வனாந்தர அதிசயம்மாதிரி

வனாந்தர அதிசயம்

6 ல் 6 நாள்

வனாந்தர அதிசயம்

நெகேவ் வனாந்தரம் உலகின் மிக வறண்ட நிலங்களில் ஒன்றாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் நாட்களில் அவர்கள் தோண்டிய துரவுகள் மூலம் சற்று உயிர் பெற்றிருந்தது. குறிப்பாக, ஈசாக்கு எப்போதும் பெருகிக் கொண்டே இருந்த தன் மந்தைகளையும், கால்நடைகளையும் காப்பாற்ற அநேக துரவுகளைத் தோண்டினார். அவர் ஒரே ஆண்டில் விதை விதைத்து நூறு மடங்கு பலனைக் கண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தேசத்தில் நிலவிய கடும் வறட்சியின்போது இது நடந்ததால், அது ஒரு வேளாண் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆழமாகத் தோண்டி, அவர் தனக்கும் தன் வீட்டாருக்கும் கால்நடைகளுக்கும் ஜீவன் கொடுக்கும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதை பஞ்சமோ, கானானின் வறண்ட நிலைமையோ தடுக்கவில்லை. ஈசாக்கின் வெற்றிக்கும், ஏராளமான செழிப்புக்கும் காரணம் அவருடைய முயற்சிகள் அல்ல, மாறாக வழியெங்கும் அவரோடு இருந்த தேவ பிரசன்னமே. 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நமக்கு துரவு தோண்டுவது என்றால் என்னவென்று தெரியாதிருக்கலாம், ஆனால் நாமறிந்த சிறப்பான காரியத்தைச் செய்யலாமே. நம்முடைய மிக வறண்ட மற்றும் கடினமான காலகட்டத்தில் தேவன் நம்மைச் சந்திக்கும்படி நாடலாமே. அவர் நம் அருகில்தான் இருக்கிறார். உண்மையில், நாம் நினைப்பதை விட மிக அருகில் இருக்கிறார். கிணற்றடியில் இயேசுவை சந்தித்த சமாரியப் பெண்ணுக்காகக் காத்திருந்தது போல, அவர் நமக்காகக் காத்திருக்கிறார். அவர் நம்மோடு இருக்கவும், நாம் சொல்வதைக் கேட்கவும், நம்மோடு பேசவும் ஏங்குகிறார். பிரச்சனை என்னவென்றால், நம்முடைய நவீன கால வாழ்க்கை சத்தம் நிறைந்ததாக இருக்கிறது, அந்தச் சத்தத்தை எல்லாம் அமர்த்திவிட்டு அவருடைய சத்தத்திற்கு இசைவது சாத்தியமற்றதாக இருக்கிறது என்பதுதான். வனாந்தரமோ, நம்முடைய சொந்த மூச்சு சத்தத்தையும், நம்மைச் சுற்றி இருக்கும் குழப்ப சூறாவளிகளையும், தெளிவற்ற நிலைகளையும் மட்டுமே கேட்கக் கூடிய அமைதியான ஒரு இடமாக அமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்திருந்து, ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய இயேசுவோடு ஆழமாக நெருங்குவதற்கான மிகச் சிறந்த நேரம் அது.

இந்தக் காலம் எந்த அளவுக்குக் கடினமாக இருக்குமோ, இந்தக் காலத்தில் தேவன் யார் என்னும் அதிசயத்தைக் கண்டுகொள்வது அதைவிட அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். அவர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தம் வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துவார். உலகம் அள்ளிக் கொடுக்கும் தீமையை நன்மையாக மாற்றும் பாதையில் தாம் ஒருவரே உன்னத மீட்பராக இருக்கிறார் என்பதை நிரூபிப்பார். உண்மையில் வழியே இல்லாத வனாந்தரத்தில் அவர் ஒரு வழியை உண்டாக்குவார். உங்களைப் பாதுகாத்து, உங்களுடைய மிகச்சிறு தேவையைக் கூடச் சந்திப்பார். வனாந்தரத்தினுள் நுழைவதற்கு முன்பு நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தீர்களோ அதிலிருந்து முற்றிலுமாக உங்களை மாற்றுவார் என்பது சுவாரசியமானது. புயல்கள் மற்றும் வாழ்க்கையின் கொந்தளிக்கும் கடல்களுக்கு மத்தியிலும் நீங்கள் தனித்திருக்கவும், எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கவும் விரும்புவீர்கள். உங்கள் உள்ளேயிருந்து ஒரு பலமாக வெளிப்படும் நீடிய பொறுமை உங்களுக்குள் உருவாகி இருக்கும். இயேசு தம் சீஷருக்கு வாக்குப்பண்ணின ஷாலோம் என்னும் சமாதானத்தில் நடப்பீர்கள். தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை அறிவதால் வரும் திடநம்பிக்கையினால் தலை நிமிர்ந்து நடக்கும் நீங்கள், அகில உலகத்தையும் தம் கரங்களில் தாங்கி இருக்கும் தேவனுக்கு முன்பாக அவரை ஆராதிக்கத் தாழ்த்தப்பட்ட இருதயத்தோடு காணப்படுவீர்கள்.

வனாந்தரத்தின் இந்தத் தன்மைகளையும், அது உங்களுக்கு செய்வதென்ன என்பதையும் அறிந்த நீங்கள் வனாந்தரத்திற்குள் செல்ல ஆயத்தமா? வனாந்தரத்தில் உங்களை நடத்தி, அதிலிருந்து வெளியே கொண்டு வரக் கூடிய தேவனால் அரவணைக்கப்பட நீங்கள் ஆயத்தமா? தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை!

இந்த வேதாகமத் திட்டம் கிறிஸ்டைன் ஜெயகரன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்புத்தகத்தை பின்வரும் வலைதளப் பக்கத்தில் காணலாம்: https://www.christinejayakaran.com

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தர அதிசயம்

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்