நம் உள்ளங்களை உயிர்த்தெழுந்த திருநாளுக்கு ஆயத்தப்படுத்துவோம்: ஒரு லெந்து கால தியானம்மாதிரி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

40 ல் 32 நாள்

"நாள் 32: விபச்சாரி"

நியாயப்பிரமாணம் தெளிவாக இருந்தது - விபச்சாரம் அந்த இருவருக்கும் மரணதண்டனையை வரவழைக்கும். "புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்" (உபாகமம் 22:22). நியாயப்பிரமாணத்தின் படி இந்த விபச்சார ஸ்திரீயை இயேசுவினிடம் கல்லெறிய தக்கதாக பரிசேயர்களும் வேதபாரகரும் கொண்டுவந்தனர். அந்த விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட மனிதன் எங்கே? அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்களுடைய கவலை நியாயப்பிரமாணமே இல்லை. அவர்கள் கவலை இயேசுவை சோதிப்பதுதான்.

ஆனால் இயேசு ஏமாந்துவிடவில்லை. "உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்", என்பதாக அவர் சொன்னார். இயேசு நீதித்துறைக்கு புதிய பிரமாணத்தை உருவாக்கவில்லை; நியாயாதிபதி பாவமற்று இருக்கவேண்டும் என்றால் எந்த குற்றவாளியும் தண்டிக்கப்பட முடியாது. பரிசேயர்களுக்கு அடிக்கடி இயேசு சொன்ன ஒரு கருத்தை வலியுறுத்த முயல்கிறார். அவர் அடிக்கடி சொன்னது, "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறியுங்கள்" (மத்தேயு 9:13; 12:1-8; யோவான் 7:21-23). சொல்லப்போனால் அவர்கள் நியாயப்பிரமாணத்தின் முக்கிய பொருளான அன்பை அவர்கள் காணாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முயன்றார் - அதுவே அஸ்திபாரம் (மத்தேயு 22:34-40; 7:12; கலாதியார் 5:14). ஆகவே அவர்கள் நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துவதுபோல காட்சியளித்தாலும், அவர்கள் அன்பு, கிருபை, தாழ்மை, மனதுருக்கம் என்ற காரியங்களில் அதை உடைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே அவர்கள் சென்றுவிட்டார்கள். இயேசு அந்த ஸ்திரீயிடம் "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே" என்றார். அவர் "நீ பாவம் செய்தால் பரவாயில்லை" என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக, "நானே அன்பு, கிருபை என்னும் அஸ்திபாரத்தில் உன்னை நிலைநிறுத்துகிறேன். ஆகவே நீ பாவம் செய்யாதே - அதன் தண்டனைக்கு பயந்து அல்ல, ஆனால் நீ என்னை சந்தித்து என் கிருபையினால் இரட்சிக்கப்பட்டபடியால்" என்பதாக உரைத்தார்.

ஜெபம்

தேவனே, இயேசுவின் கிருபையினால் எங்கள் நீதி நிலைப்பட்டிருப்பதாக. உம்முடைய நாமத்தை உயர்த்துகிறோம். ஆகவே, நாங்கள் பாவம் செய்ய விரும்பாதபடியால், உம்முடைய பரிசுத்தம், நீதியை தேட உதவும். கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.

Copyright (c) 2012 by Redeemer Presbyterian Church.

இந்த திட்டத்தைப் பற்றி

Preparing Our Hearts for Easter: A Lenten Devotional

லெந்து என்பது என்ன? பாவம் மற்றும் மரணத்தின் இருளின் மீது கிறிஸ்துவின் வெளிச்சமும் வாழ்க்கையும் பெற்ற வெற்றியை எதிர்பார்க்கும் காலம் அது. சாம்பல் புதனிலிருந்து உயிர்த்தெழுந்த திருநாள் வரை நாம் பயணம் செய்கையில், நமது பலவீனமான உண்மை நிலைமையையும் தேவனின் மீட்கும் கிருபையையும் நினைவு கூறுகிறோம்.

More

இந்த தியானம் ரிடீமர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சின் ஊழியர் குழுவால் உருவாக்கப்பட்டு 2012 இல் www.redeemer.com இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.