உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 44 நாள்

சனிக்கிழமை (ஸ்டீவ் தாமஸ்சன்)

சனிக்கிழமை ஒரு நீண்ட மற்றும் இருண்ட நாளாய் இருந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் உயிருக்கு பயந்து ஒளிந்தது மாத்திரமல்ல, ஆழ்ந்த துயரத்திலும் இருந்தார்கள். இயேசு போய்விட்டார். படைவீரர்கள் அன்றைக்கு முன்தினமே அவரை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு அழைத்து சென்றதை அவரது சீஷர்கள் பார்த்தனர். இப்போது சனிக்கிழமையன்று, அவர்களுடைய எஜமானர் இறந்துவிட்டார், அந்த துயரம் அவர்களை ஆழமாய் காயப்படுத்தி, முற்றிலும் வெறுமைக்குள்ளாக்கியது.

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இயேசுவே மேசியா. தங்களை எதிர்க்கும் எதிராளிகளுக்கு எதிராக இவர்களுடன் சேர்ந்து போரிட்டு வெற்றி ஈட்டு தரவேண்டும். அவர் இஸ்ரவேலை மீண்டும் ஒருமுறை ஒரு வலுவான நாடாய் மாற்றி, அந்த நீதியைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். அதற்கு நடுவே வலி, வேதனை, மற்றும் துக்கத்திற்கு இடமில்லை.

ஒருவேளை நீங்களும் இருண்ட சனிக்கிழமையன்று சீஷர்கள் உணர்ந்தது போல உணர்ந்திருக்கலாம். எனக்குத் தெரியும், ஏனென்றால் நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு பதினைந்து மாத காலத்திற்குள், ஒரு நண்பர், இரண்டு பாட்டிகள், என் மாமனார் மரித்தார்கள், நாங்கள் நடத்திய தேவாலயம் மூடப்பட்டது, ஒரு சகோதரியும், என் உடன்பிறந்தாரின் மகளும் மரிக்க இருந்த அனுபவங்களும் சேர்ந்தது. அய்யோ! நான் அங்கு இருந்தேன். என்னை சுற்றி எல்லாம் இறப்பது போல் தோன்றியது. இவையெல்லாம் நான் எதிர்பாராதவை. இயேசுவைப் பின்பற்றினால் எப்போதும் வெற்றியும் சமாதானமுமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் வலியும் விரக்தியையும் மட்டுமே உணர்ந்தேன். உண்மையில், நான் உணரக்கூடிய திறனை இழந்துவிட்டேன். இவைகளையெல்லாம் நான் உன்னதத்தோடும், கண்ணியத்தோடும் கையாண்டு, புன்னகைத்து, தலையாட்டி, தொடர்ந்து ஆண்டவரின் பேரரசாட்சியைப் பற்றிப் பேசிகொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் இல்லை. சந்தேகத்திற்கும் மறுப்பிற்கும் நடுவே என் உள்ளம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. நம் தகுதியை இழந்து விட்டோமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்டவர் என்னை எதற்கோ தண்டிக்கிறார் என்று தோன்றியது. இந்த பூமி கல்நெஞ்சம் கொண்ட ஒரு வெற்றிடம், நாம்தான் இதுநாள்வரை ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.

இதைபோன்ற உணர்வையே சீஷர்கள் அந்த இருண்ட சனிக்கிழமையன்று உணர்ந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லா நம்பிக்கையும் போய்விட்டதை போன்ற ஒரு உணர்வு. ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்ததனால்தான், இதை போலெல்லாம் நமக்கு நினைக்க தோன்றுகிறது. இயேசுவின் வழியெல்லாம் வலி, துக்கம் மற்றும் துயரம் நிறைந்ததுதான். இயேசு கைது செய்யப்பட்டு, சிலுவையில் மரிப்பதற்கு முன்பே வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டார். அவர் பால்ய பருவத்தில் உயிருக்கு பயந்து எகிப்தில் ஒளிந்திருக்கும்போதுதான் பயமென்றால் என்ன என்று உணர்ந்தார். தன் மாற்றாந்தந்தை யோசேப்பு மரித்தபோது அதன் இழப்பை உணர்ந்தார். அவர் நண்பர் லாசரு மரித்தபோது அழுதார். இஸ்ரவேலரின் கண்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு துக்கித்தார். கெத்சமனே பூங்காவில் ரத்தத்தை வியர்வையாய் சிந்தினார். தன் மூதாதையர் தாவீது கதறியது போல, இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந்த வேளையில், " என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கதறினார்.

ஆனால் இது இவ்வாறாகத்தான் இருக்கும் என்று இயேசு நமக்கு கூறினார். யோவானின் நிருபத்தின்படி, கனிகொடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிற கொடி எதுவோ அதை பிதா கிளைநறுக்குகிறார் (யோவான் 15:1-7). நறுக்கப்படும்போது வலிக்கும். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதிகள் வெட்டப்படுவது மனதிற்குகந்த ஒரு இனிமையான காரியமல்ல. உங்கள் உடற்பகுதிகள் கத்திரிகோலால் பதம்பார்க்கப்படுவது ஒரு மகிழ்வுக்குரிய அனுபவம் அல்ல. ஆனால் அந்த உயரிய தோட்டக்காரருக்கு தெரியும், களைகள் வெட்டப்பட்டாலொழிய, ஜீவன் இல்லையென்று.

அதுவே இயேசுவின் வழி - ஆண்டவரின் அன்பும் இரக்கமுமே அந்த வழி. வலிகளின் மூலமாகவே நம்மை ஆண்டவர் சுத்திகரிக்கிறார். இதை கற்றுக்கொண்ட சீஷர்கள், எல்லா ஆதிதிருச்சபைகளுக்கும் இதையே கடிதங்கள் மூலம் உணர்த்தினார்கள். பல போராட்டங்களுக்கு ஊடாக நாம் செல்லும்போது, அவைகளை மகிழ்வுக்குரிய நிகழ்வுகளாய் இயேசு கருத சொல்கிறார், ஏனெனில் முடிவில் அந்த அனுபவங்கள்தான் நம்மை பூரணப்படுத்தி, உறுதியாக்கியிருக்கும். அக்கினியானது தங்கத்தை புடமிடுவது போல போராட்டங்கள் நம் இருதயத்தைப் புடமிடும் என்று பேதுரு நமக்கு போதித்தார். தன் போராட்டங்களை விவரிக்கும் பவுல் தன் விசுவாசத்தின் நிமித்தம் துன்புறுத்தல்களுக்கு ஊடாக சென்று அதின் மதில்களை உடைத்தெறிந்து, பின்பு அதன் இறுதிக்கு ஒரேயொரு வார்த்தைதான் அழைத்து சென்றது என்கிறார், அந்த வார்த்தை - நம்பிக்கை.

சனிக்கிழமை ஒருவழியாக முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை, சீஷர்கள் நிஜத்தை நேருக்குநேர் சந்திக்கும்வண்ணமாக, இன்னும் ஒரு பெரிய துக்ககரமான காரியத்தை காணவேண்டியதாய் இருந்தது. அவர்கள் நம்பிக்கையை கண்டார்கள். இயேசு வலி மற்றும் வேதனைக்கு ஊடாக சென்ற இயேசு மீண்டுமொருமுறை உயிரோடு அந்தப்பக்கம் வெளியே வந்தார். சனிக்கிழமைகள் வரும். ஒன்றை மட்டும் நீங்கள் உறுதியாக நம்பலாம். அவைகள் வலிமிகுந்தவைகளாக இருக்கும். அவைகள் ஒரு நாள்மட்டும் நீடிக்கலாம்; அல்லது இருபது மாதங்கள் நீடிக்கலாம். அவைகள் வரும்போது, நினைவில் கொள்ளுங்கள் - சனிக்கிழமையை பார்க்காமல் நாம் ஞாயிற்றுக்கிழமையை காணவே முடியாது. இன்றைக்கும், என்றைக்கும், சதாகாலங்களிலும் இயேசுவே நம் நம்பிக்கை. நாம் துக்கப்பட்டாலும், அது நம்பிக்கையோடு கூடியதாய் இருக்கட்டும்.

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்