ஆதியாகமம் 14
14
ஆபிராம் லோத்துவை காப்பாற்றுதல்
1அந்நாட்களில் சிநெயாரின்#14:1 சிநெயாரின் – பாபிலோனியா அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயிமின் அரசன் திதியால் ஆகியோர் 2சோதோமின் அரசன் பேரா, கொமோராவின் அரசன் பிர்சா, அத்மாவின் அரசன் சினாபு, செபோயிமின் அரசன் செமேபர், பேலா என்னும் சோவாரை ஆண்ட அரசன் ஆகியோருடன் யுத்தம் செய்யப் புறப்பட்டார்கள். 3பின்னர் படையெடுப்பை எதிர்த்த அரசர்கள், தங்கள் படைகளுடன் உப்புக் கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள். 4பன்னிரண்டு வருடங்களாக கெதர்லாகோமேரின் ஆதிக்கத்துக்குள் இருந்த இவர்கள், பதின்மூன்றாம் வருடத்தில் கலகம் செய்தார்கள்.
5பதினான்காவது வருடத்தில், கெதர்லாகோமேரும் அவனுடன் கூட்டுச் சேர்ந்த அரசர்களும் ஒன்றுசேர்ந்து, அஸ்தரோத்-கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியரையும், காமிலிருந்த சூசிமியரையும், சாவே-கீரியாத்தாயீமிலே இருந்த ஏமியரையும், 6பாலைவனத்துக்கு அருகே ஏல்-பாரான் வரையுள்ள சேயீர் மலைநாட்டில் வாழ்ந்த ஓரியரையும் தோற்கடித்தார்கள். 7பின்பு அவர்கள் மறுபக்கம் திரும்பி, காதேஸ் எனப்படும் என்-மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியரின் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். அத்தோடு அத்சாத்சோன்-தாமாரில் இருந்த எமோரியரையும் வெற்றிகொண்டார்கள்.
8அப்போது அவர்களை எதிர்க்க சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் (அதாவது சோவார்), பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். சித்தீம் பள்ளத்தாக்கில் 9ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயிமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், எதிர்த்து நின்ற இந்த ஐந்து அரசர்களுடன் போரிட்டார்கள் 10சித்தீம் பள்ளத்தாக்கில் தார்#14:10 தார் – இயல்பான தார் அல்லது நிலக்கீல் நிரம்பிய குழிகள் குழிகள் பல இருந்தன; அந்தப் போரில் சோதோம், கொமோரா நாட்டு அரசர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடியபோது, சில போர்வீரர்கள் அக்குழிகளில் விழுந்தார்கள்; மற்றவர்கள் மலைப் பிரதேசத்துக்கு தப்பியோடிப் போனார்கள். 11வெற்றியடைந்த நான்கு அரசர்களும், சோதோமிலும் கொமோராவிலும் இருந்த எல்லாப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டு தமது வழியில் சென்றார்கள். 12அத்துடன், ஆபிராமின் சகோதரனின் மகனாகிய லோத்து சோதோமில் குடியிருந்தபடியால், அவனையும் அவனது உடைமைகளையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றார்கள்.
13அவர்களிடமிருந்து தப்பியோடிய ஒருவன், எபிரேயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்போது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தார்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆனேர் என்போரின் சகோதரன் ஆவான். 14தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேருடன் தாண் எனும் இடம்வரை அவர்களைத் துரத்திச் சென்றார். 15அன்றிரவு ஆபிராம் தன்னுடைய ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கியழித்தார். அவர் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபா வரை துரத்திச் சென்றார். 16அவர் எதிரிகள் கைப்பற்றிச் சென்ற எல்லாவற்றையும், லோத்தையும், அவனுடைய அனைத்து உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினார்.
17ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனோடு சேர்ந்த நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்த பின்னர், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்குக்கு சோதோமின் அரசன் வந்தான்.
18அப்போது சாலேமின்#14:18 சாலேமின் – எருசலேம் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். மெல்கிசேதேக்கு என்பவர் அதிஉன்னதமான இறைவனின் மதகுருவாய் இருந்தார். 19அவர் ஆபிராமை ஆசீர்வதித்து,
“வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய,
அதிஉன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
20உமது பகைவரை உமது கையில் ஒப்படைத்த,
அதிஉன்னதமான இறைவன் துதிக்கப்படுவாராக”
என்றார்.
ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தார்.
21அதன் பின்னர் சோதோமின் அரசன், “என்னுடைய ஆட்களை என்னிடம் திருப்பிக் கொடுத்திடுவீர், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்று ஆபிராமிடம் கேட்டான்.
22ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய அதிஉன்னதமான இறைவனாகிய கர்த்தரை நோக்கி கைகளை உயர்த்தி சத்தியம் செய்து சொல்கின்றது என்னவெனில், 23‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உம்மிடமிருந்து ஒரு நூலையோ, காலணியின் வாரையோ அல்லது உமக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். 24என்னுடைய இந்த இளம் வீரர்கள் சாப்பிட்டது தவிர வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அத்துடன் என்னுடன் வந்த ஆனேர், எஸ்கோல், மம்ரே ஆகியோர் தங்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
ஆதியாகமம் 14: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.