ஆதியாகமம் 40
40
பானம் பரிமாறுகின்றவன் மற்றும் அப்பம் சுடுகின்றவன்
1சில காலம் சென்ற பின்னர், எகிப்திய அரசனுக்கு பானம் பரிமாறுகின்றவனும், அப்பம் சுடுகின்றவனும் ஆகிய இருவரும் தங்கள் எஜமானாகிய எகிப்திய அரசனுக்கு எதிராகத் தவறு செய்தார்கள். 2ஆதலால் பானம் பரிமாறுவோருக்குத் தலைவனும் அப்பம் சுடுவோருக்குத் தலைவனுமாயிருந்த, அந்த இரு அதிகாரிகளின் மீதும் பார்வோன், கோபமடைந்து, 3யோசேப்பு அடைக்கப்பட்டிருந்த அரசரின் மெய்க்காவலர்களின் தலைவனின் வீட்டிலுள்ள இடத்தில் அவர்களையும் அடைத்து வைத்தான். 4அவர்களுக்குப் பணியாளனாக இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வேலை, மெய்க்காவலர்களின் தலைவனால் யோசேப்புக்கு ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் பல காலமாக அங்கே சிறைக்காவலில் இருந்தபோது, 5எகிப்திய அரசனுக்குப் பானம் பரிமாறுவோரின் தலைவனும், அப்பம் சுடுவோரின் தலைவனுமாகிய இருவரும் அந்தச் சிறையில் ஒரே இரவில் கனவு கண்டார்கள்; இருவரின் கனவுகளும் வெவ்வேறு அர்த்தமுடையனவாக இருந்தன.
6மறுநாள் காலை யோசேப்பு அவர்களிடம் வந்தபோது, அவர்கள் இருவரும் கலங்கிப் போயிருப்பதைக் கண்டான். 7அவன் தன் எஜமானது வீட்டிலே, தன்னோடு காவலில் அடைக்கப்பட்டிருந்த பார்வோனின் பணியாளர்களான அந்த அதிகாரிகளிடம், “நீங்கள் இன்று ஏன் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுகின்றீர்கள்?” எனக் கேட்டான்.
8அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு என்ன அர்த்தம் என்பதைக் கூறுவதற்கு ஒருவருமில்லை” என்றார்கள்.
அதற்கு யோசேப்பு, “அர்த்தம் சொல்வது இறைவனுக்கு உரியதல்லவா? நீங்கள் கண்ட கனவுகளைச் சொல்லுங்கள்” என்றான்.
9எனவே பானம் பரிமாறுவோருக்குத் தலைவனாயிருந்தவன் தன் கனவை யோசேப்புக்குச் சொன்னான். “என் கனவில் எனக்கு முன்பாக ஒரு திராட்சைக்கொடி இருப்பதைக் கண்டேன்; 10அக்கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்த்தவுடனே பூப்பூத்து, அதன் குலைகள் பழுத்துத் திராட்சைப்பழங்களாகின. 11பார்வோனுடைய பாத்திரம் என் கையில் இருந்தது; நான் திராட்சைப்பழங்களை எடுத்து, அவற்றை அப்பாத்திரத்தில் பிழிந்து, பார்வோனின் கையிலே கொடுத்தேன்” என்றான்.
12அப்போது யோசேப்பு அவனிடம், “கனவின் அர்த்தம் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாகும். 13பார்வோன் மூன்று நாட்களுக்குள் உம்மை உயர்த்தி,#40:13 உம்மை உயர்த்தி – எபிரெய மொழியில் உன் தலையை உயர்த்தி என்று உள்ளது. உம்முடைய முன்னைய பதவியில் உம்மை அமர்த்துவார்; பானம் பரிமாறுபவராக நீர் இருந்தபோது முன்னர் செய்தவாறே, பார்வோனின் பாத்திரத்தை அவர் கையில் கொடுப்பீர். 14அந்தவிதமாக, நீர் நல்ல நிலையில் இருக்கும்போது, என்னை நினைவில் வைத்து, எனக்குத் தயவு காட்டுவீராக; பார்வோனிடம் என்னைப்பற்றிச் சொல்லி, இந்தச் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்குவீராக! 15ஏனெனில், நான் எபிரேயருடைய நாட்டிலிருந்து பலவந்தமாய் இங்கு கொண்டு வரப்பட்டேன், இங்கேயும் இந்தப் படுகுழியில் போடப்படுவதற்கு ஏதுவான குற்றம் எதையும் நான் செய்யவில்லை” என்றான்.
16யோசேப்பு அவனுக்குத் தகுந்த அர்த்தத்தைச் சொன்னதும், அதைக் கேட்ட அப்பம் சுடுவோரின் தலைவன் யோசேப்பிடம், “நானும் ஒரு கனவு கண்டேன்: என் தலையில் மூன்று அப்பக் கூடைகள் இருந்தன. 17மேலேயிருந்த கூடையில் பார்வோனுக்காகத் தயாரிக்கப்பட்ட பல வகையான உணவுகள் இருந்தன. ஆனால் பறவைகள் என் தலையின் மேலிருந்த கூடையிலிருந்து அப்பங்களைத் தின்றன” என்றான்.
18அதற்கு யோசேப்பு, “உன் கனவுக்குரிய அர்த்தம் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாட்களாகும். 19இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உன் தலையைத் துண்டித்து,#40:19 உன் தலையைத் துண்டித்து – எபிரெய மொழியில் உன்னிடமிருந்து உன் தலையை உயர்த்தி என்று உள்ளது. 13 ஆம் வசனத்தைப் பார்க்கவும். உன்னை மரத்திலே தூக்கிலிடுவான். பறவைகள் உன் சதையைக் கொத்தி உண்ணும்” என்றான்.
20மூன்றாம் நாள் வந்தது, அது பார்வோனின் பிறந்த நாள். எனவே அவன் தன் அதிகாரிகளுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தான். அப்போது அவன், பானம் பரிமாறுவோரின் தலைவனையும், அப்பம் சுடுகின்றவர்களின் தலைவனையும் வெளியே கொண்டுவந்து, அதிகாரிகளின் முன்பாக நிறுத்தினான். 21அவன் பானம் பரிமாறுவோரின் தலைவனை மீண்டும் அவனுடைய பதவியில் அமர்த்த, அவன் முன்போலவே பார்வோனுக்குப் பானம் பரிமாறினான். 22ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படி, அப்பம் சுடுகின்றவர்களின் தலைவனை பார்வோன் தூக்கிலிட்டான்.
23ஆனாலும், பானம் பரிமாறுவோரின் தலைவன் யோசேப்பை நினைவில் கொள்ளவில்லை; அவனை மறந்து போனான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 40: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.