ஆதியாகமம் 48
48
மனாசேயும் எப்பிராயீமும்
1சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தந்தை உடல் நலமின்றி இருக்கின்றார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்மாரான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். 2“உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கின்றான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
3யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே சர்வ வல்லமை கொண்ட இறைவன் எனக்கு முன் தோன்றி என்னை ஆசீர்வதித்தார். 4அவர் என்னிடம், ‘நான் உன் இனத்தை விருத்தியாக்கி பெருகச் செய்வேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப் பின்னர் உன் சந்ததிகளுக்கு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார்.
5“எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்துக்கு வருவதற்கு முன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் என்னுடையவர்கள். ரூபனும், சிமியோனும் என் மகன்மாராய் இருப்பது போல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்மாராய் இருப்பார்கள். 6அவர்களுக்குப் பின்னர் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அவர்களுக்குரிய உரிமைச் சொத்துகள், அவர்களின் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் பெயர்களுக்குரியதாக இருக்கும். 7நான் பதானை#48:7 பதானை – பதான்-அராம் என்பதன் சுருக்கப் பெயர். இதன் மறுபெயர் மெசொப்பொத்தாமியா. விட்டுத் திரும்பி வருகையில், கானான் நாட்டில், எப்பிராத்தா நகரத்துக்குச் சற்று தொலைவில், வழியில் சென்று கொண்டிருக்கும்போதே ராகேல் மரணித்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியில் நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான்.
8இஸ்ரயேல் யோசேப்பின் மகன்மாரை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான்.
9அதற்கு யோசேப்பு தன் தந்தையிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான்.
அப்போது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான்.
10வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களை அரவணைத்து முத்தமிட்டான்.
11அதன் பின்னர் இஸ்ரயேல் யோசேப்பிடம், “உன் முகத்தை மீண்டும் பார்க்கக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்பொழுதோ இறைவன், உன்னுடைய பிள்ளைகளையும்கூட காணச் செய்தாரே” என்றான்.
12யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு தரைவரைக்கும் தலையைக் குனிந்து தன் தந்தையை வணங்கினான். 13பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பற்றிப்பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப் பக்கத்திலும், மனாசேயைத் தன் இடதுகையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தந்தை அருகே கொண்டுவந்தான். 14ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்த போதிலும் அவனது தலையின்மீது தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவனது தலையின்மீது இடதுகையை வைத்தான்.
15அதன் பின்னர் அவன் யோசேப்பை ஆசீர்வதித்து,
“என் தந்தையர்களான
ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும்,
என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை
என் மேய்ப்பராயிருந்த இறைவனும்,
16அனைத்து தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர்
இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக.
இவர்கள் என்னுடைய பெயராலும்,
என் தந்தையர்களான ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக.
இவர்கள் பூமியில்
மிகுதியாய்ப் பெருகுவார்களாக”
என்றான்.
17தனது தந்தை அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காக எடுத்தான். 18யோசேப்பு தன் தந்தையிடம், “அவ்வாறல்ல தந்தையே, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான்.
19ஆனால் யாக்கோபோ அவ்வாறு செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனது சந்ததி பல இனங்களாகப் பெருகும்” என்றான். 20அன்றைய தினம் அவன் அவர்களை ஆசீர்வதித்து,
“ ‘எப்பிராயீம் மற்றும் மனாசேயைப் போல்,
உங்களையும் இறைவன் பெருகச் செய்வாராக’
என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்”
என்றான். இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான்.
21பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் மரணிக்கும் தறுவாயில் இருக்கின்றேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்களது முற்பிதாக்களின் நாட்டுக்குத்#48:21 நாட்டுக்கு – கானான் நாட்டுக்கு திரும்பவும் அழைத்துச் செல்வார். 22உனது சகோதரர்களுக்கு கொடுத்ததைவிடவும் மேலதிகமாக, நான் வாளினாலும் வில்லினாலும் சண்டையிட்டு எமோரியரிடமிருந்து கைப்பற்றிய மேட்டு நிலத்தை உனக்குக் கொடுக்கின்றேன்” என்றான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 48: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.