ஆதியாகமம் 38

38
யூதாவும் தாமாரும்
1அக்காலத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச் சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்குவதற்காக இறங்கிச் சென்றான். 2அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டான். 3அவள் கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். யூதா அவனுக்கு ஏர் எனப் பெயர் சூட்டினான். 4அவள் மீண்டும் கர்ப்பம் தரித்து இன்னும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்கு ஓனான் எனப் பெயர் சூட்டினாள். 5அதன் பின்னரும் அவள் கர்ப்பம் தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்கு சேலா எனப் பெயர் சூட்டினாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றெடுத்தாள்.
6சில வருடங்களின் பின்#38:6 சில வருடங்களின் பின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தான். 7ஆனால் யூதாவின் மூத்த மகனான ஏர், கர்த்தரின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், கர்த்தர் அவனைக் கொன்றார்.
8அப்போது யூதா, ஓனானிடம், “மரணித்த#38:8 மரணித்த – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது உன் சகோதரனின் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொண்டு, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான்.#38:8 அந்த சமுதாயத்தில் இவ்வாறான வழக்கம் சட்டப்படி நடைமுறையில் இருந்தது. 9ஆனால் ஓனானுக்கோ தனது மூலமாக தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தனது சந்ததியாய் இருக்காதென்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதபடி, தன் உயிரணுவைத் தரையிலே சிந்தச் செய்தான். 10இந்தச் செயல் கர்த்தரின் பார்வையிலே தீமையாய் இருந்தபடியால், அவனையும் அவர் கொன்றார்.
11அப்போது யூதா, தன் மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகும் வரை, நீ கணவனை இழந்த ஒரு பெண்ணாக உன் தந்தை வீட்டுக்குச் சென்று அங்கே குடியிரு” என்றான். “தன் மகன் சேலாவும் அவனுடைய சகோதரர்கள் போலவே மரணித்து போவான்” என்று கருதியே அவன் அவ்வாறு சொன்னான். எனவே தாமார் தன் தந்தையின் வீட்டுக்குச் சென்று அங்கு குடியிருந்தாள்.
12அநேக நாட்களுக்குப் பின்னர் சூவாவின் மகளான யூதாவின் மனைவி மரணித்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுஷ்டித்து முடித்த பின்னர், திம்னா பட்டணத்தில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு உரோமம் கத்தரிக்கும் ஆட்களிடம் போனான். அதுல்லாமியனாகிய அவனுடைய சிநேகிதன் ஈராவும் அவனுடன் போனான்.
13“தன் செம்மறியாடுகளுக்கு உரோமம் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குச் செல்கின்றார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. 14சேலா வளர்ந்து பெரியவனாகிவிட்ட போதிலும், தன்னை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்பதை அவள் கண்டுகொண்டாள். எனவே அவள் கணவனை இழந்த பெண்ணுக்குரிய தனது உடைகளைக் களைந்து, தன்னை அடையாளம் காணமுடியாதபடி முகத்திரையினால் மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகின்ற வழியில் உள்ள ஏனாயீம் பட்டண வாயிலிலே உட்கார்ந்திருந்தாள்.
15யூதா அவளைக் கண்டபோது, அவள் தன் முகத்தை மூடிக்கொண்டிருந்தபடியால், அவள் ஒரு விலைமாது எனக் கருதினான். 16அவளைத் தனது மருமகள் என அறியாத யூதா வீதியோரமாய் இருந்த அவளிடம் போய், “நீ என்னுடன் பாலுறவுகொள்வதற்கு வா” என்றான்.
அதற்கு அவள், “உம்முடன் உறவுகொள்வதற்கு நீர் எனக்கு என்ன தருவீர்?” என்று கேட்டாள்.
17அதற்கு அவன், “என் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புவேன்” என்றான்.
அவளோ, “அதை அனுப்பும் வரை ஏதாவதொரு பொருளை உத்தரவாதமாகத் தருவீரா?” என்று கேட்டாள்.
18அதற்கு யூதா, “உத்தரவாதமாக நான் உனக்கு என்ன தர வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தந்தருள்வீராக!” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து அவளுடன் பாலுறவு கொண்டான்; அவனால் அவள் கருவுற்றாள். 19அதன் பின்னர் அவள் உடனே எழுந்து சென்று, தன் முகத்திரையை அகற்றி கணவனை இழந்த பெண்ணுக்குரிய உடைகளை அணிந்து கொண்டாள்.
20அதேவேளை யூதா, அப்பெண்ணிடம் உத்தரவாதமாக கொடுத்திருந்தவற்றை மீளப்பெறுவதற்காக, அதுல்லாம் ஊரவனாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து அனுப்பினான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 21அவன் அங்குள்ள ஆட்களிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் விலைமாது எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “அவ்வாறொரு கோயில் விலைமாது இங்கே இருந்ததில்லை” என்றார்கள்.
22ஆகவே அவன் யூதாவிடம் திரும்பிப் போய், “என்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள ஆட்களும் அவ்வாறொரு கோயில் விலைமாது அங்கே இருந்ததில்லை என்று சொன்னார்கள்” என்றான்.
23யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக் கொள்ளட்டும்; இல்லாவிட்டால் நாம் இருவரும் பிறரின் இகழ்ச்சிக்குரியவர்கள் ஆகுவோம். எவ்வாறிருப்பினும் நான் இந்த வெள்ளாட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் உன்னாலோ அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்.
24சுமார் மூன்று மாதங்கள் சென்ற பின்னர், “உமது மருமகள் தாமார் தகாத உறவில் ஈடுபட்டு அதன் பலனாகக் கருவுற்றிருக்கின்றாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
25அவளை வெளியே அழைத்துக்கொண்டு வரும்போது, அவள் தன் மாமனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அதாவது, “இந்தப் பொருளுக்கு உரியவர் எவரோ, அவராலேயே நான் கருவுற்றிருக்கின்றேன். இந்த முத்திரை மோதிரமும், அதன் கயிறும், கோலும் யாருடையவை என்று உம்மால் அடையாளம் காண முடியுமா என்று பார்த்திடுவீர்” என்று கேட்கும்படி கூறினாள்.
26யூதா அவற்றை அடையாளம் கண்டு, “என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்க மறுத்தபடியால், அவள் என்னைவிட நீதியானவளே” என்றான். அதன் பின்னர் யூதா அவளுடன் பாலுறவு கொள்ளவில்லை.
27அவளுக்குப் பேறுகாலம் வந்தபோது, அவளது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகத் தெரியவந்தது. 28அவள் பிரசவிக்கின்றபோது ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மகப்பேற்றுத் தாதி கருஞ்சிவப்பு நூலை எடுத்து அக்குழந்தையின் கையில் கட்டி, “இதுவே முதலில் வெளிப்பட்டது” என்றாள். 29ஆனால் அக்குழந்தை மறுபடியும் கையை உள்ளே இழுத்துக் கொண்டபோது, அவனுடைய சகோதரன் வெளியே வந்தான். அப்போது மகப்பேற்றுத் தாதி, “நீ முந்தியடித்துக் கொண்டு எவ்வாறு வெளியே வரமுடியும்!” என்றாள். அவனுக்கு பேரேஸ்#38:29 பேரேஸ் வெளியேறுதல் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது. 30அதன் பின்னர் கையில் கருஞ்சிவப்பு நூல் கட்டப்பட்ட அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்குச் சேரா#38:30 சேரா கருஞ்சிவப்பு அல்லது பிரகாசம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 38: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល