சலிப்புற்ற உலகம் களிகூறுகிறது: 2020 வருகையின் தியானம்மாதிரி

நாள் 3: யோசேப்பு
இயேசுவின் பிறப்பினை சித்தரிக்கும் காட்சியில் வரும் எல்லா கதாபாத்திரங்களிலும், நாம் மிகவும் நன்றாக அறிந்திராத ஒரு கதாபாத்திரம் என்றால் அது யோசேப்பு கதாபாத்திரம்தான். இயேசுவின் பிறப்பைக் குறித்து மத்தேயு எழுதின சுவிசேஷத்தில்தான் நாம் அவனைக் குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம்; அதில், "கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு; தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே" என்று சொல்வதையும், "யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டான்" என்பதைம் வாசிக்கிறோம்.
யோசேப்பைக் குறித்ததான சில முக்கியமான விஷயங்களை நாம் பின்வரும் பகுதியில் தியானிப்போம்:
- யோசேப்பு ஒரு “நீதிமான்.” வேதத்திலுள்ள கதாபாத்திரங்களில் பலர் நீதிமான் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் யோசேப்பு அவ்வாறு குறிப்பிடப்படுகிறான். மரியாள் துரோகம் செய்துவிட்டதாக அவன் எண்ணியபோது, எல்லோரும் அறியும் வண்ணம் அவன் அதை வெளியில் சொல்லியிருக்கலாம், ஆனால் அவன் அவ்வாறு செய்யாமல் அவள்மேல் இரக்கம் பாராட்டினான். அவன் அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அதாவது மரியாளை அவமதிப்பதற்குப் பதிலாக, பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள யோசேப்பு விரும்பினான்.
- யோசேப்பு பயமுள்ளவனாகவும் இருந்தான். இயல்பாகவே, மக்கள் தூதர்களைக் குறித்து அதிகம் பயப்படுவதால், தூதர்கள் அவர்களிடம் தங்களுக்குப் பயப்படவேண்டாம் என்று சொல்வதுண்டு; ஆனால் இங்கு, கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் வேறு ஒரு காரியத்திதைக் குறித்துப் பயப்படவேண்டாம் என்று சொல்கிறான்: அதாவது மரியாளை அவனுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளப் பயப்படவேண்டாம் என்று சொல்கிறான். யோசேப்பு எல்லோரும் அறியும்படியான அவமானம், தலைகுனிவு போன்றவைகளுக்குப் பயந்திருக்கலாம், மேலும் தன்னுடைய குடும்பத்திலிருந்து விலக்கப்படலாம் என்றுகூடப் பயந்திருக்கலாம். தேவன் அதை அறிந்து, அந்த பயத்தின் மத்தியில் யோசேப்பை சந்தித்தார்.
- நம்பமுடியாததை நம்புவதை யோசேப்பு தெரிந்தெடுத்தான். அது ஒரு நம்பமுடியாத சூழ்நிலை, ஆனால் யோசேப்பு தன்னுடைய குடும்பம் மற்றும் சமுதாயத்தை நம்புவதைக் காட்டிலும் தேவவழிநடத்துதலை நம்புவதையே தெரிந்தெடுத்தான். அவ்வாறு செய்ததினால் அவன் எதை இழந்தான் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடுள்ள உறவுகள் மற்றும் மரியாதையை பணயம் வைத்திருக்கலாம். அதாவது தேவவழிநடத்துதலைப் பின்பற்றும் பொருட்டு அவன் அநேகமாக எல்லாவற்றையும் இழக்க ஆயத்தமாயிருந்தான்..
நம்முடைய உலகத்தில் நடப்பவைகளை நாம் பார்க்கும்போது, நாம் தேவனைப் பின்பற்றுவோமானால் இவைகளையெல்லாம் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வரலாம். யோசேப்புக்கும் அநேகமாக சந்தேகங்களும், கேள்விகளும் இருந்திருக்கும்; அவனும் மனிதன்தானே. ஆனால் அவனுடைய கேள்விகளும், சந்தேகங்களும் தேவனே சகலத்தையும் ஆளுகிறவர் என்ற சத்தியத்திற்குள்ளாக அவனை வழிநடத்தியது. அவரே யோசேப்பின் சத்தியம் மற்றும் நிச்சயத்தின் இறுதி ஊற்றுமூலமாயிருந்தார்.
தேவதூதன் மூலமாய் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தைகளே யோசேப்பு இவ்வளவு பெரிய சவாலை ஏற்றுக்கொண்டதற்கான ஒரே காரணமாகும். அதைப்போல் வேதத்தின் மூலமாகச் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தைகளே நீங்கள் அவருக்குக் கீழ்ப்படியும் பொருட்டு தைரியமாக முன்வரவேண்டியதின் காரணமாகும்.
சிந்தனைக்கான கேள்விகள்:
- யோசேப்பைக் குறித்து நீங்கள் இதற்குமுன்பு என்னென்ன அறிந்திருந்தீர்கள்? அவனைக் குறித்ததான உங்கள் எண்ணம் மாறியிருக்கிறதா? ஏன் அல்லது எவ்வாறு?
- யோசேப்பு தன்னுடைய சொப்பனத்தின்படி நடந்துகொண்டவிதம் தேவனை நம்புவதைக் குறித்து நமக்கு என்னக் கற்பிக்கிறது?
- தேவன் உங்களைச் செய்யச்சொல்லும் சவால் நிறைந்த ஒரு காரியம் என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

அட்வெந்து காலம் பொதுவாக மகிழ்ச்சியையும், கிறிஸ்துமஸ் பாடல்களையும் கொண்டுவரும், ஆனால் இந்த வருடம் உங்களுக்குக் கடினமானதாயிருக்கலாம். இந்த 5-நாள்திட்டத்தில், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சியில் வரும் கதாபாத்திரங்கள் எவ்வாறு தங்களின் சூழ்நிலைகளின் மத்தியிலும் தேவசித்தம் செய்தனர் என்பதையும், அவர்களுடைய கதைகள் எவ்வாறு உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.
More