உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 15 நாள்

ஜான் காஸ்சியன் (எகிப்து, 365-435)

இது நமது மூதாதையரால் நமக்கு வழங்கப்பட்ட ஒன்று; நாம் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள ஒரு சில ஆத்துமாக்களுக்கு மட்டும் கையளிக்கிறோம்:

கர்த்தரைப் பற்றின சிந்தையை எப்போதும் மனதில் தங்க வைக்க இந்த தெய்வபக்திக்குரிய சூத்திரத்தை முற்றிலுமாய் பற்றிக்கொள்ள வேண்டும்: "தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்" [சங்கீதம் 70:1]

முழு வேதாகமத்திலிருந்து இந்த வசனம் ஒரு சாதனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு ஒரு நல்ல காரணம் இல்லாமல் இல்லை. இதில் மனித இயல்பால் என்ன கூடுமோ அதற்குரிய அனைத்து உணர்ச்சிகளும் அடக்கமாகிறது.. இதை எல்லா நிலையிலும் ஏற்றுக்கொண்டு எல்லா சோதனைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆபத்துக்காலத்தில் கர்த்தரை நோக்கி முறையிடும் அபயமும் இதில் அடங்கும். பக்தியுடன் செய்யும் பாவ அறிக்கையின் தாழ்மையை இது வெளிப்படுத்துகிறது. முடிவே இல்லாத கவலையையும் பயத்தையும் பற்றிய விழிப்புணர்வும் இதில் அடங்கியுள்ளது. நமது இயலாமையையும், நாம் கேட்கப் படுவோம் என்ற நம்பிக்கையையும், எங்கும் எவ்விடத்திலும் உதவி வரும் என்ற நிச்சயத்தையும் இது தெரிவிக்கிறது. ஒருவன் தனது பாதுகாவலரை எப்போதும் கூப்பிட்டுக் கொண்டே இருப்பானானால் அவன் தன் அருகிலேயே அவரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இது அன்பினாலும் இரக்கத்தினாலும் நிறைந்த ஒரு குரலாகும். இது, தனது எதிரிகள் தனக்கு இட்டிருக்கும் கண்ணியை கவனித்துவிட்ட ஒருவனின் திகில் நிறைந்த அழுகையும், தன் பாதுகாவலர் வராவிட்டால் தப்பிக்க முடியாதபடி முற்றுகையிடப்பட்டிருக்கும் ஒருவனின் கூக்குரலுமாகும்.இந்த சிறிய வசனமானது, பிசாசுகளின் கடுந்தாக்குதலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு அரணிப்பான கோட்டையாகும். இது உட்புக முடியாத மார்க்கவசமும் உறுதியான கேடகமும் ஆகும். எவ்வித கடுந்துயரிலும், மனக்கிலேசத்திலும், மனசோர்விலும் இந்த வசனம் நமது இரட்சிப்பைக் குறித்த நம்பிக்கையை இழக்காதபடி பாதுகாக்கிறது. ஏனென்றால் இது நாம் கூப்பிடும் போது கேட்கிறவரும், நம் போராட்டத்தையெல்லாம் காண்கிறவரும், தம்மை நோக்கி ஜெபிக்கிறவர்களுக்கு அருகாமையிலேயே இருக்கிறவருமான கர்த்தரை வெளிப்படுத்துகிறது. நம் ஆவியில் எல்லாம் சீராக இருந்தால், மனதில் சந்தோஷம் இருந்தால், இந்த வசனம் நம்மை பெருமைப்படாதவாறு எச்சரிக்கும்; கர்த்தரின் துணையின்றி இத்தகைய நல்ல நிலைமையில் இருக்கவோ அதைப் பாதுகாக்கவோ முடியாதென்பதை எடுத்துக் கூறி, கர்த்தரின் தொடர்ந்த உதவிக்கு ஜெபிக்கும் ஜெபமாகவும் அமைகிறது. இந்த சிறிய வசனம் எல்லா வித சூழ்நிலைகளிலும் எல்லாருக்கும் அவசிய தேவையாக விளங்குகிறது. எல்லாவற்றிலும் உதவி தேவைப்படும் ஒருவனுக்கு, இக்கட்டும் பாடும் நிறைந்த காலத்தில் மட்டுமல்லாது சந்தோஷமான, வளமிக்க காலகட்டங்களிலும் கர்த்தரின் உதவி தேவை என்பதை எடுத்துரைக்கிறது. கர்த்தர் நம்மை இன்னல் நேரங்களில் விடுவித்து நம்மை சந்தோஷமடையச் செய்கிறார் என்றும்; எவ்வாறினும் அவர் உதவியின்றி, பெலவீனராகிய நாம் பிழைக்க முடியாதென்பதையும் அவன் அறிவான்.

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்