சலிப்புற்ற உலகம் களிகூறுகிறது: 2020 வருகையின் தியானம்மாதிரி

Day 5: தேவதூதர்கள்
தேவதூதர்கள் பயப்படும்விதமாய் இருக்கிறார்கள். அதைக் கற்பனை செய்வதொன்றும் கடினமானதல்ல, ஏனெனில் தேவதூதர்கள் வழக்கமாக மனிதர்களிடம் சொல்லும் முதல் வார்த்தையே "பயப்படாதிருங்கள்" (லூக். 1:13, 30; 2:10,இன்னும் பல.) என்பதே.
அவர்கள் வானலோகத்தார் என்ற உண்மையைத் தவிர்த்து தேவதூதர்களைக் குறித்து நிச்சயமாகவே நாம் மிகக்குறைந்த அளவே அறிந்திருக்கிறோம். தம்முடைய செய்திகளை அறிவிக்கும்பொருட்டு அவர்களைப் போர்வீரர்கள், பாதுகாவலர்கள், அறிவிப்பாளர்கள் போன்ற பல்வேறு பணிகளில் தேவன் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
கிறிஸ்துமஸ் கதையில் அவர்கள் தூதுவர்களாக இருக்கிறார்கள்.
கர்த்தருடைய தூதன் ஒருவன் சகரியாவுக்குத் தரிசனமானான். அதன் பிறகு காபிரியேல் என்னும் தூதன், மரியாளுக்குத் தரிசனமாகி, அவள் கர்ப்பவதியாகி தேவனுடைய குமாரனைப் பெறப்போவதாக அவளிடம் சொல்கிறான். பின்பதாக கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கும் சொப்பனத்தில் காணப்பட்டு இந்தசெய்தியை அவன் அறியும்படி செய்கிறான்.
அடுத்தமுறை இந்த கதையில், ஒரு கர்த்தருடைய தூதன் வயல்வெளியில் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்குத் தரிசனமாகிறான். மேய்ப்பர்களைக் குறித்தும், அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதைக் குறித்தும் பேசுவதில் நாம் நேரம் செலவழித்தோம், ஆனால் தேவதூதர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? அநிச்சயமான சூழ்நிலையின் மத்தியில் மகிழ்ச்சியாய் இருப்பதைக் குறித்து அவர்கள் நமக்கு என்ன கற்பிக்கிறார்கள்?
தேவதூதர்கள் மகிழ்ச்சியாயிருந்தார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு மேன்மை இருந்தது: அன்று இரவில் இராஜா வருகிறார் என்பதையும், மனுகுலத்திற்கு அவர் நம்பிக்கையைக் கொண்டுவருகிறார் என்பதையும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தார்கள். நம்பிக்கை வருகிறது என்பதை இந்த சோர்வுற்ற உலகம் அறியுமுன்னே அவர்கள் அறிந்திருந்தார்கள். மேய்ப்பர்கள் இதுவரை கேட்டிருந்த செய்திகள் எல்லாவற்றிலும் மிகநல்ல செய்தியை அறிவிக்க இந்த தேவதூதர்களின் கூட்டம் சேர்ந்து வந்திருந்தது மனித வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகும்.
“பரமசேனையின் திரள்” என்பது எண்ணக்கூடாத திரள்கூட்டமாகிய கர்த்தருடைய பணிவிடைக்காரர்களைக் குறிக்கும். இதை நீங்கள், ஒருநாளில் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பதாக நின்று அவரை ஸ்தோத்தரிக்கப்போகும் எண்ணக்கூடாத திரள் கூட்டமாகிய ஜனங்களைப் பிரதிபலிக்கும் ஒரு பரலோக சமுதாயம் என்றுகூட அழைக்கலாம் (வெளி. 7:9).
பெருந்திரளான தேவதூதர்களின் கூட்டம் ஒன்றுசேர்ந்து மகிழ்ந்தது. மேய்ப்பர்கள் அந்த மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டு, அதை மற்றவர்களுக்குப் பரவச்செய்தனர். ஒளி பரவியது, இருளை வெளிச்சமாக்கியது. உங்கள் வாழ்வின் இருண்ட நேரங்களில், தேவனைத் துதிப்பதற்கான மகிழ்ச்சியும், நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளை உங்களுக்குள் கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். அந்த நேரங்களில், உங்களை உற்சாகப்படுத்தி, தேவனுடைய வாக்குகளை உங்கள் மீது கூறும்படிக்கு தேவசமுதாயத்திலுள்ள மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம்.
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய விசுவாசத்திற்கு அடித்தளமாக விளங்கும் ஒரு கதையில், தாங்கள் வகிக்கப்போகும் பங்குகள்கூட மரியாள், யோசேப்பு மற்றும் மேய்ப்பர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் தங்களை சுற்றி நடப்பவைகள் எதையும் புரிந்துகொள்ள முடியாத நேரத்தில், உலகம் சோர்வாகவும், நம்பிக்கையற்றும் காணப்பட்ட வேளையில், அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக்கொண்டு, அவருடைய நற்குணத்தில் நம்பிக்கையாயிருந்தார்கள். பின்பு அந்த நன்மையை அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக, நம்பிக்கை பரவியது.
அந்த நம்பிக்கை இந்த அட்வெந்து காலத்தில் உங்களை உற்சாகப்படுத்துவதாக.
சிந்தனைக்கான கேள்விகள்:
- சிறுவர்களாயிருந்தபோது தேவதூதர்களைக் குறித்து உங்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கப்பட்டது?
- உங்கள் வாழ்வின் இருண்ட அல்லது நிச்சயமற்ற நேரங்களில் நீங்கள் யாரை நாடியிருக்கிறீர்கள்? அவர்களுடைய பதில்செயல் என்னவாக இருந்தது?
- இந்த வாரத்தில் நீங்கள் "தேவனுடைய வாக்குத்தத்தங்களை" சொல்லப்போகும் நபர் யார்?
இந்தத் திட்டம் உங்களை உற்சாகப்படுத்தியிருக்கும் என நாங்கள் நம்புகிறோம்! இயேசுவின் பிறப்பின் கதையை ஒவ்வொருவரும் தங்களுடைய மொழியில் வாசித்துப் புரிந்துகொள்ள இயலவேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்றால் என்ன செய்வது? வேதாகம மொழிபெயர்ப்பைப் பற்றியும் அது எவ்வாறு உலகமெங்கிலுமுள்ள பல்வேறு மொழியினருக்கு நம்பிக்கையைக் கொண்டுவருகிறது என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அட்வெந்து காலம் பொதுவாக மகிழ்ச்சியையும், கிறிஸ்துமஸ் பாடல்களையும் கொண்டுவரும், ஆனால் இந்த வருடம் உங்களுக்குக் கடினமானதாயிருக்கலாம். இந்த 5-நாள்திட்டத்தில், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் எவ்வாறு தங்களின் சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவசித்தம் செய்தனர் என்பதையும், அவர்களுடைய கதைகள் எவ்வாறு உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.
More