சலிப்புற்ற உலகம் களிகூறுகிறது: 2020 வருகையின் தியானம்மாதிரி

The Weary World Rejoices: A 2020 Advent Devotional

5 ல் 2 நாள்

நாள் 2: மரியாள்

பயப்படுவதற்கான எல்லா உரிமையும் மரியாளுக்கு இருந்தது. 

அவள் இளம் வயதுள்ளவளாயிருந்தாள், திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள், மேலும் இப்பொழுது அவள் கர்ப்பமாயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தசெய்தி தேவதூதனால் அறிவிக்கப்பட்டது. பரலோகவாசிகள் என்றாலே மக்கள் பயப்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இந்தசெய்தியை மரியாள் கேட்டதும், அவளுடைய சிந்தையில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதை நாம் கற்பனை மட்டுமே செய்யமுடியும். தன் குடும்பம் தன்னைத் தலைமுழுகி விடுமோ? பட்டணத்திலுள்ள மக்கள் ஏதாவது ஊகங்கள் செய்து அவதூறு பண்ணுவார்களோ? யோசேப்பு இதையெல்லாம் நம்பிவிடுவானோ? நிராகரிக்கப்பட்டு விடுவோமோ? அவமானப்படுத்தப்படுவோமோ? அல்லது இதனினும் மோசமாக எதுவும் நடக்குமோ? இந்த கேள்விகளெல்லாம் அவள் மனதில் ஓடியிருந்திருக்கும்.

ஆனால் மரியாள் தேர்ந்தெடுத்த முடிவோ பயத்தின் அடிப்படையிலானதல்ல, விசுவாசத்தின் அடிப்படையிலானது: “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” (லூக். 1:38)என்றாள். பின்னர், மரியாள் தன்னுடைய உறவினளான எலிசபெத்தை சந்தித்தபோது, எலிசபெத் மரியாளைப் பார்த்து: “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்” (லூக். 1:45) என்று சொல்கிறாள்.

பயத்தை நாம் எதிர்கொள்ளும் விதம் எப்பொழுதும் மரியாளைப் போலவே இருந்தால் நன்றாக இருக்கும். அவள் துதியின் பாடல் பாடி, நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் நம்முடைய உண்மை நிலை எப்படி இருக்கிறது? புயல் வருவதற்கு முன் மெதுவாக நகரும் கார்மேகம் போல் பயம் நம் இருதயத்தையும் ஆத்துமாவையும் பீடித்துக்கொள்கிறது. அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? பின்வாங்கி விடுவீர்களா? தனிமையாய் இருப்பீர்களா? பயத்தை உங்கள் இருதயத்திற்குள் புதைத்து வைத்துவிட்டு முடிவேயில்லாத "என்ன செய்வது" என்ற கேள்விகளோடு உழன்றுகொண்டிருப்பீர்களா?

மரியாள் இதை எதிர்கொண்ட விதத்தை நாம் பார்ப்போம். மரியாள் எலிசபெத்தை சந்தித்தப் பின்பு, பாடலின் மூலமாகத் தன்னுடைய கவனத்தைத் தேவனுக்கு நேராகத் திருப்பினாள். "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது" என்று அர்த்தம் கொள்ளும் அந்தப் பாடல் மரியாளின் பாடல் என்று சொல்லப்படுகிறது. பயம் உங்களை சூழ்ந்துகொள்ளும்போது உங்கள் நம்பிக்கையில் உறுதியாயிருக்க இந்தப் பாடலிலுள்ள சில வரிகள் உதவியாக இருக்கின்றன:

  • மரியாள் துதியுடன் ஆரம்பித்தாள். அந்த முழுப்பாடலுமே தேவனுடைய மகிமையைப் பாடுவதாயிருக்கிறது, இவ்வுலகின் இரட்சகரைப் பெற்றெடுக்கப்போவதைக் குறித்ததான அநேகக் கேள்விகள் மரியாளுக்கு இருந்தபோதிலும், அவள் அதைக்குறித்தெல்லாம் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் தேவனைத் துதிக்க ஆரம்பித்தாள்.
  • தேவனுடைய கதையில் தன்னுடைய பகுதியை மரியாள் நினைவில் வைத்திருந்தாள். 48 ஆம் வசனத்தில், மரியாள்: “அவர் தம் அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்கிறாள். தேவன் சகலத்தையும் ஆளுகிறவர் என்பதை மரியாள் அறிந்திருந்தாள்; அவரே தன்னை உருவாக்கினவர், தன்னைப் பலப்படுத்துகிறவர் என்பதையும் அறிந்திருந்தாள். தான் அவருடைய படைப்பு என்ற நினைவே மரியாளுக்குத் தான் யார் என்பதையும், தேவன் யார் என்பதையும் குறித்த உண்மையில் உறுதியாயிருக்க உதவியது. கதையில் தன்னுடைய பகுதி கதையின் முடிவல்ல என்று நினைவூட்டப்பட்டாள்.
  • தேவன் நல்லவர், நீதியுள்ளவர் என்பதை மரியாள் நினைவில் வைத்திருந்தாள். மரியாள் தேவன் அருளிய ஆசீர்வாதங்கள் அல்லது அவர் இஸ்ரவேலுக்கு அளித்த வாக்குத்தத்தங்களை மட்டும் மனதில் வைக்கவில்லை; கோணலானவைகளைத் தேவன் எவ்வாறு நேராக்குவார் என்பதையும் அவள் மனதில் வைத்திருந்தாள்(வசனங்கள். 51-53). 

மரியாள் பயத்தைத் துதியினால் விரட்டினாள். தேவன் யாரென்றும், அவருடைய கதையில் தன்னுடைய பாகம் என்ன என்பதையும் நினைவில்கொண்டவளாய், அவள் நம்பிக்கையின்மையை உதறித் தள்ளினாள். மேலும் அவள் தான் நிராகரிக்கப்படுவோம் அல்லது தூற்றப்படுவோம் என்பதைக் குறித்து நினையாமல், தான் நீதியின் தேவனை சேவிக்கிறவள் என்பதையே நினைவில்கொண்டிருந்தாள்.

அதனால்தான், மரியாளால் நம்பிக்கையுடனிருக்க முடிந்தது. உங்களாலும் அதே நம்பிக்கையுடனிருக்க முடியும்.

சிந்தனைக்கான கேள்விகள்:

  • நீங்கள் எப்போது பயத்தினால் சூழப்பட்டீர்கள்? அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
  • தேவதூதன் செய்தியை அறிவித்தபோது மரியாளின் மனதில் என்னென்ன உணர்வுகள் எழுந்திருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
  • தேவசெய்தியை மரியாள் எதிர்கொண்டவிதம் இந்த கிறிஸ்துமஸில் உங்களை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது?


வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

The Weary World Rejoices: A 2020 Advent Devotional

அட்வெந்து காலம் பொதுவாக மகிழ்ச்சியையும், கிறிஸ்துமஸ் பாடல்களையும் கொண்டுவரும், ஆனால் இந்த வருடம் உங்களுக்குக் கடினமானதாயிருக்கலாம். இந்த 5-நாள்திட்டத்தில், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் எவ்வாறு தங்களின் சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவசித்தம் செய்தனர் என்பதையும், அவர்களுடைய கதைகள் எவ்வாறு உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காக வைகிளிப்ஃ மொழிபெயர்ப்பாளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தகவல்களுக்கு, https://www.wycliffe.org/ என்ற இணையதளத்தை அணுகவும்.