ஆதியாகமம் 29
29
பதான்-அராமில் யாக்கோபு
1பின்பு யாக்கோபு புறப்பட்டுச் சென்று, கிழக்குத் திசை மக்களினது நாட்டுக்குப்#29:1 கிழக்குத் திசை மக்களினது நாட்டுக்கு – பதாம் அராம் என்ற மெசப்பொத்தேமிய நாடு. போனான். 2அங்கே வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே படுத்திருந்த மூன்று ஆட்டு மந்தைகளையும் கண்டான்; அவற்றுக்கு அந்தக் கிணற்றின் தண்ணீரை அருந்தக் கொடுப்பது வழக்கம். அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. 3மந்தைகள் அனைத்தும் வந்துசேர்ந்ததும் அதன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயை மூடியிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுப்பார்கள். அதன் பின்னர் திரும்பவும் அந்தக் கல்லைப் புரட்டி முன்பிருந்த அதே இடத்தில் வைத்து, கிணற்றின் வாயை மூடிவிடுவார்கள்.
4யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் என்ற பட்டணத்திலிருந்து வருகின்றோம்” என்றார்கள்.
5யாக்கோபு அவர்களிடம், “உங்களுக்கு நாகோரின் பேரன் லாபானைத் தெரியுமா?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “ஆம்; எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
6“அவர் நலமாய் இருக்கின்றாரா?” என்று யாக்கோபு விசாரித்தான்.
“அவர் நலமாய் இருக்கின்றார்; அதோ அவருடைய மகள் ராகேல் தனது ஆடுகளுடன் வருகின்றாள்” என்றார்கள்.
7அதற்கு யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “பொழுதுசாய்வதற்கு இன்னும் நேரம் இருக்கின்றது; இது மந்தைகளை பட்டியில் அடைப்பதற்காக அவற்றை ஒன்றுசேர்க்கின்ற நேரமும் அல்ல. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு அவற்றை மறுபடியும் மேய விடலாமே” என்றான்.
8அதற்கு அவர்கள், “அனைத்து மந்தைகளும் வந்து சேரும்வரை அவ்வாறு செய்ய முடியாது. அவை வந்துசேர்ந்ததும் கிணற்றின் வாயை மூடியிருக்கும் கல் புரட்டப்படும். அப்போது ஆடுகளுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுப்போம்” என்றார்கள்.
9அவன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், மந்தை மேய்ப்பவளாகிய ராகேல், தன் தந்தையின் ஆடுகளுடன் அங்கே வந்தாள். 10தன்னுடைய தாய்மாமன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டதும், யாக்கோபு உடனே கிணற்றின் அருகே சென்று அதன் வாயை மூடியிருந்த கல்லை உருட்டி, தன் தாய்மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுத்தான். 11பின்பு யாக்கோபு ராகேலை முத்தமிட்டு, சத்தமாய் அழத் தொடங்கினான். 12அவன் ராகேலிடம், “நான் உன் தந்தையின் உறவினன்; ரெபேக்காளின் மகன்” என்று சொன்னான். உடனே அவள் ஓடிப் போய் அதைத் தன் தந்தைக்குச் சொன்னாள்.
13தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்டதும் அவனைச் சந்திப்பதற்காக விரைந்து வந்த லாபான், அவனைக் கட்டியணைத்து, முத்தமிட்டு தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அதுவரை நிகழ்ந்தவை யாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான். 14அப்போது லாபான் யாக்கோபிடம், “உண்மையில் நீ எனக்கு இரத்த உறவினன்#29:14 இரத்த உறவினன் – எனது எலும்பும் சதையுமானவன்.” என்றான்.
யாக்கோபின் திருமணம்
யாக்கோபு லாபானுடன் ஒரு மாதம் தங்கியிருந்தான். 15அதன் பின்னர் லாபான் யாக்கோபிடம், “நீ எனது உறவினன் என்பதால், என்னிடம் நீ ஏதும் வாங்காமல் வேலை செய்ய வேண்டுமோ? நீ விரும்பும் கூலியைக் கேள்” என்றான்.
16லாபானுக்கு இரண்டு மகள்மார் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல். 17லேயாள் பார்வை குறைந்த கண்களை#29:17 பார்வை குறைந்த கண்களை அல்லது பலவீனமான கண்கள் உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள். 18யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன், “உமது இளைய மகள் ராகேலுக்காக நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வேன்” என்றான்.
19அதற்கு லாபான், “நான் அவளை வேறொருவனுக்கு கொடுப்பதைப் பார்க்கிலும் உனக்குக் கொடுப்பது நல்லது; நீ என்னுடன் இங்கேயே தங்கியிரு” என்றான். 20அவ்வாறே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான். அவன் ராகேலின்மீது வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு ஒருசில நாட்களைப் போலத் தோன்றின.
21பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் ஒப்புக்கொண்ட காலம் நிறைவடைந்து விட்டது; ராகேலுடன் நான் சேர்ந்துகொள்ளும்படி அவளை எனக்குத் தந்தருள்வீராக!” என்றான்.
22அப்போது லாபான், அந்த இடத்தின் மக்களையெல்லாம் ஒன்றாகக்கூட்டி, ஒரு விருந்து கொடுத்தான். 23அன்று இரவு, லாபான் தன் இளைய மகளுக்குப் பதிலாக மூத்த மகள் லேயாளை யாக்கோபிடம் கொண்டுபோய் விட்டான். யாக்கோபு அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டான். 24லாபான் தன் வீட்டுப் பணிப்பெண்ணான சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக கொடுத்தான்.
25பொழுது விடிந்ததும், இதோ, யாக்கோபுடன் இருந்தவள் லேயாள்! எனவே யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் வேலை செய்தது ராகேலுக்காக அல்லவா? நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான்.
26அதற்கு லாபான், “இங்கு எமது ஊர் வழக்கத்தின்படி மூத்தவள் இருக்கும்போது இளையவளைக் கொடுக்க மாட்டோம். 27மூத்தவளுக்கு உரிய ஏழு நாட்களை நிறைவு செய். அதன்பின்பு இளையவளையும் உனக்குக் கொடுப்போம், ஆனால் அவளுக்காக நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடம் வேலை செய்யவேண்டும்” என்றான்.
28யாக்கோபு அவ்வாறே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களை அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 29லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் பில்காளை தன் மகள் ராகேலுக்குப் பணிப்பெண்ணாகக் கொடுத்தான். 30யாக்கோபு ராகேலுடன் தாம்பத்திய உறவுகொண்டான், யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான். அவன் ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் லாபானிடம் வேலை செய்தான்.
யாக்கோபின் பிள்ளைகள்
31லேயாள் நேசிக்கப்படாததை கர்த்தர் கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார், ஆனால் ராகேலோ குழந்தைப்பேறற்றவளாய் இருந்தாள். 32லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “கர்த்தர் என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்போது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று சொல்லி, அவள் அவனுக்கு ரூபன்#29:32 ரூபன் – என் துன்பத்தைக் கண்டார் என்று அர்த்தம் எனப் பெயர் சூட்டினாள்.
33மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “நான் நேசிக்கப்படாததைக் கர்த்தர் கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்#29:33 சிமியோன் – கர்த்தர் கேட்டருளினார் என்று அர்த்தம் எனப் பெயர் சூட்டினாள்.
34மீண்டும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்மாரைப் பெற்றெடுத்தேன் ஆகவே அவர் இப்போது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி#29:34 லேவி – இணை அல்லது கட்டு என்று அர்த்தம் எனப் பெயரிடப்பட்டான்.
35மீண்டும் அவள் கர்ப்பம் தரித்து, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இப்போது நான் கர்த்தரைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா#29:35 யூதா – துதி என்று அர்த்தம் எனப் பெயர் சூட்டினாள். அதன் பின்னர் அவள் பிள்ளை பெறவில்லை.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 29: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.