கிறிஸ்துவைப் பின்பற்றுதல்மாதிரி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

12 ல் 3 நாள்

பின்பற்றுவதும் அறிந்துகொள்வதும் ஒன்றல்ல

இயேசுவைப் பின்பற்றுவது பரவசமானது,ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் நமக்கு எல்லா விவரமும் தெரிந்திருக்காது. அதற்கான உத்வேகத்தைப் பெறவும்,நமக்கு மட்டும் இத்தனைப் பாடுகள் என்று உணராமல் இருக்கவும்,நம்முடைய விசுவாச வீரர்களை நோக்கிப் பாருங்கள். ஆபிரகாமும்,சாராளும் தங்கள் தேசத்தை விட்டு,முன்பின் தெரியாத ஒரு இடத்திற்குச் செல்லும்படி அழைக்கப்பட்டார்கள். நோவாவுக்குத் தன் குடும்பத்தாருக்கும்,மிருகங்களுக்கும் அடைக்கலமாக ஒரு பெரிய பேழையைக் கட்டி,பெருவெள்ளத்தைச் சந்திக்க ஆயத்தமாகும்படிச் சொல்லப்பட்டது. நெகேமியா வெகுதூரத்தில் இருந்த தன் சொந்த தேசத்தில் இடிந்துபோன அலங்கங்களை மீண்டும் கட்டி எழுப்ப ஏவப்பட்டார். தீர்க்கதரிசிகள் சத்துருவின் கைகளினால் நேரிடப் போகும் பேரழிவைக் குறித்து நிருபங்களை எழுதினார்கள். இவர்களில் யாருக்கும் முடிவில் என்ன நடக்கும் என்பது தெரியாது. தாங்கள் பார்க்கும்படி தேவன் அனுமதித்திருந்த சிறு சிறு காரியங்களை மட்டுமே அவர்களால் பார்க்க முடிந்தது,மீதம் நடக்க வேண்டிய காரியங்களுக்காக அவர்கள் முற்றிலும் தேவனையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று. தேவன் தங்களை நடத்திச் சென்ற பாதையில், அடுத்த அடி எடுத்து வைத்தால் பேராபத்து இருப்பதாகத் தோன்றிய நிலையில்,ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கடந்து சென்றார்கள்.

இன்று இயேசுவைப் பின்பற்றும் நமக்கும் இதே நிலைதான். அவருடைய வார்த்தைக்கும்,சத்தத்திற்கும் கீழ்ப்படிந்து, ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும்போது,அவர் நமக்குக் காரியங்களை மேலும் மேலும் வெளிப்படுத்துவார்.

இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியவுடனே உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அனைத்தையும் பற்றிய வரைபடத்தைத் தெளிவாகவும்,முழுமையாகவும் அறிந்துகொள்ளலாம் என்று நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்,ஏனென்றால் அப்படிப்பட்ட வரைபடம் எதுவுமில்லை. ஆனால் அவருடைய வார்த்தை உங்களுக்கு உண்டு,அது ஏறக்குறைய அவருடைய இருதயத்திலிருந்து உங்கள் இருதயத்திற்கு எழுதப்பட்ட அன்பின் கடிதம் போன்றது. நீங்கள் அவருடைய வார்த்தையை வாசிக்கத் தொடங்கி,அதை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொள்ள அர்ப்பணிக்கும்போது,உங்கள் விசுவாசப் பயணத்தின் பாதைக்கு அது வெளிச்சமாக இருப்பதைக் காண்பீர்கள். நீங்கள் விழுந்துவிடாமல் காக்கும் அவருடைய வார்த்தை, உங்களுக்காக தேவன் நியமித்திருக்கும் பாதையில் உங்களை நடத்தியும் செல்லும். இந்தப் பாதையை விட்டு உங்களால் விலக முடியுமா?ஆம்,உங்களால் முடியும். ஆனால், வழி விலகிப் போகும் தம் ஆட்டைத் தேடிச் செல்லும் ஒரு நல்ல மேய்ப்பர் நமக்கு உண்டு என்பது உறுதி. உங்கள் மேய்ப்பர் உங்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் சரியான வழியில் நடத்த முடியாத தூரத்திற்கு உங்களால் போகவே முடியாது.

அறிக்கை: என் எதிர்காலத்தைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருக்கலாம்,ஆனால் என் தேவனுக்குத் தெரியும்!

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்

அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/wearezion.in