24
உடன்படிக்கையை உறுதிப்படுத்தல்
1பின்பு கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீயும், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேலின் மூப்பர்கள் எழுபது பேரும் கர்த்தரிடம் இங்கே ஏறி வந்து தொலைவிலிருந்து வழிபடுங்கள். நீங்கள் தொலைவிலிருந்தே வழிபட வேண்டும். 2ஆனால் மோசே மட்டும் கர்த்தருக்கு அருகில் வரலாம், மற்றவர்கள் அருகில் வரக் கூடாது. இஸ்ரயேல் மக்கள் அவனுடனேகூட ஏறி வரக் கூடாது.”
3மோசே மக்களிடம் போய், கர்த்தருடைய அனைத்து வார்த்தைகளையும் நீதிச்சட்டங்களையும் அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அனைவரும் ஒரே குரலில், “கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்றார்கள். 4அப்போது கர்த்தர் சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.
மறுநாள் அதிகாலையில் மோசே எழுந்து, மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும்விதமாக பன்னிரண்டு கல் தூண்களை நிறுத்தினார். 5அதன் பின்னர் அவர் இஸ்ரயேலுக்குள் இருந்த இளைஞர்களை அனுப்பினார். அவர்கள் தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலியாக இளங்காளைகளைக் கர்த்தருக்குப் பலியிட்டார்கள். 6அப்போது மோசே இரத்தத்தில் அரைப் பங்கை எடுத்துக் கிண்ணங்களில் ஊற்றி வைத்தார். மற்றைய அரைப்பங்கைப் பலிபீடத்தின்மீது தெளித்தார். 7பின்பு மோசே உடன்படிக்கைப் புத்தகத்தை எடுத்து மக்கள் கேட்கும்படி வாசித்தார். அவர்கள் அதைக் கேட்டு, “கர்த்தர் சொன்னபடியெல்லாம் நாங்கள் செய்வோம்; நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.
8அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள் மேல் தெளித்து அவர்களிடம், “இந்த அனைத்து வார்த்தைகளின்படி கர்த்தர் உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றார்.
9அதன் பின்னர், ஆரோனும், நாதாபும், அபியூவும், இஸ்ரயேல் மக்களின் மூப்பர்களில் எழுபது பேரும் மோசேயுடன் மலைக்கு ஏறிப் போனார்கள். 10அவர்கள் அங்கே இஸ்ரயேலரின் இறைவனைக் கண்டார்கள். அவருடைய பாதத்தின் கீழ் ஆகாயத்தைப் போல் தெளிவான நீலக்கல்லினால் அமைக்கப்பட்ட நடைபாதை போன்ற ஒன்று இருந்தது. 11ஆனால் இறைவன் இஸ்ரயேலின் தலைவர்களுக்கு விரோதமாகத் தன் கரத்தை உயர்த்தவில்லை; அவர்கள் இறைவனைக் கண்டு, உண்டு குடித்தார்கள்.
12அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீ மலையின்மேல் என்னிடத்துக்கு ஏறி வந்து அங்கே காத்திரு, நான் அவர்களுடைய அறிவுறுத்தலுக்காக எழுதிய நீதிச்சட்டமும், கட்டளைகளும் அடங்கிய கற்பலகைகளை உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
13அப்போது மோசே தன் உதவியாளன் யோசுவாவுடன் புறப்பட்டார், மோசே இறைவனுடைய மலைக்கு ஏறிப் போனார். 14அப்போது மோசே இஸ்ரயேலின் மூப்பர்களிடம், “நாங்கள் மறுபடியும் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இங்கேயே காத்திருங்கள். ஆரோனும், ஊரும் உங்களோடு இருக்கின்றார்கள். யாருக்காவது ஏதாவது வழக்கு இருந்தால் அந்நபர் அவர்களிடம் போகலாம்” என்றார்.
15மோசே மலையின்மேல் ஏறிப் போனார். அப்போது மேகம் மலையை மூடிற்று. 16கர்த்தரின் மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது. மேகம் ஆறு நாட்களுக்கு மலையை மூடியிருந்தது. ஏழாம் நாள் கர்த்தர் மேகத்துக்குள் இருந்து மோசேயை அழைத்தார். 17மலையின் உச்சியில் காணப்பட்ட கர்த்தருடைய மகிமை இஸ்ரயேலருக்கு சுட்டெரிக்கும் நெருப்பைப் போல் தெரிந்தது. 18அப்போது மோசே மலையின்மேல் ஏறி, மேகத்துக்குள் நுழைந்தார். அந்த மலையிலே அவர் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.