ஆதியாகமம் 32
32
யாக்கோபு ஏசாவைச் சந்திக்க ஆயத்தமாதல்
1பின்னர், யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 2யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் படைத்தளம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மகனாயீம்#32:2 மகனாயீம் – இரண்டு சேனைகள் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான்.
3பின்னர் யாக்கோபு, ஏதோம் நாட்டிலுள்ள சேயீர் என்னும் இடத்தில் வசிக்கும் தன் அண்ணன் ஏசாவுக்குத் தன் வருகையை அறிவிப்பதற்காக, தனக்கு முன்பாகத் தூதுவர்களை அனுப்பினான். 4அவன் அவர்களுக்கு அறிவுறுத்தி, “நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவிடம் போய், ‘உமது பணியாளன் யாக்கோபு சொல்வது இதுவே: நான் லாபானுடன் தங்கி, இதுவரை காலமும் அங்கேயே இருந்தேன். 5எனக்கென்று சொந்தமாக மாடுகளும் கழுதைகளும் செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உள்ளன, அத்துடன் பணியாளர்களும் பணிப்பெண்களும் இருக்கின்றார்கள். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைப்பதற்காகவே நான் இந்தச் செய்தியை என் ஆண்டவனாகிய உமக்கு அனுப்புகின்றேன்’ என்று சொன்னதாக அவரிடம் கூறுங்கள்” என்றான்.
6தூதுவர்கள் யாக்கோபிடம் திரும்பி வந்து, “நாங்கள் உமது சகோதரன் ஏசாவிடம் போனோம், அவர் நானூறு ஆட்களுடன் உம்மைச் சந்திக்க வருகின்றார்” என்றார்கள்.
7அதைக் கேட்ட யாக்கோபு பயமும் மனக்கலக்கமும் அடைந்து, தன்னுடன் இருந்த ஆட்களை இரண்டு குழுக்களாகப் பிரித்தான். அவ்வாறே ஆட்டு மந்தையையும், மாட்டு மந்தையையும், ஒட்டகங்களையும் இரண்டு குழுக்களாகப் பிரித்தான். 8“அவற்றில் ஒரு குழுவை ஏசா தாக்கினால் மற்றைய குழுவாவது தப்பிக்கொள்ளும்” என அவன் எண்ணினான்.
9பின்னர் யாக்கோபு, “என் தந்தையான ஆபிரகாமின் இறைவனே, என் தந்தையான ஈசாக்கின் இறைவனே, ‘நீ உன் நாட்டுக்கும், உன் உறவினரிடத்துக்கும் போ; நான் உன் வாழ்வை வளம்பெறச் செய்வேன்’ என்று சொன்ன கர்த்தரே, 10உமது பணியாளனாகிய என்மீது நீர் காண்பித்த எல்லாவித நிலையான அன்புக்கும், நீர் எனது நம்பிக்கைக்குரியவராக இருந்ததற்கும் நான் தகுதியற்றவன். நான் யோர்தான் நதியைக் கடந்து இங்கு வந்தபோது, எனது கைத்தடி மட்டுமே என்னிடம் இருந்தது; ஆனால் இப்பொழுதோ என் உடைமைகள் இரண்டு முகாம்களை நிரப்பும் அளவுக்கு பெருகிவிட்டன. 11இதோ, என் சகோதரன் ஏசாவின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சி மன்றாடுகின்றேன். ஏனெனில் அவன் வந்து, என்னோடு சேர்த்து என் பிள்ளைகளையும் அவர்களது தாய்மாரையும் தாக்குவான் என்று அஞ்சுகின்றேன். 12ஆனாலும், ‘நான் உன்னை நிச்சயமாகவே வளம்பெறச் செய்வேன், உன் சந்ததிகளை எண்ணிக் கணக்கிட முடியாத கடற்கரை மணலைப் போல பெருகச் செய்வேன்’ என்று நீர் கூறியதை நம்புகின்றேன்” என மன்றாடினான்.
13அன்றிரவு அவன் அந்த இடத்திலேயே தங்கினான். பின்னர் தன்னிடம் உள்ளவற்றிலிருந்து தன் சகோதரன் ஏசாவுக்கு அன்புக் காணிக்கையாக அனுப்பி வைக்க, 14இருநூறு பெண்வெள்ளாடுகள், இருபது வெள்ளாட்டுக்கடாக்கள், இருநூறு செம்மறியாடுகள், இருபது செம்மறியாட்டுக்கடாக்கள், 15முப்பது பெண் ஒட்டகங்களுடன் அதன் குட்டிகள், நாற்பது பசுக்கள், பத்து காளைகள், இருபது பெண் கழுதைகள், பத்து ஆண் கழுதைகள் ஆகியவற்றை வேறுபிரித்தெடுத்தான். 16அவன் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியே தன் பணியாளர்களிடம் ஒப்படைத்து, “மந்தைகளுக்கு இடையில் சற்று இடைவெளியை வைத்து எனக்கு முன்னே செல்லுங்கள்” என்றான்.
17அவர்களில் எல்லோருக்கும் முன்னால் செல்பவனிடம், அவன் அறிவுறுத்திச் சொன்னதாவது: “என் சகோதரன் ஏசா உன்னைச் சந்தித்து, ‘நீ யாருக்குச் சொந்தமானவன்? எங்கே போகின்றாய்? உனக்கு முன்னே போகும் இந்த மிருகங்களுக்கு உரிமையாளன் யார்?’ என்று கேட்டால், 18‘இவை உமது பணியாளன் யாக்கோபுக்குச் சொந்தமானவை; அவர் தமது ஆண்டவன் ஏசாவுக்கு இவற்றை அன்புக் காணிக்கையாக அனுப்பியிருக்கின்றார்; அவரும் எங்கள் பின்னே வருகின்றார்’ என்று சொல்” என்றான்.
19அதேபோல மந்தைகளைப் பின்தொடர்ந்து இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் சென்ற மற்றவர்களிடமும், “ஏசாவைச் சந்திக்கும்போது இவ்விதமாகவே சொல்ல வேண்டும்” என்று அவன் அறிவுறுத்தினான். 20அதன்படி, “ ‘உமது பணியாளனாகிய யாக்கோபும் எமக்குப் பின்னால் வருகின்றான்’ என்பதைத் தவறாமல் சொல்ல வேண்டும்” என்றான். பின்பு, “எனக்கு முன்னால் நான் அனுப்பும் இந்த அன்புக் காணிக்கைகளால் நான் அவனைச் சமாதானப்படுத்துவேன்; பிறகு, நான் அவனைக் காணும்போது ஒருவேளை அவன் என்னை ஏற்றுக்கொள்வான்” என எண்ணினான். 21அவ்வாறே யாக்கோபின் அன்புக் காணிக்கைகள் அவன் செல்வதற்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன; அவனோ அன்றிரவு முகாமிலே தங்கினான்.
யாக்கோபு இறைவனுடன் போராடுதல்
22அன்றிரவு யாக்கோபு எழுந்து தன் இரண்டு மனைவியரையும், இரண்டு பணிப்பெண்களையும், தன் பதினொரு மகன்மாரையும் அழைத்துக்கொண்டு யாப்போக்கு என்ற ஆற்றின் துறையைக் கடந்தான். 23அவன் அவர்களை ஆற்றுக்கு அப்பால் அனுப்பிவைத்த பின்னர் தனது உடைமைகள் எல்லாவற்றையும் அனுப்பி வைத்தான். 24அதன் பின்னர் யாக்கோபு தனிமையாக இருந்தான். அப்போது ஒருவர் வந்து, பொழுது விடியும்வரை அவனுடன் மல்யுத்தம் செய்தார். 25யாக்கோபை வெற்றிகொள்ள முடியாது என்பதைக் கண்ட அவர் அவனோடு தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் இடுப்பு மூட்டுப்பகுதியைத் தொட்டார், தொட்டவுடனே இடுப்பு மூட்டு விலகியது. 26அப்போது அவர் யாக்கோபிடம், “உன் பிடியை விலக்கி என்னைப் போக விடு; பொழுது விடிகின்றது” என்றார்.
அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிட மாட்டேன்” என்றான்.
27அவர் அவனிடம், “உன் பெயர் என்ன, சொல்?” என்றார்.
அதற்கு அவன், “யாக்கோபு” என்றான்.
28அப்போது அவர், “நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி பெற்றாய், எனவே உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல் எனப்படும்” என்றார்.
29அப்போது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடைய பெயரை எனக்குச் சொல்வீராக” என்றான்.
அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கூறி, அவனை ஆசீர்வதித்தார்.
30உடனே யாக்கோபு, “நான் இறைவனை நேருக்குநேராய்க் கண்டும், இன்னும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்துக்குப் பெனியேல்#32:30 பெனியேல் – இறைவனின் முகம் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான்.
31அவன் பெனியேலைக் கடந்து போகையில், அவனுக்கு மேலாகச் சூரியன் உதித்தது. அவனுடைய இடுப்பு மூட்டு விலகி இருந்ததால், அவன் நொண்டி நொண்டி நடந்தான். 32யாக்கோபின் இடுப்பினது மூட்டின் அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இந்நாள்வரை எந்த மிருகத்தினதும்#32:32 எந்த மிருகத்தினதும் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இடைமூட்டுடன் இணைந்திருக்கும் தசைநாரை இஸ்ரயேலர் உண்பதில்லை.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 32: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.