ஆதியாகமம் 41

41
பார்வோனின் கனவு
1இரண்டு வருடங்கள் முழுமையாக நிறைவடைந்த பின், பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதி அருகே நின்று கொண்டிருந்தபோது, 2இதோ! கொழுத்தவையும் செழிப்பானவையுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே அவை மேய்ந்து கொண்டிருந்தன. 3அவற்றின் பின்னால் இதோ! அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்றைய பசுக்களின் அருகில் நின்றன. 4பின்பு அவலட்சணமும் மெலிந்ததுமான ஏழு பசுக்கள், கொழுத்ததும் செழிப்பானதுமான அந்த ஏழு பசுக்களை விழுங்கின. அப்போது பார்வோன் நித்திரையிலிருந்து விழித்துக் கொண்டான்.
5அவன் மீண்டும் நித்திரை செய்தபோது, இரண்டாவது கனவைக் கண்டான். அக்கனவில் இதோ! நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒற்றைத் தாளிலிருந்து வளர்ந்து வந்தன. 6பின்பு மெல்லியதும், கீழ்க்காற்றினால் கருகிப் போனதுமான ஏழு நெற்கதிர்கள் முளைத்து வந்தன. 7அந்த ஏழு மெலிந்த நெற்கதிர்களும் நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்களையும் விழுங்கின. பார்வோன் விழித்தெழுந்தபோது, இதோ! அது ஒரு கனவு எனப் புரிந்துகொண்டான்.
8மறுநாள் காலையில் பார்வோனுடைய சிந்தனை குழம்பியது. அதனால் அவன் எகிப்திலுள்ள குறிசொல்கின்ற மதகுருக்கள், ஞானிகள் எல்லோரையும் வரவழைத்து, தான் கண்ட கனவுகளை அவர்களுக்குச் சொன்னான். ஆனால் அவர்கள் ஒருவராலும் அக்கனவுகளுக்கான அர்த்தத்தைக் கூற முடியவில்லை.
9அப்போது பானம் பரிமாறுவோரின் தலைவன் பார்வோனிடம், “நான் செய்த தவறுகள் இன்று எனது நினைவுக்கு வருகின்றன. 10பார்வோன் தமது பணியாட்கள்மீது கோபம்கொண்டு, ஒருமுறை என்னையும் அப்பம் சுடுவோரின் தலைவனையும், மெய்க்காவலர்களின் அதிகாரியின் வீட்டில் சிறையில் வைத்தபோது, 11நாங்கள் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டோம். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அர்த்தமுடையதாய் இருந்தன. 12அங்கே மெய்க்காவலர்களின் அதிகாரிக்குப் பணியாளனாயிருந்த எபிரேய வாலிபன் ஒருவனும் எங்களோடு இருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளைச் சொன்னபோது, அவன் எங்கள் ஒவ்வொருவருடைய கனவின் அர்த்தத்தைச் சொல்லி, அவற்றை எங்களுக்கு விளக்கிக் கூறினான். 13அவன் எங்களுக்குச் சொன்னவாறே எல்லாம் நிறைவேறின: நான் மறுபடியும் எனது பதவியில் நியமிக்கப்பட்டேன், மற்றவனோ தூக்கிலிடப்பட்டான்” என்றான்.
14எனவே பார்வோன், யோசேப்பை வரவழைக்க ஆளனுப்பினான்; அவன் நிலவறையிலிருந்து உடனே வெளியே கொண்டுவரப்பட்டான். அவன் சவரம் செய்து, உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோன் முன்பாக வந்து நின்றான்.
15பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்குரிய அர்த்தத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. யாராவது உனக்கு ஒரு கனவைச் சொன்னால், நீ அதற்கு அர்த்தம் கூறுவாய் என நான் கேள்விப்பட்டேன்” என்றான்.
16அதற்கு யோசேப்பு பார்வோனிடம், “அது எனது திறனுக்கு அப்பாற்பட்டது, ஆனால் பார்வோனுக்கு நிம்மதி தருகின்ற பதிலை இறைவன் தருவார்” என்றான்.
17பார்வோன் யோசேப்பிடம், “எனது கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். 18அப்போது இதோ! கொழுத்தவையும் செழிப்பானவையுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி, நாணல்களுக்கு இடையே அவை மேய்ந்து கொண்டிருந்தன. 19அவற்றின் பின்னால் இதோ! எலும்பும் தோலுமான, மெலிந்த அவலட்சணமான வேறு ஏழு பசுக்கள் நதியிலிருந்து வெளியேறின. இதைப் போன்ற அவலட்சணமான பசுக்களை எகிப்து நாடெங்கும் நான் ஒருபோதும் கண்டதில்லை. 20முதலில் வெளியேறிய அந்த கொழுத்த ஏழு பசுக்களை, மெலிந்த அவலட்சணமான அந்த ஏழு பசுக்கள் விழுங்கின. 21ஆனால் அவை இவற்றை விழுங்கிய பின்னரும்கூட, விழுங்கிவிட்டது போல் தெரியவே இல்லை; அவை முன்பு போலவே அவலட்சணமாய் இருந்தன. அதன் பின்னர் நான் நித்திரையிலிருந்து விழித்துக்கொண்டேன்.
22“நான், நன்கு விளைந்து முற்றிய ஏழு நெற்கதிர்கள் ஒற்றைத் தாளில் ஓங்கி வளர்ந்ததை அடுத்த கனவில் கண்டேன். 23அதன் பின்னர் வாடிய, மெலிந்த, கீழ்க்காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் முளைத்து வந்தன. 24இந்த மெலிந்த ஏழு நெற்கதிர்களும், மற்றைய ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கின. நான் இந்தக் கனவுகளை குறிசொல்கின்ற மதகுருக்களிடம் சொன்னேன். ஆனால் அவற்றின் அர்த்தத்தை எவராலும் சொல்ல முடியவில்லை” என்றான்.
25அப்போது யோசேப்பு, “பார்வோனின் அந்த இரு கனவுகளுமே ஒன்றுதான். இறைவன் செய்யப் போவதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். 26நல்ல ஏழு பசுக்களும் ஏழு வருடங்கள், நல்ல ஏழு கதிர்களும் ஏழு வருடங்கள்; இந்த இரண்டு கனவுகளின் அர்த்தமும் ஒன்றுதான். 27அவற்றின்பின் வந்த மெலிந்த அவலட்சணமுள்ள ஏழு பசுக்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள். அவ்வாறே கீழ்க்காற்றினால் கருகிப்போன பயனற்ற ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்கள்.
28“பார்வோனுக்கு நான் சொன்னதைப் போன்று, இறைவன் தாம் செய்யப் போவதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். 29எகிப்து நாடெங்கும் நிறைவான விளைச்சலுள்ள ஏழு வருடங்கள் வரப்போகின்றன. 30ஆனால் அதைத் தொடர்ந்து பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் வரும். அப்போது எகிப்தின் நிறைவான வளம் மறக்கப்படும், எகிப்து நாடு முழுவதையும் பஞ்சம் பாழாக்கும். 31முன்பிருந்த அந்த நிறைவான காலம் நினைக்கப்பட மாட்டாது. ஏனெனில் அதற்குப் பின்னர் வரும் பஞ்சமானது மிகவும் கொடியதாக இருக்கும். 32இது இறைவனால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டு இறைவனால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதால், இறைவன் இவற்றைப் பார்வோனுக்கு இரண்டு விதமான கனவுகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
33“ஆதலால் பார்வோன் விவேகமும் ஞானமும் உள்ள ஒரு ஆளைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக! 34அத்துடன் பார்வோன் செய்யவேண்டியது இதுவே: ஏழு வருட வளமிக்க காலங்களில் எகிப்தின் அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துச் சேகரித்து வைப்பதற்காக, நாட்டின் நிலங்களுக்கு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் நியமிப்பாராக! 35வரப்போகின்ற வளமான வருடங்களில் விளையும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் அவர்கள் சேகரித்து, பார்வோனின் அதிகாரத்தின்கீழ் அந்தத் தானியங்களை உணவுக்காகப் பட்டணங்களில் களஞ்சியப்படுத்திப் பாதுகாக்க வேண்டும். 36எகிப்து முழுவதிலும் வரவிருக்கும் அந்த ஏழு வருட பஞ்சகாலத்தில் நாடு அழிந்துபோகாதபடி, பஞ்சகாலத்தில் பயன்படுத்துவதற்காக அந்த உணவுப் பொருட்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்” என்றான்.
37யோசேப்பினால் முன்மொழியப்பட்ட#41:37 யோசேப்பினால் முன்மொழியப்பட்ட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டது. அத்திட்டம் பார்வோனுக்கும் அவனுடைய அரச அதிகாரிகள் அனைவருக்கும் நலமானதாகக் காணப்பட்டது. 38பார்வோன் தன்னுடைய அரச அதிகாரிகளிடம், “இறைவனின் ஆவியையுடைய இவனைப் போன்ற ஒருவனை நாம் காணக்கூடுமோ?” என்று கேட்டான்.
39பின்பு பார்வோன் யோசேப்பிடம், “இவை எல்லாவற்றையும் இறைவன் உனக்கு தெரிவித்திருப்பதால், உன்னைப் போன்ற விவேகமும் ஞானமும் உள்ளவன் வேறொருவனும் இல்லை. 40எனவே, நீ என் அரண்மனையின் அதிகாரியாக இருப்பாயாக! என் மக்கள் யாவரும் உன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். என் அரியணையில் மட்டுமே நான் உன்னிலும் பெரியவனாயிருப்பேன்” என்றான்.
யோசேப்பின் உயர்வு
41மேலும் பார்வோன் யோசேப்பிடம், “இத்தால், உன்னை எகிப்து நாடு முழுவதற்கும் பொறுப்பதிகாரியாக நியமிக்கின்றேன்” என்றான். 42பின்பு பார்வோன் தன் விரலிலிருந்த தனது முத்திரை மோதிரத்தைக் கழற்றி, யோசேப்பின் விரலில் அணிவித்தான். அவன் சிறந்த மென்பட்டு அங்கியை அவனுக்கு அணிவித்து, கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியையும் சூட்டினான். 43அதிகாரத்தில் தனக்கு அடுத்தவனாக அவனை இரதத்தில் பவனிவரச் செய்தான். அவனுக்கு முன்பாகச் சென்ற ஆட்கள், “முழந்தாளிட்டுப் பணியுங்கள்!” என்று சத்தமாய் அறிவித்தார்கள். இவ்வாறு பார்வோன் அவனை எகிப்து நாடு முழுவதற்கும் அதிகாரியாக நியமித்தான்.
44மேலும் பார்வோன் யோசேப்பிடம், “நான் பார்வோன்; ஆனாலும் எகிப்திலுள்ள யாரும் உனது உத்தரவின்றி கையையோ காலையோ உயர்த்தக் கூடாது” என்றான். 45பார்வோன், யோசேப்பின் பெயரை சாப்நாத்-பன்னேயா#41:45 சாப்நாத்-பன்னேயா – இந்த எகிப்திய பெயரின் அர்த்தம் இந்த பெயரை உடைய இறைவன் பேசினார், அவர் உயிருள்ளவர். என மாற்றி, ஓன் என்னும் பட்டணத்தின் மதகுருவான போத்திபிரா என்பவனின் மகளாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். அதன் பின்னர் யோசேப்பு, எகிப்து நாடு முழுவதையும் பார்வையிடச் சென்றான்.
46எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு யோசேப்பு பணிபுரியத் தொடங்கியபோது, அவன் முப்பது வயதுடையவனாய் இருந்தான். யோசேப்பு பார்வோனிடமிருந்து புறப்பட்டுப் போய், எகிப்து முழுவதும் சுற்றிப் பயணம் செய்தான். 47செழிப்பான ஏழு வருடங்களில், நாடு அளவுக்கதிகமான விளைச்சலைக் கொடுத்தது. 48யோசேப்பு, செழிப்பான அந்த ஏழு வருடங்களில் எகிப்தில் விளைந்த உணவுப் பொருட்களை பட்டணங்களில் சேமித்து வைத்தான். ஒவ்வொரு பட்டணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள வயல்களில் விளைந்த உணவுப் பொருட்களை சேமித்து வைத்தான். 49யோசேப்பு தானியத்தைக் கடலின் மணலைப் போன்று பெருமளவாகச் சேர்த்து வைத்தான். அது கணக்கிட முடியாதபடி மிக அதிகமாக இருந்தபடியால், அதன்பின்பு அவற்றைப் பதிவு செய்வதை அவன் நிறுத்திவிட்டான்.
50பஞ்சமுள்ள வருடங்கள் தொடங்குவதற்கு முன்னர் யோசேப்புக்கும் ஓன் பட்டணத்தின் மதகுருவாகிய போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்துக்கும் இரண்டு மகன்மார் பிறந்தார்கள். 51அப்பொழுது யோசேப்பு, “இறைவன் என் தொல்லைகளையும், என் தந்தையின் வீட்டாரையும் மறக்கச் செய்தார்” என்று சொல்லி, தன் மூத்த மகனுக்கு மனாசே#41:51 மனாசே – எபிரேய மொழியில், மறத்தல் என்று பொருள். எனப் பெயர் சூட்டினான். 52“நான் துன்பப்பட்ட நாட்டிலே இறைவன் என்னை செழிப்படையச் செய்தார்” என்று சொல்லி, தன் இளைய மகனுக்கு எப்பிராயீம்#41:52 எப்பிராயீம் – எபிரேய மொழியில், இரு மடங்கு பெருகுதல் என்று பொருள். எனப் பெயர் சூட்டினான்.
53எகிப்தின் செழிப்பான வளம் நிறைந்த ஏழு வருடங்களும் முடிவுற்றன. 54அதன் பின்னர் யோசேப்பு கூறியிருந்ததைப் போலவே, பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்கள் ஆரம்பமாகின. மற்றைய அனைத்து நாடுகளிலும் பஞ்சம் உண்டானது; ஆனால் எகிப்து முழுவதிலும் உணவு இருந்தது. 55எகிப்தியர் எல்லோரும் பசிபட்டினியை அனுபவிக்கத் தொடங்கியபோது, பார்வோனிடம் உணவு கேட்டு அழுதார்கள். பார்வோன் அனைத்து எகிப்தியரிடமும், “நீங்கள் யோசேப்பிடம் போய், அவன் சொல்கின்றபடி செய்யுங்கள்” என்றான்.
56எகிப்து முழுவதிலும் பஞ்சம் பரவியபோது, யோசேப்பு எல்லாக் களஞ்சியங்களையும் திறந்து, தானியத்தை எகிப்தியருக்கு விற்றான். ஏனெனில், எகிப்து முழுவதிலும் பஞ்சமானது மிகக் கடுமையாக இருந்தது. 57உலகெங்கும் பஞ்சம் கொடியதாய் இருந்தபடியால், அனைத்து நாட்டவரும் யோசேப்பிடம் தானியம் வாங்குவதற்காக எகிப்துக்கு வந்தார்கள்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 41: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល