லூக்கா 5
5
முதல் சீடன் அழைக்கப்படுதல்
1ஒருநாள் இயேசு கெனேசரேத்து ஏரியருகே#5:1 கெனேசரேத்து ஏரியருகே என்பது கலிலேயாக் கடல் நின்று கொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் ஒன்றுகூடி வந்தார்கள். 2அவர் கரையிலே இரண்டு படகுகளைக் கண்டார். மீனவர்கள் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். 3அவர் சீமோனுக்குச்#5:3 சீமோனுக்கு – இவனே பேதுரு என்றும் அழைக்கப்பட்டவன். சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து சிறிது தூரம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டார். பின்பு அவர் படகில் அமர்ந்து மக்களுக்கு போதித்தார்.
4அவர் பேசி முடித்த பின்பு சீமோனிடம், “படகைத் தண்ணீருள் ஆழமான இடத்துக்குக் கொண்டுபோய், மீன்களைப் பிடிக்க உன் வலைகளைப் போடு” என்றார்.
5அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தோம், ஒன்றுமே பிடிபடவில்லை. ஆயினும் நீர் இப்படிச் சொல்வதனால், நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
6அவர்கள் அவ்வாறு செய்தபொழுது, பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். அதனால் அவர்களுடைய வலைகள் கிழியத் தொடங்கின. 7எனவே தங்களுக்கு வந்து உதவி செய்யும்படி, மற்றைய படகில் இருந்த தங்கள் பங்காளிகளுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்ததும், அவர்களோடு சேர்ந்து இரண்டு படகுகளும் மூழ்கும் அளவுக்கு மீன்களினால் நிரப்பினார்கள்.
8சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடுவீராக! நான் பாவியாகிய ஒரு மனிதன்!” என்றான். 9ஏனெனில் அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும், தாங்கள் இவ்வளவு பெருந்திரளான மீன்களைப் பிடித்ததைக் கண்டு வியந்து, பயமடைந்தார்கள். 10அவ்வாறே, சீமோனின் பங்காளிகளான, செபெதேயுவின் மகன்மார்களான யாக்கோபும் யோவானும்கூட வியந்து, பயமடைந்தார்கள்.
அப்போது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ மனிதர்களைப் பிடிப்பவனாவாய்” என்றார். 11எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரைசேர்த்த பின்னர், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
தொழுநோயுள்ள மனிதன்
12இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், உடல் முழுவதும் தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரைவரை தலைதாழ்த்தி விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று வேண்டிக்கொண்டான்.
13அப்போது இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கியது.
14அப்போது இயேசு அவனிடம், “இதைக் குறித்து ஒருவருக்கும் சொல்லாமல், நீ போய் மதகுருவுக்கு உன்னைக் காண்பித்து, உனது சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு அத்தாட்சியாய் இருக்கும்”#5:14 லேவி. 14:1-32 என்று உத்தரவிட்டார்.
15ஆயினும் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று. இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களிலிருந்து குணமடைவதற்கும், மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடம் வந்தார்கள். 16ஆனால் இயேசுவோ அடிக்கடி அவர்களைவிட்டு விலகி, தனிமையான இடங்களுக்குப் போய், அங்கிருந்து ஜெபம்செய்தார்.
இயேசு முடக்குவாதக்காரனைக் குணமாக்குதல்
17இவ்வாறு ஒருநாள் இயேசு போதித்துக் கொண்டிருக்கையில், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் யூதேயாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த, பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும் அங்கே அமர்ந்திருந்தார்கள். நோயாளிகளைக் குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது. 18அப்போது சிலர், முடக்குவாதமுடைய ஒருவனை படுக்கையோடு தூக்கிக் கொண்டுவந்தார்கள். அவனை வீட்டுக்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு, அவர்கள் முயற்சி செய்தார்கள். 19ஆனாலும் மக்கள் கூட்டம் அதிகமாய் கூடியிருந்தபடியால், அவ்வாறு செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி, கூரையின் ஓடுகள் வழியாக படுக்கையில் கிடந்த அவனை கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.
20இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “அன்பனே#5:20 அன்பனே – கிரேக்க மொழியில் மனிதா என்றுள்ளது., உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன” என்றார்.
21பரிசேயரும் நீதிச்சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகின்ற இவன் யார்? இறைவனாலன்றி, யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
22அவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் இருதயங்களில் ஏன் இவ்வாறு சிந்திக்கிறீர்கள்? 23‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது இலகுவானது? 24ஆனாலும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்றார். எனவே அவர் அந்த முடக்குவாதக்காரனைப் பார்த்து, “நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றார். 25உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு, இறைவனைத் துதித்தபடி தன் வீட்டுக்குச் சென்றான். 26எல்லோரும் வியப்படைந்து, இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “இன்று நாங்கள் அதிசயமானவற்றைக் கண்டோம்!” என்றார்கள்.
லேவியின் அழைப்பு
27இதன்பின்பு இயேசு வெளியே செல்கையில், வரி சேகரிக்கின்றவனான லேவி#5:27 லேவி – இவனே மத்தேயு என்று அழைக்கப்பட்டவன் என்பவன் வரி சேகரிக்கும் இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார். 28லேவி எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினான்.
29பின்பு லேவி தன்னுடைய வீட்டில், இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்தளித்தான்; வரி சேகரிப்போரும், வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து அவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். 30அப்போது பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த நீதிச்சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் ஏன் வரி சேகரிப்போருடனும், பாவிகளுடனும் சேர்ந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
31அதற்கு இயேசு அவர்களிடம், “நலமாய் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை. வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. 32நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனந்திரும்பும்படி நான் அழைக்க வந்தேன்” என்றார்.
உபவாசத்தைப் பற்றிய கேள்வி
33சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள். பரிசேயருடைய சீடர்களும் அவ்வாறே செய்கின்றார்கள். ஆனால் உம்முடைய சீடர்களோ, உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றார்களே” என்றார்கள்.
34அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, அவனது நண்பர்களை#5:34 நண்பர்களை – அதாவது விருந்தினர்களாக வந்திருக்கும் அவனது நண்பர்கள். உபவாசிக்க செய்ய உங்களால் முடியுமா? 35ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
36அத்தோடு, அவர் அவர்களுக்கு இந்த விளக்க உதாரணத்தையும் சொன்னார்: “ஒருவனுமே ஒரு புதிய உடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்தெடுத்து, அதை ஒரு பழைய உடையில் ஒட்டுப் போட்டுத் தைப்பதில்லை. அவ்வாறு செய்தால் புதிய உடையும் கிழியும், புதியதிலிருந்து அவன் கிழித்தெடுத்து தைத்த துண்டும் பழைய உடைக்குப் பொருந்தாது. 37ஒருவனுமே புதிய திராட்சைரசத்தைப் பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அவன் அவ்வாறு செய்தால், புதிய திராட்சைரசம், அந்த தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; திராட்சைரசமும் வெளியே சிந்தி விடும், தோற்பைகளும் பாழாய்ப் போகும். 38ஆகவே, அவ்வாறு செய்யக் கூடாது. புதிய திராட்சைரசம் பாவிக்கப்படாத புதிய தோற்பைகளில் ஊற்றி வைக்கப்பட வேண்டும். 39பழைய திராட்சைரசத்தைக் குடித்த எவரும், புதியதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள், ‘பழையதே நல்லது’ என்பார்கள்” என்றார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
லூக்கா 5: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.