கிரியைகளினால் அல்ல கிருபையினால்மாதிரி

இனி நீ அடிமையல்ல!
ஆகையால் நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால் கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்திரனாயுமிருக்கிறாய். (கலாத்தியர் 4:7)
இரத்தம்படிந்த கால்களுடன் சுற்றித்திரிந்து சுவிசேஷத்தை அறிவித்த…பாடுகள், உபத்திரவங்கள் மத்தியில் கிறிஸ்துவின் அன்பை பறைசாற்றின சாதுசுந்தர்சிங் பிரகடனப்படுத்திய அடித்தள அஸ்திபார வார்த்தைகள் “மண்ணின் மைந்தர்களாகிய நாம் விண்ணில் மைந்தர்களாகிறோம் என்பதுதான் அதிசயங்களில் சிறந்த அதிசயம், அற்புதங்களில் அற்புதமான அற்புதம்”. மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டு மண்ணிடத்திற்கு திரும்பும் மனிதன், மன்னாதி மன்னனின் கிருபையால் இரட்சிக்கப்படுகிறோம். தேவனுடைய பிள்ளைகளாகிறோம் என்பதுதான் இன்றைய தியானத்தின் சிறப்பு.
நான் கர்த்தருடையவன்! சுதந்திரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங் காலமளவும், அவனுக்கும், அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை…நாமும் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம் (கலா 4:1-3). ஆளப்பிறந்த நாம் அடிமைகளானோம். வாழப்பிறந்தவர்களாகிய நாம் நமது விலாசத்தைத்
தொலைத்தோம். பரிசுத்தமாய் வாழ தெரிந்துகொள்ளப்பட்ட நாம் பாவிகளானோம். பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க, காலம் நிறைவேறினபோது, தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பினார். அவரின் பாடுகளில், மரணத்தால், உயிர்த்தெழுதலில் நமது பாவ மற்றும் அடிமைத்தன விலங்குகள் தெறிபட்டது. தேவாலய திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது (மத்தேயு 27:51). பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய், புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை உண்டுபண்ணினபடியால் (எபி 10:19) நாம் அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்கதான கிருபைகளைப் பெற்றிருக்கிறோம்.
நாம் வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தாதி கர்த்தாவின் பிள்ளைகள். ஆம் கிறிஸ்து மூலமாய்த் தேவனுடைய சுதந்திரவாளிகளாய் இருக்கிறோம். என்ன பாக்கியம்! இது ஆனந்த பாக்கியமான அனுபவம்!
நான் கர்ப்பவேதனைப்படுபவன்:-
இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறியாத, அனுபவியாத காலங்களில் கிருபையின் சுவிசேஷத்திற்கு விரோதமாக செயல்படும் 'வன்முறையாளராக', அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்தார். தேவனை அறிந்தபோது, தேவனால் அறியப்பட்ட பொழுது, வாழ்க்கையின் நோக்கம் மாறியது. அடிமைத்தனத்தில் வாழ்பவரை, இருளில் நடப்பவரை, இயேசுகிறிஸ்துவின் கிருபை மாத்திரமே மீட்டெடுக்கும் என்கிற சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கும 'சுவிசேஷகராக' மாற்றம் பெற்றார். “சுவிசேஷத்தை அறிவியாமலிருப்பது எப்படி? சுவிசேஷத்தை அறிவிப்பது என்மேல் விழுந்த கடமை. சுவிசேஷத்தை அறிவியாமலிருந்தால் எனக்கு ஐயோ!” (ரோமர் 1:16, 1கொரி 9:16) என்று அழிகின்ற ஆத்துமாக்களுக்காய் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும் வைராக்கியம் கொண்டிருந்தார். சத்தியத்தை சொன்னதினால் சத்துருவானாலும், சத்தியத்தில் நடப்பதினால் பாடுகளுக்குட்படுத்தினாலும், தனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பில் வைராக்கியம் கொண்டு அழைக்கப்பட்ட அழைப்பை நடைமுறைப்படுத்தினார். “கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்” (கலாத்தியர் 4:19) என்று ஆத்துமாக்களுக்காய் பாடுபடவும் தன்னை விட்டுக் கொடுத்தார்.
கர்த்தாவே, நாங்கள் யார் என்பதை அறிந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அழைப்பிலே நிலைத்திருக்க உம்முடைய கிருபை எங்களைத் தாங்குவதாக. ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்திய நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதின கடிதம் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்று விசுவாசத்தினால் அழைக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Live Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: livecommunity.org




