ஆதியாகமம் 37
37
யோசேப்பின் கனவு
1பின்னர் யாக்கோபு, தன் தந்தை அந்நியனாக முன்னர் வாழ்ந்த கானான் நாட்டில் வாழ்ந்தான்.
2இதுவே யாக்கோபின் குடும்ப வரலாறு.
யோசேப்பு பதினேழு வயது வாலிபனாய் இருந்தபோது, தன் தந்தையின் மனைவிமாரான பில்காள், சில்பாள் ஆகியோரின் மகன்மாராகிய தனது ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யோசேப்பு தன் தந்தையிடம் திரும்பிச் சென்று அவர்கள் குறித்த மோசமான அறிக்கையை ஒப்புவித்தான்.
3தனது மகன் யோசேப்பு பிறக்கும்போது, இஸ்ரயேல் வயது முதிர்ந்தவனாய் இருந்தான். ஆகவே அவன் தனது மற்றைய மகன்மாரைவிட இவனை அதிகமாக நேசித்தான்; இதனால் இவனுக்காக விசேடமான ஒரு அங்கியை அவன் தயாரித்தான். 4தங்களது தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசித்ததை அவனது சகோதரர்கள் கண்டுகொண்டபோது, அவர்கள் அவனுடன் பாசத்தோடு பேசாமல் அவனை வெறுத்தார்கள்.
5யோசேப்பு ஒருநாள் கனவொன்று கண்டு, அதைத் தன் சகோதரர்களுக்குச் சொன்னபோது, அவர்கள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள். 6அவன் தனது சகோதரர்களிடம், “நான் கண்ட கனவைக் கேளுங்கள்: 7நாம் வயலில் அறுவடை செய்த கதிர்களைக் கட்டிக் கொண்டிருந்தோம், அப்போது திடீரென எனது கதிர்க் கட்டு எழுந்து நிமிர்ந்து நின்றது; அந்நேரம் உங்கள் கதிர்க் கட்டுகள் என் கதிர்க் கட்டைச் சுற்றி நின்று, குனிந்து வணங்கின” என்றான்.
8அப்போது அவனது சகோதரர்கள் அவனிடம், “நீ எங்களை ஆட்சி செய்யப் போகின்றாயோ? நீ உண்மையாகவே எம்மீது அதிகாரம் செலுத்துவாயோ?” என்று கேட்டு, அவனுடைய கனவின் பொருட்டும், அவன் கூறியவற்றின் பொருட்டும் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள்.
9அதன் பின்னர் அவன் இன்னுமொரு கனவு கண்டு, அதையும் தன் சகோதரர்களிடம் சொன்னான். “கேளுங்கள், நான் இன்னுமொரு கனவு கண்டேன்; இம்முறை சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னைக் குனிந்து வணங்கின” என்றான்.
10இதை அவன் தனது தந்தைக்கும் தனது சகோதரரர்களுக்கும் சொன்னபோது அவனது தந்தை, “நீ கண்ட கனவு என்ன? உன் தாயும் நானும் உன் சகோதரர்களும் உனக்கு முன்பாக தரையில் வீழ்ந்து உன்னை வணங்குவோம் என்று நினைக்கின்றாயா?” என்று அவனை அதட்டினான். 11அவனது சகோதரர்கள் அவன்மீது பொறாமை கொண்டார்கள், ஆனால் அவனது தந்தையோ அவன் சொன்னதை தன் மனதில் வைத்துக்கொண்டான்.
யோசேப்பு தன் சகோதரர்களால் விற்கப்படுதல்
12அக்காலத்தில் யோசேப்பின் அண்ணன்மார் தங்கள் தந்தையின் மந்தையை மேய்ப்பதற்காகச் சீகேமுக்கு அருகே போயிருந்தார்கள். 13ஒருநாள், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “உன் அண்ணன்மார் சீகேம் பட்டணத்துக்கு அருகே மந்தை மேய்த்துக் கொண்டிருப்பது உனக்குத் தெரியும் அல்லவா. வா இப்போது நான் உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகின்றேன்” என்றான்.
அதற்கு யோசேப்பு, “நல்லது, நான் போகின்றேன்” என்றான்.
14எனவே யாக்கோபு யோசேப்பிடம், “நீ போய் உன் அண்ணன்மார் நலமாயிருக்கின்றார்களா என்றும், மந்தைகள் எவ்வாறுள்ளன என்றும் பார்த்து வந்து எனக்கு அறிவித்துவிடு” என்றான். இவ்வாறு அவன் யோசேப்பை, எப்ரோன் பள்ளத்தாக்கிலிருந்து வழியனுப்பி வைத்தான்.
யோசேப்பு, சீகேமுக்கு வந்துபோது, 15இதோ, அவன் வெளியில் அலைந்து கொண்டிருப்பதை ஒரு ஆள் கண்டு, “நீ யாரைத் தேடுகின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
16அதற்கு யோசேப்பு, “நான் என் சகோதரர்களைத் தேடுகின்றேன். அவர்கள் எங்கே மந்தை மேய்க்கின்றார்கள் என்று தயவுசெய்து எனக்குக் கூறுவீராக” என்றான்.
17அதற்கு அவன், “அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், ‘தோத்தான் என்ற இடத்துக்குப் போவோம்’ என்று அவர்கள் சொல்வதைக் கேட்டேன்” என்றான்.
எனவே யோசேப்பு தன் சகோதரர்களைத் தேடிச் சென்று, தோத்தானுக்கு அருகே அவர்களைக் கண்டான். 18ஆனால் அவர்களோ அவனைத் தூரத்தில் கண்டு, அவன் தங்களுக்கு அருகே வருவதற்கு முன்னர் அவனைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள்.
19அவர்கள், “இதோ, கனவுக்காரன் வருகின்றான்! 20வாருங்கள், இப்போது அவனைக் கொலைசெய்து, இங்குள்ள குழிகளில் ஒன்றில் போட்டுவிடுவோம்; கொடிய மிருகம் அவனைத் தின்றுவிட்டது என்று சொல்வோம். அதன் பின்னர் அவனுடைய கனவுகள் எவ்வாறு நிறைவேறுமென்று பார்ப்போம்” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டார்கள்.
21ரூபன் அதைக் கேட்டபோது, “நாம் அவனது உயிருக்குத் தீங்கு விளைவிக்காது விட்டுவிடலாம்” என்று கூறி அவனை அவர்களுடைய கைகளிலிருந்து காப்பாற்றினான். 22மேலும் அவன் அவர்களை நோக்கி, “கொலைசெய்து இரத்தத்தைச் சிந்தாமல், இந்த பாலைநிலத்தில் உள்ள கிணற்றில் அவனைப் போட்டுவிடுங்கள், அவன்மீது கை வைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்பிக்க வைத்து, பின்னர் தன் தந்தையிடம் மறுபடியும் அழைத்துச் செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான்.
23எனவே யோசேப்பு தனது சகோதரர்களிடம் வந்தவுடன், அவர்கள் அவன் அணிந்திருந்த அங்கியை, அதாவது அந்த அலங்கரிக்கப்பட்ட விசேட அங்கியை பறித்தெடுத்தார்கள். 24அதன் பின்னர் அவனைத் தூக்கி அங்கே இருந்த கிணற்றினுள்ளே போட்டார்கள். அது தண்ணீர் அற்ற வெறும் கிணறு.
25பின்பு அவர்கள் உணவருந்த உட்கார்ந்ததும், அவர்கள் நிமிர்ந்து பார்க்கையில், அதோ, கீலேயாத்திலிருந்து எகிப்துக்கு ஒட்டகங்களிலே வாசனைப் பொருட்களையும், தைல வகைகளையும், வெள்ளைப்போளத்தையும் ஏற்றிச் செல்கின்ற இஸ்மவேலரின் வணிகப் பயணிகள் கூட்டமொன்று வந்துகொண்டிருப்பதைக் கண்டார்கள்.
26அப்போது யூதா தன் சகோதரர்களிடம், “நம்முடைய தம்பியைக் கொலைசெய்து, அவனுடைய மரணத்தை#37:26 மரணத்தை – மூலமொழியில் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன இலாபம்? 27வாருங்கள், அவன்மீது நமது கையை வைக்காமல், இந்த இஸ்மவேலருக்கு அவனை விற்று விடுவோம். எவ்வாறிருப்பினும் அவன் நம்முடைய சகோதரனும், நமது சொந்த இரத்தமுமாய் இருக்கின்றானே” என்றான். அதற்கு அவனது சகோதரர்கள் சம்மதித்தார்கள்.
28மீதியான் நாட்டு வியாபாரிகள் அங்கே வந்தபோது, யோசேப்பின் சகோதரர்கள் கிணற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, இருபது சேக்கல் வெள்ளிக்கு#37:28 இருபது சேக்கல் வெள்ளிக்கு – சுமார் 230 கிராம். ஒரு இளம் ஆண் அடிமைக்கு உரிய பெறுமதி. இஸ்மவேலரிடம் அவனை விற்றார்கள், இஸ்மவேலர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
29ரூபன் அந்தக் கிணற்றுக்குத் திரும்பி வந்தபோது, யோசேப்பை கிணற்றுக்குள்ளே காணாததால், துக்கத்தால் அவன் தன் உடைகளைக் கிழித்துக்கொண்டான். 30அவன் தன் சகோதரர்கள் இருந்த இடத்துக்கு திரும்பிப் போய், “வாலிபன் அங்கே இல்லையே! நான் எங்கே செல்வேன்?” என்றான்.
31பின்பு அவர்கள் ஒரு வெள்ளாட்டை வெட்டி, அதன் இரத்தத்தில் யோசேப்பின் அங்கியைத் தோய்த்தார்கள். 32அலங்கரிக்கப்பட்ட அந்த விசேட அங்கியைத் தங்கள் தந்தையிடம் கொண்டுபோய், “இந்த அங்கியை நாங்கள் வழியில் கண்டெடுத்தோம். இது உமது மகனுடையதா என்று பாருங்கள்” என்றார்கள்.
33யாக்கோபு அதைக் கண்டு, “இது என் மகனுடைய அங்கிதான்! ஏதோ ஒரு கொடிய மிருகம் அவனைக் கொன்று தின்றிருக்க வேண்டும், யோசேப்பு நிச்சயமாகத் துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்டிருப்பான்” என்றான்.
34யாக்கோபு துக்கத்தால் தன் உடையைக் கிழித்து, துயரஆடை#37:34 துயரஆடை – ஒருவர் மனம் வருந்துவதை வெளிக்காட்ட அணியும் உடலை அரிக்கும் துணி அணிந்து, தன் மகனுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுஷ்டித்தான். 35அவனுடைய மகன்மார், மகள்மார் எல்லோருமே அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அவனோ ஆறுதலடைய மறுத்து, “இல்லை, நான் மரணித்தோரின் இடத்துக்கு இறங்கி#37:35 மரணித்தோரின் இடத்துக்கு இறங்கி – மூலமொழியில் பாதாளத்துக்கு சென்று என் மகனிடத்தில் போய்ச் சேரும்வரை துயருற்றுக் கொண்டேயிருப்பேன்” என்றான். இவ்வாறாக யோசேப்பின் தந்தை அவனுக்காக அழுது புலம்பினான்.
36இதற்கிடையில் அந்த மீதியானிய வியாபாரிகள், எகிப்திலே இருந்த பார்வோனின் அதிகாரிகளில் ஒருவனும் மெய்க்காவலர்களின் தலைவனுமான போத்திபார் என்பவனுக்கு யோசேப்பை விற்றார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 37: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.