ஆதியாகமம் 49
49
யாக்கோபு ஆசீர்வதித்தல்
1பின்பு யாக்கோபு தன் மகன்மாரை அழைத்து அவர்களிடம், “நீங்கள் எல்லோரும் என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், இனி வரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப் போகின்றேன்” என்றான்.
2“யாக்கோபின் மகன்மாரே, ஒன்றுகூடி வந்து கேளுங்கள்;
உங்கள் தந்தை இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.
3“ரூபன், நீ என் மூத்த மகன்,
நீ வலிமையும் என் பலனின் முதல் அடையாளமுமானவன்,
நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
4தண்ணீரைப் போல் தளம்புகின்றவனே, நீ இனிமேல் மேன்மை அடைய மாட்டாய்;
ஏனெனில், நீ உன்னுடைய தந்தையின் படுக்கையின்மீது ஏறினாய்,
என் கட்டிலின்மீது ஏறி என் படுக்கையை தீட்டுப்படுத்தினாய்.
5“சிமியோனும், லேவியும் சகோதரர்கள்.
அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள்.
6நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும்,
அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக.
ஏனெனில் அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதர்களைக் கொன்றார்கள்,
தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள்.
7அவர்களுடைய பயங்கரமான கோபமும்
கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக!
நான் அவர்களை யாக்கோபிலே பிரியச் செய்து,
இஸ்ரயேலிலே சிதறி போகச் செய்வேன்.
8“யூதா, உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்;
உன் பகைவர்களின் கழுத்தின்மீது உன்னுடைய கை இருக்கும்;
உன் தந்தையின் மகன்மார் உனக்கு முன்பாகப் பணிவார்கள்.
9யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி;
என் மகனே, நீ இரை தின்று திரும்புகின்றாய்.
அவன் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும் மடங்கிப் படுக்கின்றான்;
அவனை எழுப்பத் துணிபவன் யார்?
10செங்கோலுக்குரியவர் வரும்வரை
செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது,
ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது;
நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது.
11அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும்,
தன் கழுதைக்குட்டியைச் சிறந்த திராட்சைக்கொடியிலும் கட்டுவான்;
அவன் தன் ஆடைகளைத் திராட்சைரசத்திலும்,
அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான்.
12அவனுடைய கண்கள் திராட்சைரசத்தைவிட கருமையும்,
அவனுடைய பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும்.
13“செபுலோன், கடற்கரையில் குடியிருந்து,
கப்பல் துறைமுகமாய் இருப்பான்;
அவனுடைய எல்லை சீதோன் பட்டணம்வரை பரந்திருக்கும்.
14“இசக்கார், இரண்டு தொழுவங்களின்#49:14 தொழுவங்களின் அல்லது சேணப் பொதிகள் நடுவே படுத்திருக்கும்
பலமுள்ள கழுதை.
15அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும்,
தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு,
சுமைக்குத் தன் தோளைச் சாய்த்து
கொத்தடிமையாக மாறினான்.
16“தாண், இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து,
தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17தாண், குதிரைமீது போகின்றவன்
இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து,
குதிரைகளின் குதிகாலைக் கடிக்கின்ற பாம்பைப் போலவும்,
வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப் போலவும் இருப்பான்.
18“கர்த்தரே, நான் உம்முடைய இரட்சிப்புக்காகக் காத்திருக்கின்றேன்.
19“காத், கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான்,
ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.
20“ஆசேருடைய உணவு செழுமை மிகுந்ததாக இருக்கும்;
அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான்.
21“நப்தலி, இனிமையான வார்த்தைகளைப் பேசுகின்ற#49:21 அல்லது அழகான குட்டிகளை ஈனும் என்றும் மொழிபெயர்க்கலாம்.
விடுதலை பெற்ற பிணைமான்.
22“யோசேப்பு, கனி தரும் செடி;
அவன் நீரூற்றருகில் கனி தரும் திராட்சைக்கொடி.
அவனுடைய கிளைகள் மதில்களில் ஓங்கி வளரும்.
23வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்;
பகைமையுடன் அவன்மீது எய்து, அவனைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
24ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது;
அவனுடைய பலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன;
யாக்கோபின் வல்லவருடைய கரத்தினாலும்,
மேய்ப்பராலும், இஸ்ரயேலின் மலைப்பாறையாலும்,
25உனக்கு உதவி செய்யும் உன் தந்தையின் இறைவனாலும் இவ்வாறு ஆகின.
அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும்,
கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும்,
மார்பகங்களினதும் கருப்பையினதும்#49:25 மார்பகங்களினதும் கருப்பையினதும் – கவிதை நடையில் உள்ள இந்த பகுதி அநேக மந்தைகள் மற்றும் குழந்தைச் செல்வங்கள் என்பதைக் குறிக்கின்றது. ஆசீர்வாதங்களினாலும்
உன்னை ஆசீர்வதிக்கும் சர்வ வல்லமை கொண்டவராக இருக்கின்றார்.
26உன் தந்தையின் ஆசீர்வாதங்கள்
நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும்,
பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை.
இவையெல்லாம் யோசேப்பின் தலையின்மீதும்,
தன் சகோதரர்களுக்குள் பிரபுவாய் இருக்கின்றவனின் நெற்றியிலும் தங்குவதாக.
27“பென்யமீன், ஒரு கொடிய ஓநாய்;
காலையில் தன் இரையை விழுங்குவான்.
மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்”
என்றான்.
28இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே. அவர்களுடைய தந்தை அவரவருக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவைகளே.
யாக்கோபின் மரணம்
29பின்பு யாக்கோபு அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகின்றேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம் செய்த குகையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். 30அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல் நிலத்தில் இருக்கின்றது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து நிலத்தையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார். 31அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபேக்காளும் அடக்கம் செய்யப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம் செய்தேன். 32அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான்.
33யாக்கோபு தன் மகன்மாருக்கு அறிவுரை கூறி முடித்ததும், அவன் தன் கால்களை உயர்த்தி கட்டிலின்மீது வைத்து இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனக்கு முன் மரணித்த முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 49: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.