20
ஆபிரகாமும் அபிமெலேக்கும்
1பின்னர் ஆபிரகாம், தான் தங்கியிருந்த இடத்தைவிட்டு நெகேப் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து, காதேசுக்கும் சூர் எனப்பட்ட இடத்துக்கும் நடுவில் சென்று வசித்தார். பின்னர் கேரார் என்ற பட்டணத்தில் சிறிது காலம் தங்கினார். 2ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளை, “இவள் என் சகோதரி” என்று கூறியிருந்தார். அப்போது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன்னுடைய ஆட்களை அனுப்பி, சாராளை தனக்கென அழைத்துச் சென்றான்.
3ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவின் கனவில் தோன்றி, “நீ உனக்கென அழைத்து வந்திருக்கும் பெண்ணின் காரணமாக இதோ நீ மரணித்தாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கின்றாள்” என்றார்.
4அபிமெலேக்கு அதுவரை சாராளோடு தாம்பத்திய உறவு கொண்டிருக்கவில்லை; அதனால் அவன், “ஆண்டவரே, குற்றமற்ற மக்களை நீர் அழிப்பீரோ? 5‘இவள் எனது சகோதரி’ என்று ஆபிரகாம்#20:5 ஆபிரகாம் – எபிரேய மொழியில் அவன் என்றுள்ளது. என்னிடம் கூறினான் அல்லவா? அவளும், ‘ஆபிரகாம் என் சகோதரன்’ என்று சொல்லவில்லையா? அதனால் சுத்த மனசாட்சியுடனும், குற்றமற்ற கைகளுடனுமே நான் இதைச் செய்தேன்” என்றான்.
6இறைவன் அந்தக் கனவில் அவனிடம், “ஆம், சுத்த மனசாட்சியுடனே நீ இதைச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும். அதனால் நீ எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக்கொண்டேன். அவளைத் தொட உன்னை நான் அனுமதிக்கவில்லை. 7அந்தப் பெண்ணை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பி விடு, அவன் ஒரு இறைவாக்கினன்; அவன் உனக்காக மன்றாடுவான், நீ பிழைப்பாய். நீ அவளைத் திருப்பி அனுப்பாவிட்டால், நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரணிப்பது நிச்சயம்#20:7 இறைவனின் தண்டனையினால் மரணிப்பார்கள் என்று பொருள்.” என்றார்.
8அடுத்தநாள் அதிகாலையிலே அபிமெலேக்கு எழுந்து, தன் பணியாளர்கள் அனைவரையும் அழைப்பித்து, நடந்த யாவற்றையும் அவர்களுக்குச் சொன்னான்; அப்போது அவர்கள் மிகவும் பயந்தார்கள். 9அதன் பின்னர் அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து, “நீர் எங்களுக்குச் செய்திருப்பது என்ன? நீர் என்மீதும் என் அரசின்மீதும் இத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கு நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? ஒருவரும் செய்யத் தகாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீர்!” என்றான். 10மேலும் அபிமெலேக்கு, “நீர் இதைச் செய்ததன் காரணமென்ன?” என்று ஆபிரகாமிடம் கேட்டான்.
11ஆபிரகாம் அதற்குப் பதிலளித்து, “இந்த இடத்தில் நிச்சயமாக இறைவனைப்பற்றிய பயம் இல்லையென்றும், அதனால் என் மனைவியை அபகரிப்பதற்காக என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்றும் நினைத்தேன். 12அவள் என் சகோதரி என்பது உண்மையே. அவள் என் தாய்க்குப் பிறக்காவிட்டாலும், என் தந்தையின் மகளாய் இருக்கின்றாள்; எனக்கு அவள் மனைவியானாள். 13இறைவன் என்னை என் தந்தையின் குடும்பத்தைவிட்டு இடத்துக்கிடம் அலைந்து திரியச் செய்தபோது, நான் அவளிடம், ‘நாம் எங்கு சென்றாலும், நீ தயவுசெய்து என்னை உன் சகோதரன் என்று சொல்ல வேண்டும்’ என்பதாக கூறியிருந்தேன்” என்றார்.
14அப்போது அபிமெலேக்கு செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் அடிமைகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவரது மனைவி சாராளையும் அவரிடத்தில் திரும்ப ஒப்படைத்தான். 15அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கின்றது. நீ விரும்பிய இடத்தில் குடியிரு” என்றான்.
16அவன் சாராளைப் பார்த்து, “உன் சகோதரனுக்கு ஆயிரம் சேக்கல்#20:16 ஆயிரம் சேக்கல் – சுமார் 12 கிலோ வெள்ளி. இதன் பெறுமதி சுமார் 1000 நாட்களுக்குரிய சம்பளம். வெள்ளிக் காசைக் கொடுக்கின்றேன். உனக்கு எதிராக ஏற்பட்ட குற்றத்துக்கு நட்டஈடாக, இங்கு உன்னுடன் நிற்கின்றவர்களுக்கு முன்பாக நான் இவற்றைக் கொடுக்கின்றேன். நீ குற்றமற்றவள் என்று முற்றாக நிரூபிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான்.
17ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் செய்தபோது, அவர் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வீட்டிலுள்ள பணிப்பெண்களையும் குணமாக்கி, அவர்கள் மீண்டும் குழந்தைப்பேறு உள்ளவர்களாகும்படிச் செய்தார். 18ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளுக்கு ஏற்பட்டதான இந்த விடயம் காரணமாகவே, கர்த்தர் அபிமெலேக்கின் வீட்டில் உள்ளவர்கள் கருத்தரிக்க முடியாதபடி#20:18 எபிரேய மொழியில் கருப்பைகளை அடைத்திருந்தார் என்றுள்ளது. செய்திருந்தார்.