ஆதியாகமம் 19

19
சோதோம், கொமோராவின் அழிவு
1சோதோமை நோக்கிச் சென்ற தூதர்கள் இருவரும் அன்று மாலை சோதோம் பட்டணத்தை அடைந்தபோது, பட்டணத்தின் வாயிலிலே லோத்து உட்கார்ந்திருந்தான். லோத்து அவர்களைக் கண்டவுடன், அவர்களைச் சந்திப்பதற்காக எழுந்து சென்று தரைவரைக்கும் தலையைக் குனிந்தவனாக வரவேற்றான். 2லோத்து அவர்களிடம், “ஆண்டவன்மாரே, நீங்கள் இருவரும், அடியேனுடைய வீட்டுக்கு வாருங்கள். நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி இன்றிரவு என்னுடன் தங்கி, அதிகாலையில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான்.
அதற்கு அவர்கள், “வேண்டாம், நாங்கள் இன்றிரவு நகரச் சதுக்கத்திலே தங்குவோம்” என்றார்கள்.
3அவன் அவர்களை மிகவும் வற்புறுத்தி அழைத்ததால், அவர்கள் அவனுடைய வீட்டுக்குள் போனார்கள். லோத்து புளிப்பூட்டப்படாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு உணவு தயாரித்தான். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். 4அவர்கள் படுக்கைக்குப் போக முன்னதாக, சோதோம் பட்டணத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வாலிபர் முதற்கொண்டு முதியோர் வரை அனைத்து ஆண்களும் வந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். 5அவர்கள் லோத்தை அழைத்து, “இன்றிரவு, உன்னிடம் வந்த மனிதர்கள் எங்கே? நாங்கள் அவர்களுடன் உறவுகொள்ளும்படி அவர்களை வெளியே கொண்டுவா” என்றார்கள்.
6உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னால் கதவைப் பூட்டிக்கொண்டு 7அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தத் தீமையான செயலைச் செய்ய வேண்டாம். 8இதோ, எனக்கு இரண்டு மகள்மார் இருக்கின்றார்கள், அவர்கள் கன்னிப்பெண்கள். அவர்களை உங்களிடம் கொண்டுவருகின்றேன். உங்களுக்கு விருப்பமானபடி அவர்களுடன் நடந்துகொள்ளுங்கள். ஆனால் இவர்களுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். ஏனெனில், இவர்கள் என் கூரையின் கீழ் பாதுகாப்புக்காக வந்திருக்கின்றார்கள்” என்றான்.
9அதற்கு அவர்கள், “நீ அப்பால் போ; இங்கு வழிப்போக்கனாக வந்த இவன் எங்களுக்கு நீதிபதியாக நடக்கத் துணிந்து விட்டானே! அவர்களைவிட உன்னை மோசமாக நடத்துவோம்” என்று சொல்லி, லோத்தை அழுத்தித் தள்ளிவிட்டு, கதவை நெருங்கி அதை உடைக்க முயன்றார்கள்.
10ஆனால், வீட்டுக்குள் இருந்த மனிதர்கள் இருவரும், தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தை வீட்டுக்குள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார்கள். 11அதன் பின்னர் அந்த மனிதர்கள், வீட்டுக்கு வெளியே நின்ற வாலிபர் முதற்கொண்டு முதியோர் வரை எல்லோருடைய கண்களையும் பார்வையிழக்கச் செய்தார்கள். அதனால் வெளியே நின்றிருந்தவர்கள் வீட்டு வாசல் புறத்தைத் தேடி அதைக் கண்டுபிடிக்க முடியாமல் களைத்துப் போனார்கள்.
12அவ்விருவரும் லோத்திடம், “இங்கு உனக்கு வேறு யாராவது இருக்கின்றார்களா? உன் மகன்மாரோ, மகள்மாரோ, மருமகன்மாரோ அல்லது உனக்குச் சொந்தமான வேறு யாரேனும் இங்கு இருந்தால், அவர்களையும் அழைத்துக்கொண்டு இங்கிருந்து வெளியேறு. 13ஏனெனில், நாங்கள் இந்த இடத்தை அழிக்கப் போகின்றோம்; இங்கு உள்ளவர்களுக்கு எதிராக, கர்த்தரின் முன்னிலையில் எட்டியுள்ள கூக்குரல் மிகவும் பெரிதாக இருக்கின்றது. அதனால், இந்தப் பட்டணத்தை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கின்றார்” என்றார்கள்.
14உடனே லோத்து வெளியே போய், தன் மகள்மாருக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த மருமகன்மாரிடம், “விரைவாய் இந்த இடத்தைவிட்டு வெளியேறுங்கள். ஏனெனில், கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகின்றார்” என்றான். ஆனால் அவனுடைய மருமகன்மாரோ, லோத்து விளையாட்டாக இப்படிச் சொல்கின்றான் என்று நினைத்தார்கள்.
15பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் மகள்மார் இருவரையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இந்தப் பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்து போவாய்” என்றார்கள்.
16லோத்து தயங்கியபோது, கர்த்தர் லோத்தின் குடும்பத்தார்மீது இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் மகள்மார் இருவருடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். 17அவர்கள் வெளியே வந்ததும், அந்த மனிதர்களில் ஒருவர் அவர்களிடம், “உயிர்தப்பும்படி பட்டணத்தைவிட்டு ஓடிப் போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் நில்லாமல் மலைகளுக்கு ஓடிப் போங்கள். இல்லாவிட்டால் நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.
18அதற்கு லோத்து, “ஆண்டவரே, தயவுசெய்து அவ்வாறு வேண்டாம். 19நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான இரக்கம் காண்பித்து என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை எட்டியதும் நான் மரணித்து விடுவேன். 20இதோ நான் தப்பியோடக்கூடிய தூரத்தில், அருகில் ஒரு சிறிய பட்டணம் இருக்கின்றது; அது ஒரு சிறிய பட்டணம் அல்லவா? எனவே அங்கே நான் தப்பியோட அனுமதியுங்கள். அப்போது நான் உயிர்பிழைப்பேன்” என்றான்.
21அதற்கு அந்தத் தூதர் லோத்திடம், “நல்லது, இதிலும் உன் வேண்டுகோளின்படியே, நீ சொன்ன அந்தப் பட்டணத்தை நான் அழிக்காது விடுகிறேன். 22ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கே போய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்ய முடியாது” என்றார். அதனால் அந்தப் பட்டணம் சோவார்#19:22 சோவார் என்பதற்கு சிறிய பட்டணம் அல்லது சிறிய இடம் என்று பொருள். என அழைக்கப்பட்டது.
23லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த இடத்தின் மேலாக சூரியன் உதிக்கும் நேரம் வந்துவிட்டது. 24அப்போது கர்த்தர், எரியும் கந்தகத்தை சோதோமின்மீதும், கொமோராவின்மீதும் மழை போன்று பொழியச் செய்தார். வானத்திலிருந்து கர்த்தரால் அது பொழியப்பட்டது. 25இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களையும், அதில் வாழ்ந்த குடிமக்களையும், சமபூமி முழுவதையும், நிலத்தின் தாவரங்களையும் அழித்தார். 26ஆனால் லோத்தின் மனைவியோ திரும்பிப் பார்த்தாள்; அதனால் அவள் உப்புத் தூண் ஆனாள்.
27அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு கர்த்தரின் முன்னிலையில் நின்ற இடத்துக்குத் திரும்பிப் போனார். 28அங்கிருந்து அவர் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழுகின்ற புகையைப் போல் அந்த நாட்டிலிருந்து பெரும் புகை மேலெழுவதைக் கண்டார்.
29இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில் கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்தப் பேரழிவிலிருந்து லோத்தை வெளியேற்றிக் கொண்டுவந்து காப்பாற்றினார்.
லோத்தும் அவன் மகள்மாரும்
30அதன் பின்னர், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததனால், தன் மகள்மார் இருவருடன் சோவாரை விட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், அவனும் இரண்டு மகள்மாரும் ஒரு குகையில் வசித்தார்கள். 31ஒருநாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தந்தை வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்முடன் தாம்பத்திய உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை. 32நமது தந்தையை திராட்சை மதுவை குடிக்கச் செய்து அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது சந்ததியைப் பாதுகாப்போம்” என்றாள்.
33அவ்வாறே அவர்கள் அன்றிரவு தங்கள் தந்தைக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவு கொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை.
34மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தந்தையுடன் நான் உறவு கொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்து, நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தந்தை மூலமாய், நாம் நமது குடும்ப சந்ததியைப் பாதுகாப்போம்” என்றாள். 35அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தைக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவு கொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை.
36இவ்விதமாக லோத்தின் மகள்மார் இருவரும் தங்கள் தந்தையால் கருத்தரித்தார்கள். 37மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப்#19:37 மோவாப் என் தந்தையிடமிருந்து என்று அர்த்தம் எனப் பெயர் சூட்டினாள். இவனே இக்காலத்து மோவாபியரின் தந்தை ஆவான். 38இளைய மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி#19:38 பென்னமி – இந்த பெயரின் அர்த்தம் என் உறவினரின் மகன் என்பதாகும் எனப் பெயர் சூட்டினாள். இவனே இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தந்தை ஆவான்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 19: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល