18
மூன்று விருந்தினர்கள்
1இதன் பின்னர், கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக்#18:1 ஆபிரகாமுக்கு – எபிரேய மொழியில் அவருக்கு காட்சியளித்தார். வெப்பமான ஒரு பகற்பொழுதில், மம்ரேயின் கருவாலி மரங்களின் அருகே ஆபிரகாம் தன்னுடைய கூடார வாசலில் உட்கார்ந்திருக்கையில் இது நடந்தது. 2ஆபிரகாம் நிமிர்ந்து பார்த்தபோது, சிறிது தொலைவில் மூன்று மனிதர்கள் நிற்பதைக் கண்டார். அவர் அவர்களைக் கண்டபோது, அவர்களைச் சந்திப்பதற்காக தன் கூடார வாசலில் இருந்து விரைந்து சென்று, தரை வரையும் தலைகுனிந்தபடி வரவேற்றார்.
3அவர், “என் ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருந்தால், உமது அடியவனிடம் வராமல் போய்விட வேண்டாம். 4நீங்கள் அனைவரும் உங்கள் கால்களைக் கழுவும்படியாக கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரலாமா? அப்போது நீங்கள் இம்மரத்தின் கீழ் இளைப்பாறலாம். 5இப்போது நீங்கள் அடியேனிடம் வந்திருக்கின்றபடியால், உணவு அருந்தி புத்துணர்வு பெற ஏதாவது கொண்டுவருகின்றேன்; பின்னர் நீங்கள் உங்கள் வழியே போகலாம்” என்றார்.
அதற்கு அவர்கள், “நல்லது, நீ சொன்னபடியே செய்வாயாக” என்றார்கள்.
6உடனே ஆபிரகாம் கூடாரத்துக்குள் விரைந்து சென்று சாராளிடம், “மெல்லிய மாவில் மூன்றுபடி#18:6 மூன்றுபடி – எபிரேய மொழியில் சியா. சுமார் 16 கிலோ கிராம். எடுத்துப் பிசைந்து கொஞ்சம் அப்பங்களை விரைவாகச் சுடு” என்றார்.
7ஆபிரகாம் தன் மாட்டு மந்தையை நோக்கி ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைத் தெரிந்தெடுத்து, அதை ஒரு பணியாளனிடம் கொடுத்தார்; அவன் அதைச் சமைப்பதற்கு விரைந்தான். 8உணவு தயாரான பின்னர் வெண்ணெயையும், பாலையும், சமைத்த இளங்கன்றின் இறைச்சியையும் கொண்டுவந்து அவர்கள் முன்பாகப் பரிமாறினார். அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது, அவர் அவர்களுக்கு அருகிலேயே ஒரு மரத்தின் கீழ் நின்றார்.
9அவர்கள் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார்கள்.
“அவள் கூடாரத்தில் இருக்கின்றாள்” என்றார்.
10அப்போது அவர்களில் ஒருவர்#18:10 அவர்களில் ஒருவர் – எபிரேய மொழியில் அவர், “அடுத்த வருடம் இதே காலத்தில் நான் நிச்சயமாக மீண்டும் உன்னிடம் வருவேன், அப்போது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
அவர்களுக்குப் பின்னால் இருந்த கூடாரத்தின் வாசலிலே நின்று சாராள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள், சாராளும் தன் உடலில் குழந்தைப்பேறுக்கான பருவம் கடந்துவிட்டவளாக இருந்தாள். 12எனவே சாராள், “என் உடல் தளர்ந்து என் கணவரும் வயது சென்றவராகி விட்டபடியால், எனக்கு இன்பம் உண்டாகுமோ?” என நினைத்துத் தனக்குள்ளே சிரித்தாள்.
13அப்போது கர்த்தர் ஆபிரகாமிடம், “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்கையில் உண்மையாய்ப் பிள்ளை பெறுவேனோ?’ என்று கூறி சாராள் சிரித்தது ஏன்? 14கர்த்தரால் செய்ய முடியாதது என்று ஏதேனும் உண்டோ? நான் அடுத்த வருடம் நியமிக்கப்பட்ட காலத்தில் மீண்டும் உன்னிடம் வருவேன், அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார்.
15சாராள் பயந்ததனால், “நான் சிரிக்கவில்லை” என்று மறுத்தாள்.
அதற்கு அவர், “ஆம், நீ உண்மையாய்ச் சிரித்தாய்” என்றார்.
ஆபிரகாம் சோதோமுக்காக மன்றாடல்
16பின்பு அந்த மனிதர்கள் புறப்படுவதற்காக எழுந்ததும், அவர்கள் சோதோமை நோக்கிப் பார்த்தார்கள்; ஆபிரகாம் அவர்களை வழியனுப்பும்படியாக அவர்களோடு போனான். 17அப்போது கர்த்தர், “நான் செய்யப் போவதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா? 18நிச்சயமாக ஆபிரகாமின் சந்ததியினர்#18:18 ஆபிரகாமின் சந்ததியினர் – எபிரேய மொழியில் ஆபிரகாம் பெரியதும் வலிமை மிகுந்ததுமான ஒரு இனமாவார்கள். அவன் மூலமாக பூமியின் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும். 19அவன் தனக்குப் பின்னர் தனது பிள்ளைகளும், தனது குடும்பமும் சரியானதையும் நீதியானதையும் செய்து, கர்த்தரின் வழியைக் கடைப்பிடிக்கும்படி அவர்களை வழிநடத்துவதற்காக, நானே அவனைத் தெரிவுசெய்தேன். அப்போது கர்த்தராகிய நான் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்#18:19 எபிரேய மொழியில் கர்த்தர் நிறைவேற்றுவார் என்றுள்ளது” என்று தமக்குள் கூறிக்கொண்டார்.
20அதன் பின்னர் கர்த்தர், “சோதோம், கொமோரா என்ற பிரதேசங்களில் உள்ள பாவம் மிகவும் கொடியதாய் இருக்கின்றது, அவர்களுக்கு விரோதமான கூக்குரலும் பெரிதாக எழுந்திருக்கின்றது. 21அவர்களின் செய்கைகள், எனக்கு எட்டிய கூக்குரலுக்கேற்ப கொடியதாய் இருக்கின்றனவோ என்று நான் போய்ப் பார்த்து அறிவேன்” என்றார்.
22பின்பு அவர்களில் இருவர் அந்த இடத்தைவிட்டுத் திரும்பி சோதோமை நோக்கிப் போனார்கள், ஆனால் கர்த்தர் ஆபிரகாமிற்கு முன்பாக நின்றார்.#18:22 சில பிரதிகளில் ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக மன்றாடி நின்றார் என்றுள்ளது 23ஆபிரகாம் கர்த்தரை அணுகி, “கொடியவர்களுடன் நீதிமான்களையும் அழிப்பீரோ? 24ஒருவேளை பட்டணத்தில் நீதிமான்கள் ஐம்பது பேர் இருந்தால் அதை அழிப்பீரோ? அந்த ஐம்பது நீதிமான்களுக்காக அதை அழிக்காது விடமாட்டீரோ? 25கொடியவர்களுடன் நீதிமான்களை கொல்வதும், கொடியவர்களையும் நீதிமான்களையும் ஒரேவிதமாக நடத்துவதும் உமக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல. அது உமக்குத் தூரமாயிருப்பதாக! பூமி முழுவதற்கும் நீதிபதியானவர் நியாயத்தைச் செய்ய மாட்டாரோ?” என்று கேட்டார்.
26அதற்கு கர்த்தர் ஆபிரகாமிடம், “நீதிமான்கள் ஐம்பது பேரை சோதோம் பட்டணத்தில் நான் காண்பேனாகில், அவர்களின் பொருட்டு அந்த இடம் முழுவதையும் அழிக்காது விட்டுவிடுவேன்” என்றார்.
27மறுபடியும் ஆபிரகாம், “புழுதியும் சாம்பலுமான நான் ஆண்டவரோடு பேசத் துணிவுகொண்டேன், 28ஒருவேளை நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் மட்டும் இருந்தால், ஐந்து பேர் குறைவாக இருப்பதனால் அந்த முழுப் பட்டணத்தையும் அழிப்பீரோ?” எனக் கேட்டார்.
அதற்கு கர்த்தர், “நீதிமான்கள் நாற்பத்தைந்து பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்க மாட்டேன்” என்றார்.
29மேலும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை நீதிமான்கள் நாற்பது பேர் மட்டும் இருந்தால்?” என்றார்.
அதற்கு அவர், “நாற்பது பேர் இருந்தாலும் நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
30பின்பு ஆபிரகாம், “நான் மறுபடியும் பேச முற்படுவதையிட்டு ஆண்டவர் என்னோடு கோபம் கொள்ளாதிருப்பாராக, முப்பது பேர் மட்டும் இருப்பார்களானால் என்ன செய்வீர்?” என்றார்.
அதற்கு அவர், “முப்பது பேர் அங்கிருந்தாலும் அதை அழிக்க மாட்டேன்” என்றார்.
31அதற்கு ஆபிரகாம், “இப்போது ஆண்டவரோடு நான் பேசத் துணிவுகொண்டிருக்கின்றேன், ஒருவேளை இருபது பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றார்.
அதற்கு அவர், “அந்த இருபது பேருக்காகவும் அதை அழிக்க மாட்டேன்” என்றார்.
32மறுபடியும் ஆபிரகாம், “நான் இன்னும் ஒருமுறை பேசுவதையிட்டு ஆண்டவர் என்னோடு கோபம் கொள்ளாதிருப்பாராக. பத்துப் பேர் மட்டும் அங்கிருந்தால் என்ன செய்வீர்?” என்றார்.
அதற்கு அவர், “அந்த பத்துப் பேருக்காகவும் அதை நான் அழிக்க மாட்டேன்” என்றார்.
33கர்த்தர் ஆபிரகாமோடு பேசியபின், அந்த இடத்தைவிட்டுப் போனார். ஆபிரகாமும் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிச் சென்றார்.