ஆதியாகமம் 33
33
யாக்கோபு மற்றும் ஏசாவின் சந்திப்பு
1யாக்கோபு தனது பயணத்தைத் தொடர்கையில் நிமிர்ந்து பார்த்தபொழுது, அதோ தொலைவில் ஏசா நானூறு ஆட்களுடன் வருவதைக் கண்டான்; ஆகவே அவன் பிள்ளைகளை வேறாகப் பிரித்தெடுத்து, லேயாளிடமும் ராகேலிடமும் மற்றும் இரண்டு பணிப்பெண்களிடமும் பிரித்துக் கொடுத்தான். 2இரண்டு பணிப்பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும், முன்னணியில் நிறுத்தினான். அடுத்ததாக லேயாளையும் அவளது பிள்ளைகளையும் நிறுத்தி, கடைசி அணியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினான். 3யாக்கோபோ பிள்ளைகளுக்கு முன்னால் சென்று, தன் அண்ணன் ஏசாவை நெருங்கி, ஏழு முறை தரைவரை தலைகுனிந்து வணங்கினான்.
4ஆனால் ஏசா அவனைச் சந்திப்பதற்கு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டியணைத்து முத்தமிட்டான். அப்போது அவர்கள் இருவருமே அழுதார்கள். 5பின்பு ஏசா நிமிர்ந்து பார்த்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டபோது, “உன்னோடிருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டான்.
அதற்கு யாக்கோபு, “இவர்கள் உமது அடியவனாகிய எனக்கு இறைவன் கிருபையாகத் தந்த பிள்ளைகள்” என்றான்.
6அப்போது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் அருகில் வந்து தலைவணங்கி வாழ்த்துத் தெரிவித்தார்கள். 7அடுத்ததாக லேயாளும் தன் பிள்ளைகளுடன் அருகில் வந்து வணங்கினாள். கடைசியாக ராகேலும் யோசேப்பும் வந்து வணங்கினார்கள்.
8அப்போது ஏசா, “வழியிலே நான் சந்தித்த அந்த மந்தைகளை நீ எனக்கு அனுப்பிவைத்த காரணம் என்ன?” என்று கேட்டான்.
அதற்கு யாக்கோபு, “என் ஆண்டவனே! உம்முடைய கண்களில் தயவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தேன்” என்றான்.
9அதற்கு ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே அவை என்னிடம் ஏராளம் இருக்கின்றன. உனக்குச் சொந்தமானதை நீயே வைத்துக்கொள்” என்றான்.
10அதற்கு யாக்கோபு, “உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடமிருந்து இந்த அன்புக் காணிக்கைகளை தயவாக ஏற்றுக்கொள்வீராக! இப்போது நீர் என்னைத் தயவாக ஏற்றுக்கொண்டதால், நான் உமது முகத்தைப் பார்ப்பது இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதைப் போல் இருக்கின்றது. 11இறைவன் என்மீது இரக்கமுள்ளவராய் இருந்ததால், எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் இருக்கின்றன. எனவே உமக்காக எடுத்து வந்த அன்புக் காணிக்கைகளை தயவுசெய்து ஏற்றுக்கொள்வீராக” என்று சொன்னான். அவ்வாறு அவன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் ஏசா அவற்றை ஏற்றுக்கொண்டான்.
12அதன் பின்னர் ஏசா, “வா, நாம் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்வோம்; உனக்கு முன்னால் நான் செல்கின்றேன்” என்று யாக்கோபை அழைத்தான்.
13அதற்கு யாக்கோபு ஏசாவிடம், “எனது பிள்ளைகள் சிறுகுழந்தைகள் என்பது என் ஆண்டவனுக்குத் தெரியும். அத்தோடு பால் கொடுக்கும் ஆடுகளையும், பசுக்களையும் நான் கவனிக்க வேண்டும். அவற்றை ஒரேநாளில் வருத்தி வேகமாகக் கொண்டுசென்றால் அனைத்து மந்தைகளும் இறந்து விடும். 14ஆகையால் என் ஆண்டவனாகிய நீர் உமது அடியவனுக்கு முன்னே செல்வீராக; நான் உமக்குப் பின்னால் என் பிள்ளைகளினதும் மந்தைகளினதும் நடையின் வேகத்துக்குத் தக்கதாக நடந்து, உமது இருப்பிடமாகிய சேயீரை வந்து சேருவேன்” என்றான்.
15அப்போது ஏசா, “அவ்வாறெனில் என்னுடைய ஆட்களில் சிலரை உனக்குத் துணையாக விட்டுப் போகின்றேன்” என்றான்.
அதற்கு யாக்கோபு, “அவ்வாறு செய்வானேன்? என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அதுவே போதும்” என்றான்.
16எனவே ஏசா, அன்றைய தினமே சேயீருக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டான். 17ஆனால் யாக்கோபு வேறுதிசையில் சென்று,#33:17 வேறுதிசையில் சென்று – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது சுக்கோத்துக்குப் போய் அங்கே தனக்கு ஒரு வீட்டை அமைத்து, தன் கால்நடைகளுக்கும் தங்குமிடங்களை அமைத்தான். அதனாலேயே அந்த இடத்துக்கு சுக்கோத்#33:17 சுக்கோத் – தங்குமிடங்கள் என்று அர்த்தம். என்னும் பெயர் வந்தது.
18பின்பு யாக்கோபு பதான்-அராமிலிருந்து புறப்பட்டு, கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்துக்கு பாதுகாப்பாக வந்துசேர்ந்து, அந்தப் பட்டணத்துக்கு அருகில் முகாம் அமைத்தான். 19யாக்கோபு தான் கூடாரம் அமைத்த அந்த நிலத்தை, சீகேமின் தந்தையான ஏமோரின் மகன்மாரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான். 20அங்கே யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, ஏல்-எல்லோகே இஸ்ரயேல்#33:20 ஏல்-எல்லோகே இஸ்ரயேல் – இஸ்ரயேலின் இறைவன் என்று அர்த்தம். எனப் பெயரிட்டான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 33: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.