யாத்திராகமம் 5
5
வைக்கோல் இல்லாமல் செங்கற்கள்
1அதன் பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “ ‘பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போக விடு’ என்று இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தர் சொல்கின்றார்” என்றார்கள்.
2அதற்குப் பார்வோன், “நான் அவருக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அந்த கர்த்தர் யார்? எனக்குக் கர்த்தரைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிட மாட்டேன்” என்றான்.
3அப்போது அவர்கள், “எபிரேயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்போது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பிரயாணம் செய்து, இறைவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவதற்காக எங்களைப் போக விடுவீராக. இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ, வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள்.
4அதற்கு எகிப்தின் அரசன், “மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஏன் மக்களை வேலை செய்வதிலிருந்து விலக்குகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப் போங்கள்!” என்றான். 5மேலும் பார்வோன், “பாருங்கள், இப்போது இந்த நாட்டில் உங்கள் மக்கள் எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கின்றார்கள்; அவ்வாறிருக்க நீங்கள் அவர்கள் வேலை செய்வதை நிறுத்துகிறீர்களே!” என்றான்.
6அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் உத்தரவு கொடுத்து, 7“நீங்கள் முன்பு செய்தது போல் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக் கூடாது; அவர்களே போய் அவர்களுக்கு வைக்கோலைச் சேர்க்கட்டும். 8ஆனால் முன்பு செய்த அதேயளவு செங்கற்களைத் தயாரிக்கும்படி சொல்லுங்கள்; ஒவ்வொருவருக்குமுரிய எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலி செலுத்த அனுமதியும்’ என்று கெஞ்சுகிறார்கள். 9பொய்களை நம்பாமல், தொடர்ந்து வேலை செய்யும்படி அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்” என்றான்.
10அப்போது அடிமைகளை நடத்தும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் போய், “ ‘இனிமேல் வைக்கோல் கொடுக்க மாட்டேன். 11வைக்கோல் கிடைக்கும் இடங்களுக்குப் போய், உங்களுக்கான வைக்கோலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்; ஆயினும் உங்கள் வேலை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது’ என்று பார்வோன், சொல்கிறான்” என்றார்கள். 12எனவே மக்கள் வைக்கோலுக்குப் பதிலாக வயலில் விடப்பட்ட பயிரின் அடித் தாள்களை சேர்ப்பதற்கு எகிப்து முழுவதும் சிதறுண்டு போனார்கள். 13அடிமைகளை நடத்தும் அதிகாரிகள், “வைக்கோல் இருக்கும்போது செய்தது போலவே, ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்ட அளவின்படியே வேலை செய்யவேண்டும்” என அவர்களை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். 14பார்வோனின் அடிமைகளை நடத்தும் அதிகாரிகள், தாங்கள் நியமித்த இஸ்ரயேலர் மேற்பார்வையாளர்களை அடித்தார்கள். அவர்கள், “நீங்கள் ஏன் உங்களுக்கென குறிக்கப்பட்ட செங்கற்களை முன்பு செய்தது போல நேற்றும் இன்றும் செய்யவில்லை” என்று கேட்டார்கள்.
15அப்போது இஸ்ரயேல் மேற்பார்வையாளர்கள் பார்வோனிடம் சென்று, “நீங்கள் ஏன் உங்கள் பணியாளர்களான எங்களை இவ்விதமாய் நடத்துகிறீர்கள்? 16உமது பணியாளர்களான எங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படவில்லை; அவ்வாறிருந்தும் செங்கல் சுடும்படி கேட்கப்பட்டு உங்கள் பணியாளர்களால் நாங்கள் அடிக்கப்படுகிறோம்; ஆனாலும், குற்றம் உமது சொந்த மக்களில் இருக்கின்றது” என்றார்கள்.
17அதற்குப் பார்வோன், “சோம்பேறிகளே! நீங்கள் சோம்பேறிகளாய் இருப்பதனால்தான் ‘நாங்கள் போய் எங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த அனுமதியும்’ என்கின்றீர்கள். 18இப்போது போய் வேலை செய்யுங்கள். உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்பட மாட்டாது, ஆனாலும் நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே எண்ணிக்கையின்படி செங்கற்களைத் தயாரிக்க வேண்டும்” என்றான்.
19“ஒவ்வொருநாளும் தயாரிக்கப்பட வேண்டிய செங்கற்களின் எண்ணிக்கையை நீங்கள் குறைக்கக் கூடாது” என்று இஸ்ரயேல் மேற்பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டபோது, தாம் சிக்கலில் இருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். 20அவர்கள் பார்வோனிடம் இருந்து திரும்பி வரும்போது, மோசேயும் ஆரோனும் தங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிப்பதைக் கண்டார்கள். 21அப்போது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்ப்பாராக! நீங்கள் எங்களைப் பார்வோனுக்கும் அவனுடைய அலுவலர்களுக்கும் அருவருப்பானவர்களாக்கி, எங்களைக் கொல்லும்படி அவர்களின் கைகளில் வாளையும் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
வாக்குக் கொடுக்கப்பட்ட இறைவனின் விடுதலை
22மோசே கர்த்தரிடம் திரும்பிப் போய், “ஆண்டவரே, ஏன் இந்த மக்களுக்கு தீமை செய்திருக்கின்றீர்? ஏன் என்னை இங்கே அனுப்பினீர்? 23நான் பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதிலிருந்து, அவன் இந்த மக்களை வேதனைப்படுத்துகிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே!” என்றார்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 5: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.