ஆதியாகமம் 28

28
1அப்போது ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து#28:1 ஆசீர்வதித்து பிரியாவிடை கொடுத்து என்றும் அர்த்தப்படுத்தலாம், அவனுக்குக் கட்டளையிட்டதாவது: “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே. 2உடனே பதான்-அராமிலுள்ள உன் தாயின் தந்தையான பெத்துவேலின் வீட்டுக்குப் போ. அங்கே உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்மாரில் ஒருவரை உனக்கு மனைவியாக்கிக் கொள். 3சர்வ வல்லமை கொண்ட இறைவன்#28:3 சர்வ வல்லமை கொண்ட இறைவன் – எபிரேய மொழியில் எல்-ஷடாய் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இன விருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் அளவுக்கு அவர் உன்னைப் பெருகச் செய்வாராக. 4ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இறைவன் உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பாராக. இப்போது நீ அந்நியனாய் வாழ்கின்ற இந்த நாடு ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்தது. எனவே, இதை நீ உரிமையாக்கிக் கொள்வாய்” என்றான். 5அதன் பின்னர் ஈசாக்கு, யாக்கோபை வழியனுப்பி வைத்தான்; அவன் பதான்-அராமிலிருந்த லாபானிடம் போனான். லாபான், அரமேயனான பெத்துவேலின் மகனும், யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் தாயாராகிய ரெபேக்காளின் சகோதரனும் ஆவான்.
6ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, பதான்-அராமிலிருக்கும் ஒரு பெண்ணை மனைவியாக்கிக்கொள்ள அவனை அங்கு அனுப்பி வைத்ததையும், “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது” என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், 7யாக்கோபு தன் தந்தைக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான்-அராமுக்குப் போய்விட்டதையும் ஏசா அறிந்தான். 8தன் தந்தை ஈசாக்கு கானானியப் பெண்கள் மீது எவ்வளவு வெறுப்பு கொண்டுள்ளார் என்பதை ஏசா உணர்ந்தான். 9எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மவேலிடம் போய், தனக்கு ஏற்கெனவே மனைவியர் இருந்தும், இஸ்மவேலின் மகளும் நெபாயொத்தின் சகோதரியுமான மகலாத்தை திருமணம் செய்தான்.
பெத்தேலில் யாக்கோபின் கனவு
10யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரான்#28:10 ஆரான் பதான்-அராம் நாட்டின் இன்னொரு பெயர் என்ற இடத்துக்குப் புறப்பட்டான். 11அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கி, அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்து, அதைத் தன் தலையின் கீழ் வைத்து நித்திரை செய்தான். 12அப்போது அவன் ஒரு கனவு கண்டான், அக்கனவில் பூமியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏணி வானத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. இதோ! இறைவனின் தூதர்கள் அதில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். 13கர்த்தர் அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தந்தை ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய கர்த்தர் நானே. நீ படுத்திருக்கின்ற இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14உன் சந்ததியினர் பூமியின் மண் துகள்களைப் போன்று பெருகுவார்கள். நீ மேற்கிலும், கிழக்கிலும், வடக்கிலும், தெற்கிலும் பரவிச் செல்வாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும். 15நான் உன்னுடனே இருக்கின்றேன்; நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவே மாட்டேன்” என்றார்.
16யாக்கோபு நித்திரை விட்டெழுந்தபோது, “கர்த்தர் நிச்சயமாகவே இந்த இடத்தில் இருக்கின்றார்; இதை நான் அறியாதிருந்தேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். 17அவன் பயமடைந்தவனாய், “இந்த இடம் எவ்வளவு பயங்கரமானது! இது உண்மையில் இறைவனுடைய வீடேயன்றி, வேறு எதுவும் அல்ல; இது பரலோகத்தின் வாயில்” என்றான்.
18மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றி, 19அந்த இடத்துக்கு பெத்தேல்#28:19 பெத்தேல் இறைவனின் வீடு என்று பொருள். எனப் பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணத்துக்கு லூஸ் என்ற பெயர் இருந்தது.
20பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், அணிய ஆடையும் தந்து, 21பாதுகாப்புடன் என் தந்தை வீட்டுக்குத் திரும்பி வரச் செய்வாரானால், கர்த்தரே என் இறைவனாய் இருப்பார். 22நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 28: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល