ஆதியாகமம் 42

42
யோசேப்பின் சகோதரர்கள்
1எகிப்திலே தானியம் உள்ளதாக யாக்கோபு அறிந்துகொண்டபோது அவன் தனது மகன்மாரிடம், “நீங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பதேன்? 2இதோ! எகிப்திலே தானியம் உள்ளதாகக் கேள்விப்படுகின்றேன். நாம் மரணமடையாமல் உயிர் வாழ்வதற்காக, அங்கே இறங்கிச் சென்று நமக்குத் தானியம் வாங்கி வாருங்கள்” என்றான்.
3அப்போது யோசேப்பின் மூத்த சகோதரர்களான பத்து பேரும் தானியம் வாங்குவதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள். 4ஆனால் யோசேப்பின் தம்பியான பென்யமீனுக்கு ஏதாவது விபத்து நேரிடலாம் எனப் பயந்து, யாக்கோபு அவனை அவர்களோடு அனுப்பவில்லை. 5கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதனால், தானியம் வாங்குவதற்காக எகிப்துக்கு வந்த மற்றவர்களுடன் இஸ்ரயேலின் மகன்மாரும் இருந்தார்கள்.
6இப்போது யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநனாக, மக்கள் யாவருக்கும் தானியம் விற்கும் அதிகாரத்தை உடையவனாக இருந்தான். யோசேப்பின் சகோதரர்கள் அங்கு வந்ததும், தரைவரை தலைதாழ்த்தி அவனை வணங்கினார்கள். 7யோசேப்பு தனது அண்ணன்மாரைக் கண்டவுடன், அவர்களை அடையாளம் கண்டுகொண்டான். ஆனாலும் அவர்களை அறியாத ஒருவனைப் போன்று நடந்துகொண்டு, அவன் அவர்களுடன் கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கானான் நாட்டிலிருந்து வந்திருக்கின்றோம்” என்றார்கள்.
8யோசேப்பு தன்னுடைய அண்ணன்மாரை அடையாளம் கண்டுகொண்டாலும் அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை. 9பின்னர் யோசேப்பு, தான் முன்னர் அவர்களைக் குறித்துக் கண்ட கனவுகளை நினைவுகூர்ந்து தன் சகோதரர்களிடம், “நீங்கள் உளவாளிகள்! எங்கள் நாட்டில் பாதுகாப்பற்ற பலவீனமான இடம் எங்கே இருக்கின்றது என்பதைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள்” என்றான்.
10அதற்கு அவர்கள், “இல்லை ஆண்டவனே, உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக இங்கு வந்திருக்கின்றோம். 11நாங்கள் எல்லோரும் ஒரே தந்தையின் பிள்ளைகள். உமது அடியவர்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல” என்றார்கள்.
12அதற்கு அவன், “இல்லை! எங்கள் நாட்டில் பாதுகாப்பற்ற பலவீனமான இடம் எது எனப் பார்க்கவே நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றான்.
13அதற்கு அவர்கள், “உம்முடைய அடியவர்களாகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் மகன்மார். கடைசி மகன் இப்போது எங்கள் தந்தையோடு இருக்கின்றான், மற்றையவன் இப்போது இல்லை” என்றார்கள்.
14யோசேப்பு அவர்களிடம், “நான் சொன்னபடி நீங்கள் உளவாளிகளே! 15நீங்கள் பரிசோதிக்கப்படப் போகின்றீர்கள். அதற்கமைய, பார்வோனின் வாழ்வுமீது ஆணையாகக் கட்டளையிடுகின்றேன்: உங்கள் இளைய சகோதரன் இங்கு வந்தாலன்றி, நீங்கள் இந்த இடத்தைவிட்டுப் போக மாட்டீர்கள். 16உங்கள் இளைய சகோதரனை அழைத்து வர உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; அதுவரை மற்றவர்கள் சிறையில் வைக்கப்படுவீர்கள். இந்தவிதமாக நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மையோ என பரிசோதித்துப் பார்க்கப்படும். உண்மை இல்லையெனில், பார்வோனின் வாழ்வுமீது ஆணையாக, நீங்கள் உளவாளிகள் என்பது நிச்சயம்” என்றான். 17இவ்வாறு அவன் அவர்கள் அனைவரையும் மூன்று நாட்கள் காவலில் அடைத்து வைத்தான்.
18மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களிடம், “நான் இறைவனுக்குப் பயப்படுகின்றவன், ஆதலால் நீங்கள் என் சொற்படி நடந்துகொண்டால் உயிர் பிழைப்பீர்கள். 19நீங்கள் நேர்மையானவர்களானால், உங்கள் சகோதரர்களில் ஒருவன் இங்கே சிறையில் இருக்கட்டும், மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியத்தை எடுத்துச் செல்லுங்கள். 20உங்கள் வார்த்தைகள் உண்மையானவை என நிரூபிக்கப்படவும், நீங்கள் உயிரிழக்காமல் இருக்கவும் உங்களுடைய இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவர வேண்டும்” என்றான். அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள்.
21பின்பு அவர்கள், ஒருவரையொருவர் பார்த்து, “நிச்சயமாய் நாம் நம்முடைய சகோதரனுக்குச் செய்த தீமைக்காகவே இப்போது தண்டிக்கப்படுகின்றோம். அவன் தன் உயிருக்காக மன்றாடி துன்பப்பட்டதைக் கண்டும் நாம் அவனுக்குச் செவிமடுக்கவில்லை. அதனால்தான் இந்த துன்பம் நமக்கு நேரிட்டது” எனக் கூறிக்கொண்டார்கள்.
22அப்போது ரூபன், “அச்சிறுவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வேண்டாம் என நான் சொல்லவில்லையா? ஆனால் நீங்கள் கேட்கவில்லை! இப்போது அவனுடைய இரத்தத்துக்கு நாம் கணக்குக் கொடுத்தேயாக வேண்டும்” என்றான். 23யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் பேசியதால், தாங்கள் பேசியது அவனுக்குப் புரிந்தது என்பதை அவர்கள் உணரவில்லை.
24யோசேப்பு அவர்களைவிட்டு விலகிச் சென்று அழத் தொடங்கினான். பின்பு திரும்பவும் வந்து அவன் அவர்களுடன் பேசினான். அப்போது அவன் அவர்களின் கண்களுக்கு முன்பாக சிமியோனைப் பிடித்துக் கட்டிப்போடச் செய்தான்.
25பின்பு யோசேப்பு அவர்களுடைய சாக்குகளில் தானியத்தை நிரப்பும்படியும், அவரவர் வெள்ளிப்பணத்தை மீண்டும் அவரவர் சாக்குகளில் வைக்கும்படியும், அவர்களது பயணத்துக்குத் தேவையான உணவு பொருட்களைக் கொடுக்கும்படியும் தன் பணியாளர்களிடம் கட்டளையிட்டான். அவ்விதமாகச் செய்து முடிந்ததும், 26அவர்கள் தானியப் பொதிகளைத் தங்கள் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.
27அவர்கள் இரவு தங்குவதற்காக நிறுத்திய இடத்தில் அவர்களில் ஒருவன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் சாக்கைத் திறந்தபோது, இதோ! சாக்கின் வாயில் பகுதியில் தன் வெள்ளிப்பணம் இருப்பதைக் கண்டான். 28அவன் தன் சகோதரர்களிடம், “என் வெள்ளிப்பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது, இதோ என் சாக்கில் அது இருக்கின்றது பாருங்கள்” என்றான்.
அவர்கள் பயந்து மனக்கலக்கமுற்று, நடுநடுங்கியவர்களாக ஒருவரையொருவர் பார்த்து, “இறைவன் எங்களுக்குச் செய்திருப்பது என்ன?” என்றார்கள்.
29அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தந்தை யாக்கோபிடம் திரும்பி வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். 30“எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போன்று நடத்தினான். 31ஆனால் நாங்கள் அவனிடம், ‘நாங்கள் நேர்மையானவர்கள்; உளவாளிகள் அல்ல. 32நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரே தந்தையின் பிள்ளைகள், ஒருவன் இப்போது இல்லை; இளையவன் எங்கள் தந்தையோடு கானான் நாட்டில் இருக்கின்றான்’ என்று சொன்னோம்.
33“அப்போது அந்நாட்டின் அதிகாரி எங்களிடம், ‘நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களில் ஒருவனை இங்கே என்னுடன் விட்டுவிட்டு, பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்குத் தானியத்தை எடுத்துச் செல்லுங்கள். 34ஆனால், நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளத்தக்கதாக, உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்போது உங்கள் சகோதரனை உங்களிடம் திருப்பி ஒப்படைப்பேன், நீங்களும் இந்நாட்டில் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம்’ எனக் கூறினான்” என்றார்கள்.
35அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டியபோது, இதோ! ஒவ்வொருவனுடைய சாக்கிலும் அவனவன் கொடுத்த வெள்ளிப் பணமுடிப்பு இருந்தது! அவர்களும் அவர்களது தந்தையும் வெள்ளிப் பணமுடிப்புகளைக் கண்டபோது மிகவும் பயந்தார்கள். 36அவர்களது தந்தையான யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் எனக்கு என் பிள்ளைகளை இல்லாமல் செய்துவிட்டீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, இப்போது பென்யமீனையும் கொண்டு போகப்போகின்றீர்கள். எல்லாமே எனக்கு எதிராகத்தான் நடக்கின்றன!” என்றான்.
37அப்போது ரூபன் தன் தந்தையிடம், “பென்யமீனை என்னுடைய பொறுப்பில் தாருங்கள், நான் மீண்டும் அவனை உங்களிடம் அழைத்து வருவேன். அவ்வாறு நான் அவனை மீண்டும் அழைத்து வராது போனால், என்னுடைய இரண்டு மகன்மாரையும் நீங்கள் கொன்றுவிடலாம்” என்றான்.
38ஆனால் யாக்கோபு, “என்னுடைய மகன் உங்களுடன் அங்கே இறங்கி வரப்போவதில்லை; அவனது சகோதரன் மரணித்து போனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கின்றான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கு விபத்து ஏதும் நிகழுமானால், நரைத்த என் தலை, மரணித்தோரின் இடத்துக்கு கவலையுடன் இறங்கிச் செல்லும்படி செய்வீர்கள்” என்றான்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 42: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល