யாத்திராகமம் 26
26
இறைபிரசன்னக் கூடாரம்
1“இறைபிரசன்னக் கூடாரத்தைப் பத்து திரைச்சீலைகளைக்கொண்டு செய்வாயாக. அத்திரைகள் தரமாகத் திரிக்கப்பட்ட மென்பட்டு, நீலம், ஊதா, கருஞ்சிவப்பு நிற நூல்களினால் நெய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்மேல் கைவினைஞரால் கேருபீன்கள் பொறிக்கப்பட வேண்டும். 2எல்லாத் திரைகளும் ஒரே அளவுள்ளனவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றினதும் நீளம் இருபத்தெட்டு முழமாகவும், ஒவ்வொன்றின் அகலம் நான்கு முழமாகவும்#26:2 நீளம் இருபத்தெட்டு முழமாகவும், ஒவ்வொன்றின் அகலம் நான்கு முழமாகவும் – இது சுமார் 42 அடி நீளம், 6 அடி அகலம்; அல்லது நீளம் 13 மீற்றர், அகலம் 1.8 மீற்றர் இருக்கவேண்டும். 3ஐந்து திரைகளை ஒன்றாய் இணைப்பாயாக. மற்றைய ஐந்து திரைகளுக்கும் அவ்வாறே செய். 4இணைக்கப்பட்ட ஒரு தொகுதி திரையின் கடைமுனை விளிம்பில் நீல நிறத் துணியினால் வளையங்களைச் செய். மற்றைய தொகுதித் திரையின் கடைமுனை விளிம்பிலும் அவ்வாறே செய். 5ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றைய தொகுதி திரையின் கடைமுனையிலும் ஐம்பது வளையங்களைச் செய். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிர் எதிராய் இருக்கவேண்டும். 6பின்பு தங்கத்தினால் ஐம்பது கொழுக்கிகளைச் செய், இந்த இறைபிரசன்னக் கூடாரம் ஒரு இணைப்பாய் இருக்கும்படி, இரு தொகுதி திரைகளையும் ஒன்றாய் இணைப்பதற்கு இக்கொழுக்கிகளைப் பயன்படுத்து.
7“இறைபிரசன்னக் கூடாரத்துக்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு உரோமத்தினால் பதினொரு திரைகளைச் செய். 8அந்த பதினொரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும்#26:8 முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் – இது சுமார் 45 அடி நீளம், 6 அடி அகலம்; அல்லது நீளம் 13.5 மீற்றர், அகலம் 1.8 மீற்றர் உடையதாய் இருக்கவேண்டும். 9இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுதியாக ஒன்றிணைக்க வேண்டும். மற்றைய ஆறு திரைகளையும் இன்னொரு தொகுதியாக ஒன்றிணைக்க வேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்க வேண்டும். 10ஒரு தொகுதித் திரையின் கடைமுனை ஓரங்கள் நெடுகிலும், ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். மற்றைய தொகுதி திரையின் கடைமுனை ஓரங்கள் நெடுகிலும் அவ்வாறே செய்யவேண்டும். 11அதன் பின்னர் ஐம்பது வெண்கலக் கொழுக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரு தொகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்த கொழுக்கிகளைப் போடு. 12கூடாரத் திரைகளின் எஞ்சியுள்ள நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைபிரசன்னக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும். 13கூடாரத் திரைகள், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம்#26:13 ஒவ்வொரு முழம் – இது சுமார் 18 அங்குலம், அல்லது 45 சென்ரிமீற்றர் நீளம் கூடியதாக இருக்கும். எஞ்சியிருப்பது இறைபிரசன்னக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும். 14அக்கூடாரத்துக்காக மூடுதிரையை, சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக்கடா தோலினால் செய்யவேண்டும். அதற்கு மேலாகப் போடுவதற்காக, கடற்பசுத் தோலினால் இன்னுமொரு மூடுதிரையை செய்யவேண்டும்.
15“இறைபிரசன்னக் கூடாரத்துக்கென சித்தீம் மரத்தினால் நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களைச் செய். 16ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய்#26:16 பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாய் – இது சுமார் 15 அடி நீளம், 2 1/4 அடி அகலம்; அல்லது நீளம் 4.5 மீற்றர், அகலம் 68 சென்ரிமீற்றர் இருக்கவேண்டும். 17ஒவ்வொரு மரச்சட்டத்திலும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாய் அமைக்கப்பட்ட, இரு ஆப்புகள் இருக்கவேண்டும். இவ்விதமாக இறைபிரசன்னக் கூடாரத்தின் அனைத்து மரச்சட்டங்களும் செய்யப்பட வேண்டும். 18இறைபிரசன்னக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக இருபது மரச்சட்டங்களைச் செய். 19அந்த இருபது மரச்சட்டங்களை வைப்பதற்கு வெள்ளியினால் நாற்பது அடித்தளங்களைச் செய். ஒவ்வொரு ஆப்புக்கும் கீழ் ஒரு அடித்தளமாக ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரு அடித்தளங்களைச் செய். 20மற்றைய பக்கமான இறைபிரசன்னக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்துக்கு அவ்வாறே இருபது மரச்சட்டங்களைச் செய். 21ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய். 22இறைபிரசன்னக் கூடாரத்தின் மேற்குப் பக்கமான கடைசி முனையில் நிறுத்துவதற்கு ஆறு மரச்சட்டங்களைச் செய். 23கடைசி முனையில் உள்ள இரு மூலைகளிலும் நிறுத்துவதற்கு இரண்டு மரச்சட்டங்களைச் செய். 24இந்த இரு மூலைகளிலும் மரச்சட்டங்கள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட வேண்டும். இரண்டும் அவ்வாறே இருக்கவேண்டும். 25அப்போது அந்த எட்டு மரச்சட்டங்களும் ஒவ்வொரு மரச்சட்டத்தின் கீழும், இரு வெள்ளி அடித்தளங்களாக, பதினாறு வெள்ளி அடித்தளங்களும் இருக்கும்.
26“அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய். இறைபிரசன்னக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும், 27அத்தோடு இறைபிரசன்னக் கூடாரத்தின் மறுபக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும், பின்புறம் மேற்குப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய். 28நடு குறுக்குச் சட்டம், மரச்சட்டங்களின் நடுவிலே ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நீண்டிருக்க வேண்டும். 29அந்த மரச்சட்டங்களைத் தங்கத் தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை கொழுவுவதற்கென தங்க வளையங்களையும் செய். குறுக்குச் சட்டங்களையும் தங்கத் தகட்டால் மூடு.
30“மலையின்மேல் உனக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படியே இறைபிரசன்னக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.
31“நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் திரையைச் செய்து, அதன்மீது கைவினைஞரால் கேருபீன்கள் பொறிக்கப்பட வேண்டும். 32அந்தத் திரையைத் தங்கத் தகட்டால் மூடப்பட்ட சித்தீம் மரத்தாலான நான்கு தூண்களில், தங்கக் கொழுக்கிகளால் தொங்க விடு. அந்த நான்கு கம்பங்களும் நான்கு வெள்ளி அடித்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். 33கொழுக்கிகளிலிருந்து திரையைத் தொங்கவிட்டுச் சாட்சிப் பெட்டியை திரைக்குப் பின்னே வை. அத்திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். 34மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப் பெட்டியின்மேல் கிருபாசனத்தை வை. 35திரைக்கு வெளியே இறைபிரசன்னக் கூடாரத்தின் வடக்குப் பக்கத்தில் மேசையையும், மேசைக்கு எதிரே தெற்குப் பக்கத்தில் குத்துவிளக்கையும் வை.
36“கூடாரத்தின் வாசலுக்கு நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச் செய். அது ஊசியால் செய்யப்பட்ட பூத் தையல் வேலையாய் இருக்கவேண்டும். 37அந்தத் திரைக்குத் தங்கக் கொழுக்கிகளையும், சித்தீம் மரத்தால் ஐந்து கம்பங்களையும் செய்து, அதைத் தங்கத் தகட்டால் மூடு. அக்கம்பங்களுக்கு வெண்கலத்தால் ஐந்து அடித்தளங்களையும் செய்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 26: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.