ஆதியாகமம் 50

50
1அப்போது யோசேப்பு தன் தந்தையினது முகத்தின்மீது விழுந்து அழுது, அவரை முத்தமிட்டான். 2பின்பு யோசேப்பு தன் தந்தையான இஸ்ரயேலின் சடலம் பழுதடையாதவாறு அதைப் பதப்படுத்தும்படி, தனது சேவையிலிருந்த வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான். வைத்தியர்கள் அவ்வாறே செய்தார்கள். 3இவ்வாறு சடலம் பழுதடையாதபடி அதைப் பதப்படுத்துவதற்கு வழமையாக நாற்பது நாட்கள்வரை தேவைப்படுவதால், அவர்கள் நாற்பது நாட்களை இதற்கென செலவிட்டார்கள். அத்துடன், யாக்கோபுக்காக எகிப்தியர் எழுபது நாட்கள் துக்கம் அனுஷ்டித்தார்கள்.
4துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடிவடைந்ததும் யோசேப்பு, பார்வோனின் அரச சபையினரிடம், “உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நீங்கள் பார்வோனிடம் எனக்காக ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும். 5என் தந்தை என்னிடம், ‘நான் மரணிக்கப் போகின்றேன். கானானில் நான் வெட்டி வைத்திருக்கும் என்னுடைய கல்லறையிலேயே என்னை அடக்கம் செய்யவேண்டும்’ என்று சத்தியம் வாங்கியிருந்தார். ஆகவே இப்போது நான் போய், என் தந்தையை அடக்கம்செய்து திரும்பி வர விடைகொடுக்கும்படி பார்வோனிடம் சொல்லுங்கள்” என்றான்.
6பார்வோன் அதற்குப் பதிலளித்து, “உன் தந்தை உன்னிடம் சத்தியம் வாங்கியபடி, நீ போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.
7எனவே யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்யப் போனான். அவனுடன் பார்வோனுடைய அரண்மனைப் பெரியோர்களும் எகிப்திலுள்ள பெரியோர்களுமான அனைத்து அரச அதிகாரிகளும் போனார்கள். 8அவர்களோடு யோசேப்பின் வீட்டாரும் அவனுடைய சகோதரர்களும் அவன் தந்தை வீட்டாரும் சென்றார்கள். அவர்களுடைய பிள்ளைகளையும், ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் மாத்திரம் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றார்கள். 9தேர்களுடன் குதிரை வீரர்களும் அவர்களோடு போனார்கள். அது மிகப்பெரிய ஒரு கூட்டமாய் இருந்தது.
10அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பாலுள்ள ஆதாத் என்னும் கதிரடிக்கும் களத்தை அடைந்தபோது, மனம்வெதும்பி, ஒப்பாரியிட்டு உரத்த குரலில் அழுதார்கள். அங்கே யோசேப்பு தன் தந்தைக்காக ஏழு நாட்கள் பெரிதாக துக்கம் அனுஷ்டித்தான். 11ஆதாத்தின் கதிரடிக்கும் களத்தில் அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதை அங்கு வாழ்ந்த கானானியர் கண்டபோது, “எகிப்தியர் பெரிய துக்க அனுஷ்டிப்பை நடத்துகின்றார்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். அதனாலேயே யோர்தானுக்கு அருகிலுள்ள அந்த இடத்துக்கு ஆபேல்-மிஸ்ராயீம்#50:11 ஆபேல்-மிஸ்ராயீம் – எகிப்தியர்களின் துக்கம் என்று அர்த்தம். என்ற பெயர் வந்தது.
12யாக்கோபு தங்களுக்குக் கட்டளையிட்ட விதமாக அவனுடைய மகன்மார் செய்தார்கள்: 13அவனுடைய உடலைக் கானான் நாட்டுக்குக் கொண்டுபோய், அங்கே மம்ரேக்கு அருகிலிருக்கும் மக்பேலா வெளியிலுள்ள குகையிலே அடக்கம் செய்தார்கள்; ஆபிரகாம் அந்த நிலத்தை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து கல்லறை நிலமாக வாங்கியிருந்தான். 14யோசேப்பு தன் தந்தையை அடக்கம் செய்த பின்னர், தன் சகோதரர்கள் மற்றும் தன் தந்தையை அடக்கம் செய்வதற்காக அவனுடன் வந்திருந்த ஏனைய அனைவரோடும் எகிப்துக்குத் திரும்பிப் போனான்.
யோசேப்பு உறுதியளித்தல்
15தங்கள் தந்தை மரணமடைந்த பின்னர் யோசேப்பின் சகோதரர்கள், “யோசேப்பு எங்கள்மீது பழிவாங்கும் எண்ணம்கொண்டு, நாம் யோசேப்புக்குச் செய்த தீமை அனைத்துக்கும் அவன் பதில் தீங்கு செய்தால் என்ன செய்வது?” என்று சொல்லிக் கொண்டார்கள். 16எனவே அவர்கள் யோசேப்புக்கு பின்வரும் செய்தியை அனுப்பினார்கள்: “உம்முடைய தந்தை மரணிப்பதற்கு முன் இவ்வாறு கட்டளையிட்டார்: 17‘நீங்கள் யோசேப்பிடம், “உன் சகோதரர்களின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிப்பாயாக” என்று கூறுங்கள்’ என்று சொன்னார். அதனால் உமது தந்தையின் இறைவனின் அடியவராகிய நாங்கள் செய்த பாவங்களை, இப்போது எங்களுக்குத் தயவுடன் மன்னித்திடுக” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான்.
18அப்போது யோசேப்பின் சகோதரர்கள் அவனிடம் வந்து, அவனுக்கு முன்பாகத் தரையில் விழுந்து, “நாங்கள் உமது அடிமைகள்” என்றார்கள்.
19யோசேப்பு அவர்களிடம், “பயப்பட வேண்டாம்; நான் என்ன இறைவனா? 20நீங்கள் எனக்குத் தீமை செய்ய எண்ணம் கொண்டீர்கள். ஆனால், இறைவனோ இப்போது நடந்து வருகின்றபடியே, பல உயிர்களைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அதை நன்மையாக மாற்றினார். 21ஆகையால் பயப்பட வேண்டாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையான அனைத்தையும் நான் கொடுப்பேன்” என உறுதியளித்து தயவாகப் பேசினான்.
யோசேப்பின் மரணம்
22யோசேப்பு தன் தந்தையின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயது வரை உயிர் வாழ்ந்தான். 23எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் யோசேப்பு கண்டான். அத்துடன் மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
24பின்பு யோசேப்பு தன் சகோதரர்களிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் நிச்சயமாக உங்களை சந்தித்து உதவி செய்து, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குறுதி அளித்த நாட்டுக்கு#50:24 நாட்டுக்கு – கானான் உங்களை இந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்வார்” என்றான். 25அதன் பின்னர் யோசேப்பு அவர்களிடம், “அந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல#50:25 அந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்வார். அப்போது நீங்கள் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போக வேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்மாரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டான்.
26யோசேப்பு தனது நூற்றுப்பத்தாவது வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் பழுதடையாதபடி பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 50: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល