யாத்திராகமம் 4
4
மோசேக்கு வழங்கப்பட்ட அடையாளங்கள்
1மோசே கர்த்தருக்கு மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘கர்த்தர் உனக்கு காட்சியளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றார்.
2அதற்குக் கர்த்தர் மோசேயிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அவர், “ஒரு மேய்ப்பனின் கோல்” என்றார்.
3“அதைத் தரையில் எறிந்து விடு” என்று கர்த்தர் சொன்னார்.
மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாய் மாறியது, மோசே அதற்கு விலகி ஓடினார். 4அப்போது கர்த்தர், “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தார்; அது அவரது கையில் கோலாக மாறியது. 5“இது ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் தந்தையரின் இறைவனாகிய கர்த்தர் உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்புவதற்காகவே” என்று கர்த்தர் சொன்னார்.
6மேலும் கர்த்தர் மோசேயிடம், “உன் கையை உன் மேலாடையினுள் வைப்பாயாக” என்றார். எனவே மோசே தன் கையை மேலாடையினுள் வைத்தார்; அவர் அதை வெளியே எடுத்தபோது, இதோ அவருடைய கையில் உறைபனியைப் போல் குஷ்டம்#4:6 குஷ்டம் – எபிரேய மொழியில் பல்வேறு தோல்நோய்களைக் குறிக்கிறது பீடித்திருந்தது.
7“இப்போது மீண்டும் உனது கையை மேலாடையினுள் வைப்பாயாக” என்றார். அவ்வாறே மோசே மறுபடியும் மேலாடையினுள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது குணமடைந்து உடலின் மற்றைய பகுதிகளைப் போல் மாறியிருந்தது.
8பின்பு கர்த்தர், “அவர்கள் உன்னை நம்பாமல், அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனத்தில்கொள்ளாமல் போனால், இரண்டாவதை நம்பக் கூடும். 9இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாலும், அல்லது நீ சொல்வதைக் கேளாமலும் போனால், நைல் நதியிலிருந்து சிறிது தண்ணீர் எடுத்து அதைக் உலர்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கின்ற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.
10அதற்கு மோசே கர்த்தரிடம், “ஆண்டவரே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியவனுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத் திறன் உடையவனாய் இருக்கவில்லை; நான் திக்குவாயன், மந்த நாவுள்ளவன்” என்றார்.
11அப்போது கர்த்தர் அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை வாய் பேச இயலாதவனாகவும் செவிப்புலனற்றவனையும் ஆக்குகின்றவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, பார்வையற்றவனாக்குவதோ யார்? கர்த்தராகிய நான் அல்லவா? 12ஆதலால் நீ இப்போது போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவி செய்து, நீ சொல்ல வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.
13அதற்கு மோசே, “ஆண்டவரே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பிடுவீர்” என்றார்.
14அதனால் மோசேக்கு எதிராக கர்த்தரின் கோபம் மூண்டது. அவர், “அவ்வாறானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கின்றான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், அவன் உன்னைக் கண்டதும் மகிழ்ச்சி அடைவான். 15நீ அவனுடன் பேசி, அவன் சொல்ல வேண்டிய வார்த்தைகளை அவனிடம் சொல்; அப்போது நீங்கள் இருவரும் பேசுவதற்கு நான் உதவி செய்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் கற்பிப்பேன். 16அவன் உனக்காக இஸ்ரயேல் மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவனாய் இருப்பாய். 17அத்தோடு நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை நீ செய்வாய்” என்றார்.
மோசே எகிப்துக்குத் திரும்புதல்
18அதன் பின்னர் மோசே தன் மாமனார் எத்திரோவிடம் திரும்பிப் போய் அவனிடம், “நான் எகிப்திலுள்ள என் சொந்த மக்களிடம் மறுபடியும் போய், அவர்களில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா என்று பார்க்க என்னைப் போக விடுவீராக” என்றார்.
அதற்கு எத்திரோ, “சமாதானத்துடன் போய் வா” என்றான்.
19மீதியான் தேசத்தில் கர்த்தர் மோசேயிடம், “உன்னைக் கொலை செய்யத் தேடின எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்துக்குத் திரும்பிப் போ” என்று சொல்லியிருந்தார். 20எனவே மோசே தன் மனைவியையும், மகன்மாரையும் கழுதையின்#4:20 கழுதையின் – குதிரையைப் போலவே சவாரி செய்ய வளர்க்கப்பட்டது. மேல் ஏற்றிக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டார். மோசே இறைவனின் கோலை தன்னுடன் எடுத்துச் சென்றார்.
21அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ எகிப்துக்குத் திரும்பிப் போன பின்பு, நான் உனக்கு செய்யும்படி வல்லமை கொடுத்த அற்புதங்களை எல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்து காண்பிப்பதில் கவனமாயிரு; ஆனால் நானோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவன் மக்களைப் போகவிட மாட்டான். 22அப்போது நீ பார்வோனிடம் சொல்ல வேண்டியதாவது, ‘கர்த்தர் சொல்வது இதுவே: இஸ்ரயேல் எனது மூத்த மகன், 23என்னை வழிபடும்படி என் மகனைப் போக விடு என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆனால் நீயோ, அவனைப் போகவிட மறுத்தாய்; ஆகையால் நான் உன்னுடைய மூத்த மகனைக் கொல்லுவேன்’ என்கிறார் என்று சொல்” என்றார்.
24அவன் பிரயாணம் செய்யும் வழியில் அவர்கள்#4:24 அவர்கள் – மோசேயும் அவனது குடுப்பத்தாரும் தங்கியிருந்த இடத்தில் கர்த்தர் மோசேயை#4:24 மோசேயை – எபிரேய மொழியில் அவனை எதிர்கொண்டு, அவரைக் கொல்ல முயன்றார். 25உடனே சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து, நுனித்தோலை மோசேயின் பாதத்தில் வீசியெறிந்து, “நிச்சயமாக நீர் எனக்கு இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்றாள். 26எனவே கர்த்தர் அவரை விட்டுவைத்தார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று அவள் விருத்தசேதனத்தைக் குறித்தே அவ்வேளையில் சொன்னாள்.
27அதேவேளே கர்த்தர் ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காகப் பாலைவனத்துக்குப் போ” என்றார். அதன்படியே ஆரோன் இறைவனின் மலையில் மோசேயைச் சந்தித்து, அவரை முத்தமிட்டு வாழ்த்தினான். 28அப்போது மோசே கர்த்தர் தன்னை அனுப்பிச் சொல்லும்படி சொன்ன எல்லாவற்றையும் ஆரோனிடம் சொன்னார். அத்துடன் அவர் தனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட அற்புத அடையாளங்களைப் பற்றியும் சொன்னார்.
29பின்னர் மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலின் மூப்பர்களை ஒன்றுகூடும்படியாகச் செய்தார்கள். 30அப்போது கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் சொன்னான். அவன் அந்த அற்புத அடையாளங்களையும் மக்களுக்கு முன் செய்துகாட்டினான், 31அப்போது அவர்கள் நம்பினார்கள். கர்த்தர் இஸ்ரயேலர்களில் கரிசனையாய் இருக்கின்றார் என்றும், அவர் தங்கள் துயரத்தைக் கண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டபோது, சிரம் தாழ்த்தி வழிபட்டார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 4: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.