ஆதியாகமம் 25
25
ஆபிரகாமின் மரணம்
1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். 2அவள் ஆபிரகாமுக்கு சிம்ரான், யொக்ஷான், மெதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்மாரைப் பெற்றெடுத்தாள். 3யொக்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தந்தை. தேதானின் சந்ததியினர் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோராவர். 4ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா என்பவர்கள் மீதியானின் மகன்மார். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததியைச் சேர்ந்தவர்கள்.
5ஆபிரகாம் தனக்குரிய அனைத்தையும் ஈசாக்குக்கு சொத்துரிமையாகக் கொடுத்தார். 6ஆனால் தான் உயிரோடிருக்கும்போதே, தன் மறுமனைவியரின் மகன்மாரை ஈசாக்கிடமிருந்து தூர விலக்கும் வகையில், அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்து அவர்களைக் கிழக்குத் திசையில் இருந்த நாட்டுக்கு அனுப்பிவிட்டார்.
7ஆபிரகாம் நூற்று எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தார். 8ஆபிரகாம் பூரண ஆயுள் உள்ளவராய், நல்ல முதிர்வயதில் மரணித்து, தனக்கு முன் மரணித்த முன்னோர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 9அவருடைய மகன்மாரான ஈசாக்கும் இஸ்மவேலும் ஏத்தியனான சோகாரின் மகன் எப்ரோனின் காணியில், மம்ரேக்கு அருகிலுள்ள மக்பேலா எனப்படும் குகையில் அவரை அடக்கம் செய்தார்கள். 10அந்தக் காணியை ஆபிரகாம் ஏத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். ஆபிரகாம், அவர் மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 11ஆபிரகாம் மரணித்த பின்னர் அவருடைய மகன் ஈசாக்கை இறைவன் ஆசீர்வதித்தார். அப்போது ஈசாக்கு, பீர்-லகாய்-ரோயி என்ற இடத்துக்கு அருகில் குடியிருந்தான்.
இஸ்மவேலின் சந்ததி
12சாராளின் பணிப்பெண்ணான எகிப்தியப் பெண் ஆகார், ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகனாகிய இஸ்மவேலின் குடும்ப வரலாறு:
13பிறப்பின் வரிசைப்படி இஸ்மவேலின் மகன்மாரின் பெயர்களாவன:
நெபாயொத் என்பவன், இஸ்மவேலின் மூத்த மகன்.
பின்பு பிறந்தவர்கள்: கேதார், அத்பியேல், மிப்சாம்,
14மிஷ்மா, தூமா, மாசா,
15ஆதாத், தேமா, யெத்தூர்,
நாபீஸ், கேத்மா ஆகியோராவர்.
16இஸ்மவேலின் மகன்மார்களான அவர்களுடைய குடியிருப்புகள் மற்றும் முகாம்களின்படி, இவையே பன்னிரண்டு கோத்திரத் தலைவர்களின் பெயர்களாம்.
17இஸ்மவேல் நூற்று முப்பத்தேழு வருடங்கள் வாழ்ந்தான். அவன் மரணித்து, தனக்கு முன் மரணித்த முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான். 18இஸ்மவேலின் சந்ததியினர்#25:18 இஸ்மவேலின் சந்ததியினர் – எபிரேய மொழியில் அவன். ஆவிலா தொடங்கி சூர் வரைக்கும், அசீரியாவுக்குப் போகின்ற வழியில், எகிப்தின் எல்லைக்கு அருகில் குடியிருந்தார்கள். அவர்கள் தங்கள் சகோதரர் எல்லோரையும் விட்டுத் தூர விலகி#25:18 எல்லோரையும் விட்டுத் தூர விலகி – எல்லோரோடும் பகைமை கொண்டவர்களாக என்றும் மொழிபெயர்க்கலாம். வாழ்ந்து வந்தார்கள்.
யாக்கோபும் ஏசாவும்
19ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் சந்ததியினரின் குடும்ப வரலாறு:
ஆபிரகாம், தன் மகனான ஈசாக்கைப் பெற்றெடுத்தார். 20ஈசாக்கு நாற்பது வயதுடையவனாய் இருந்தபொழுது ரெபேக்காளைத் திருமணம் செய்தான். ரெபேக்காள், பதான்-அராமில் வாழ்ந்துவந்த அரமேய தேசத்தானாகிய பெத்துவேலின் மகளும், லாபானின் தங்கையுமாவாள்.
21தன் மனைவி குழந்தைப்பேறற்றவளாய் இருந்தபடியால், ஈசாக்கு அவளுக்காக கர்த்தரிடத்தில் மன்றாடினான். கர்த்தர் அவனது மன்றாடுதலைக் கேட்டதனால் அவன் மனைவி ரெபேக்காள் கர்ப்பவதியானாள். 22அவள் கர்ப்பத்திலிருந்த குழந்தைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அப்போது அவள், “எனக்கு ஏன் இப்படி நடக்கின்றது?” என்று மனம் கலங்கி, கர்த்தரிடம் விசாரிக்கப் போனாள்.
23அப்போது கர்த்தர் ரெபேக்காளிடம்,
“உன் கருப்பையில் இரண்டு இனங்கள் இருக்கின்றன;
உன்னிடம் இருந்து இரு மக்கள் கூட்டங்கள் தோன்றிப் பிரியும்.
ஒன்று மற்றயதைவிட வலிமை கொண்டதாக இருக்கும்,
மூத்தவன் இளையவனுக்குப் பணி செய்வான்”
என்றார்.
24பிரசவகாலம் வந்தபோது, அவளது கருப்பையில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. 25முதலில் பிறந்த பிள்ளை சிவந்த நிறமுடையவனாகவும், உடல் முழுவதும் முடி நிறைந்தவனாகவும் காணப்பட்டான். ஆகவே அவனுக்கு ஏசா#25:25 ஏசா என்றால் முடிகள் நிறைந்த என்று அர்த்தம். எனப் பெயர் சூட்டினார்கள். 26அதன் பின்னர் அவனுடைய சகோதரன், தன் கையினால் ஏசாவின் குதிகாலைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அதனால் அவன் யாக்கோபு#25:26 யாக்கோபு என்றால் குதிகாலைப் பற்றிப் பிடிப்பவன் என்று அர்த்தம். இது ஏமாற்றுகிறவன் என்ற எபிரேய பழமொழியின் அர்த்தமாகும். என்று பெயரிடப்பட்டான். ரெபேக்காள் இவர்களைப் பெற்றெடுத்தபோது ஈசாக்கு அறுபது வயதுடையவனாய் இருந்தான்.
27அச்சிறுவர்கள் வளர்ந்தபோது, ஏசா வேட்டையில் திறமையுள்ளவனாகவும், வனவெளிகளில் தங்குபவனாகவும் இருந்தான். ஆனால் யாக்கோபோ, நேர்த்தியான ஒருவனாக வீட்டின் கூடாரங்களில் வாழ்ந்தான். 28வேட்டை இறைச்சியில் விருப்பம் கொண்டவனான ஈசாக்கு, ஏசாவை நேசித்தான். ஆனால் ரெபேக்காளோ யாக்கோபை நேசித்தாள்.
29ஒருநாள் யாக்கோபு கூழ் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, ஏசா வெளியிலிருந்து உணவின்றி பட்டினியால் மிகவும் களைத்தவனாக வந்தான். 30அப்போது அவன் யாக்கோபிடம், “நான் உணவின்றி பட்டினியாய் இருந்து மிகவும் களைத்துப் போயிருக்கின்றேன்! நான் விழுங்கும்படி விரைவாக அந்தச் சிவப்புக் கூழில் கொஞ்சத்தை எனக்குப் போடு!” என்று கேட்டான். அதனாலேயே ஏசாவுக்கு ஏதோம்#25:30 ஏதோம் என்றால் சிவப்பு என்று அர்த்தம். என்கின்ற பெயர் உண்டாயிற்று.
31அப்போது யாக்கோபு அவனிடம், “அதற்குரிய விலையாக உனது மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை#25:31 பிறப்புரிமையை – மூத்த மகன் தன் தந்தையின் செல்வங்களையும் ஆசீர்வாதங்களையும் தனது உரிமைச் சொத்தாகப் பெறும் ஓர் முறைமை. இப்பொழுதே எனக்குத் தந்துவிடு” என்றான்.
32அதற்கு ஏசா, “இதோ பார், நான் பட்டினியால் சாகப் போகின்றேன். இந்த மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையினால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டான்.
33ஆனால் யாக்கோபு ஏசாவிடம், “முதலில் அதை எனக்கு சத்தியம் செய்துகொடு” என்றான். அவ்வாறே ஏசா ஆணையிட்டுச் சத்தியம் செய்து, தன் மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.
34அதன் பின்னர் யாக்கோபு, ஏசாவுக்கு அப்பமும், பயற்றங்கூழும் கொடுக்க, அவற்றை அவன் உண்டு, குடித்து, எழுந்து, வெளியே சென்றுவிட்டான்.
இப்படியாக ஏசா தனக்குரிய மூத்த மகனுக்குரிய பிறப்புரிமையை அற்பமாக எண்ணினான்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 25: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.