YouVersion Logo
Search Icon

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!Sample

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

DAY 3 OF 6

“தனிநபர் ஜெபம்”

நண்பர்களோடு, குடும்பத்தினரோடு அல்லது உண்வு உண்பதற்கு முன்னர்   ஜெபிப்பது, பொது அரங்கில் செய்யும் சிறப்பான ஜெபங்கள். ஆனால், குழு ஜெபங்கள் தவிர, தனியான – நீங்களும்   தேவனும் மட்டுமே உறவாடும் - ஜெபத்தை ஏறெடுக்கவும் நம்மிடம் தேவன்   எதிர்பார்க்கிறார். ஜெபங்களில் தனிமையைப்பற்றி இயேசு கீழ்க்கண்டவாறு   சொல்லுகிறார்:

“நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்”- மத்தேயு 6:6

பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் ஜெபிக்கும்படி இயேசு   நமக்குச் சொல்லும்போது, நமது வாழ்வில் தேவன் நெருக்கமாகவும், விசேஷித்த தனிக்கவனத்தோடும் இடைப்படுகிறார் என்று குறிப்பிடுகிறார்.   நமது முகமுகமான உரையாடல் மூலமாக தேவனோடுள்ள நம் உறவின் ஆழத்தை அதிகரிக்கத் தேவன்   விரும்புகிறார். நீங்கள் அவரோடு தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள எடுக்கும்   தீர்மானத்தை அவர் கவனித்து, உங்களை ஆசீர்வதிக்கவும், பரிசளிக்கவும் வாக்குக் கொடுக்கிறார்.

நமக்குப் பிரியமானவர்களோடு நாம் கொண்டுள்ள உறவைப்போல, அவரோடு நாம் கொண்டுள்ள உறவும் வெளிப்படையானதாய்,   திறந்த மனதோடு இருக்க தேவன் விரும்புகிறார். ஜெபங்கள் மனனம் செய்து வார்த்தைக்கு   வார்த்தை ஒப்புவிப்பது நல்ல பழக்கம்தான்; ஆனாலும், மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதை விட நமது உண்மையான நிலையை நமது சொந்த   வார்த்தைகளில் பேசுவதையே அவர் அதிகம் விரும்புகிறார்.

நமது ஜெபங்களில்   உண்மைத்துவத்தை இயேசு இவ்வாறு கூறுகிறார்:

“அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்” – மத்தேயு 6:7-8

நமது தேவைகளும், ஆசைகளும் நாம் சொல்வதற்கு முன்னரே தேவனுக்குத்   தெரியுமென்றாலும், நமது நன்மையையே தேவன் தமது மனதில்   கொண்டுள்ளார் என்று நினைவுகூர்ந்து எதிர்பார்ப்போடும், உண்மையோடும் அவரிடத்தில் நமது வேண்டுதல்களைத் தெரிவிக்க   வேண்டும் என அவர் விரும்புகிறார். ஒவ்வொரு ஜெபத்துக்கும்   அன்போடும், உண்மையோடும் பதிலளிக்க ஆவல் கொண்டுள்ளார். 

தரித்திருத்தலும், தொடர்ந்தேர்ச்சியாக ஜெபிப்பதும் தனிஜெபத்தின் இன்னொரு   முக்கிய அம்சமாகும். நாம் ஏற்கனவே ஏறெடுத்த வேண்டுதலையே திரும்பவும்   ஏறெடுத்தாலும் தேவனுக்கு சலிக்காது. ஊக்கத்தோடு நாம் ஜெபிக்க   வேண்டும் என்பதை இயேசு கீழ்க்கண்டவாறு கூறினார்: 

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்”- மத்தேயு 7:7-8

கிறிஸ்தவ வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமானால், தேவனோடு உரையாட தினசரி நேரம் ஒதுக்குவது முக்கியமானது. ஒவ்வொரு நாளும்   உங்களது கவனம் சிதறாமல் இருக்கிற நேரத்தைத் தெரிந்துகொண்டு, தேவன் கையில் ஸ்டாப் வாட்ச் வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு நேரம்   ஜெபிக்கிறீர்கள் என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போன்ற மனநிலையில்   இல்லாமல், தன்னார்வத்தோடு ஜெபியுங்கள். அவர்   அப்படியெல்லாம் கணக்குப் பார்ப்பதில்லை. அவர் உங்களை விரும்புகிறார். தனிமை, உண்மை மற்றும் (ஜெபத்தில்) நிலைத்திருத்தல் –   இந்த மூன்று அம்சங்களும் தேவனோடு நீங்கள் செலவழிக்கும் தனியான ஜெபவேளைகளில்   முக்கியத்தேவை; இவைகளே, தேவனோடு நெருக்கமான உறவு கொள்ள   உதவும். நீங்கள் இந்த அபூர்வமான ஜெபவேளையை அனுபவிப்பீர்கள்’ முன் எப்போதும் இல்லாதவகையில் அவரைச் சார்ந்து கொள்ளுவீர்கள். 

Day 2Day 4

About this Plan

உங்களிடத்தில் ஒரு ஜெபம் உண்டு!

வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த   உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide   to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

More