிலநேரங்களில், இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், தான் கர்ப்ப வேதனைப்பட்டு கிறிஸ்துவுக்கென்று பெற்றெடுத்த, கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை அடிப்படை சத்தியங்களில் நிலைத்திருக்கத் தடுமாறும்போது, “புத்தியில்லாத…இத்தனை புத்தியீனரா” என்று அதிக உரிமையோடு கடிந்து கொள்கிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபிரெயர் 12:7)

சத்தியத்தை மறுதலித்த…

கலாத்திய திருச்சபை விசுவாசிகள் சத்தியமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்திருந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் கிருபையின் சுவிசேஷத்திற்கு தங்களை முழுவதும் விட்டுக்கொடுத்து, கிருபையினால், விசுவாசத்தினால் வரும் இரட்சிப்பை ருசி பார்த்திருந்தார்கள். தங்களுடைய விசுவாச வாழ்க்கையை, ஆவியினாலே ஆரம்பித்தவர்கள் மாம்சத்தினாலே முடிவுக்கு கொண்டு செல்கின்ற அளவுக்கு மயங்கின, மந்தநிலையிலே காணப்பட்டார்கள். “உங்களை மயக்கினவன் யார்? கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்து, பாடுகளை அனுபவித்தவர்கள் மயங்கி போனதேனோ! (கலா 3:1-4) தவறான, தகுதியற்ற உறவுகள் நமது விசுவாசத்தைப் பெலவீனப்படுத்தும். பணஆசை, பதவிஆசை, மாம்சீக இச்சை, ஜீவனத்தின் பெருமை நம்மை மயக்கி, நமது விசுவாச வாழ்வில் தடுமாற்றங்களைக் கொண்டு வரும்.

சத்தியத்தைப் போதித்த…

அப்போஸ்தலனாகிய பவுல், கிருபையின் சுவிசேஷத்தை மீண்டும் தெளிவுபடுத்துகிறார். கேள்விக்கணைகளினால், கலாத்திய திருச்சபையின் ஆவிக்குரிய மயங்கிய நிலையை, உயிரடையத் தூண்டுகிறார். எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?... மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? இத்தனை பாடுகளையும் வீணாய்பட்டீர்களோ?... உங்களுக்குள் அற்புதங்களை நடப்பிக்கிறவர்…எதினாலே செய்கிறார்?... விசுவாசமார்க்கத்தார் எவர்களோ, அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. ஆழமாக சிந்திக்கத்தூண்டும் கேள்விகள் கலாத்தியத் திருச்சபையின் மயக்கத்தை தெளிவிக்கிறதாக காணப்படுகிறது.

சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்த…

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி 11:1). விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் (எபி 11:6). விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாக பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான் (எபி 11:8). ஆபிரகாமின் விசுவாசத்தைக் கர்த்தர் கனம் பண்ணினார். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்கிற உண்மைக்கு சுதந்திரவாளியாய் மாறிப்போனார் ஆபிரகாம்.

சத்தியமாகிய இயேசுகிறிஸ்து…

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6). நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25). ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்காகப் பாவமானார்; மரத்திலே சபிக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் (கலா 3:13) என்ற வசனத்தின்படி அவர் நமக்காக சாபமானார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம், கிறிஸ்துஇயேசுவினாலே புறஜாதிகளுக்கு வரும்படியாக, கிறிஸ்து சிலுவையில் பாடுகளை ஏற்றுக்கொண்டார்.ஆவிக்குரிய மயங்கிய நிலையிலிருந்து நாம் வெளியே வர, அவரிடம் நாம் பாவங்களை அறிக்கையிடுவோம். கர்த்தாவே, எங்களது விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணி, நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள, உதவி செய்யும.; ஆமென்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிரியைகளினால் அல்ல கிருபையினால்

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org