யாத்திராகமம் 23

23
நீதிக்கும் இரக்கத்துக்குமான சட்டங்கள்
1“பொய் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தீங்கிழைக்கும் சாட்சியாயிருந்து கொடியவனுக்கு உதவ வேண்டாம்.
2“ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, பிழையானதைச் செய்யும் பெரும்பான்மை மக்கள் கூட்டத்தைப் பின்பற்றி, பெரும்பான்மைக்கு சார்பாயிருந்து நீதியைப் புரட்ட வேண்டாம். 3ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பாரபட்சம் காட்டவேண்டாம்.
4“வழிதப்பித் திரிகின்ற உங்கள் பகைவனின் மாட்டையோ, அல்லது கழுதையையோ நீங்கள் காண நேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய் விடத் தவற வேண்டாம். 5உங்களை வெறுக்கின்ற ஒருவனுடைய கழுதை சுமையுடன் விழுந்து கிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுப்போக வேண்டாம்; அவனுக்கு உதவி செய்யவும் தவற வேண்டாம்.
6“உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதி வழங்க மறுக்க வேண்டாம். 7பொய்யான குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட வேண்டாம்; குற்றமற்றவனையும், நீதிமானையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டிக்காமல் விடமாட்டேன்.
8“இலஞ்சம் வாங்க வேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்கி விடுகின்றது.
9“அந்நியனை ஒடுக்க வேண்டாம்; நீங்கள் எகிப்தில் அந்நியர்களாய் இருந்ததனால், அந்நியரின் உணர்வுகளை அறிந்திருக்கின்றீர்கள்.
சபத் என்ற ஓய்வுநாளின் நீதிச்சட்டங்கள்
10“நீ ஆறு வருடங்கள் உன் வயலை விதைத்து விளைச்சலை சேர்த்து வைப்பாயாக. 11ஆனால் ஏழாவது வருடம், நிலம் தரிசு நிலமாக ஓய்ந்திருக்க விடவேண்டும். உன் மத்தியிலுள்ள ஏழைகள் அதில் விளைவதை உணவாகப் பெற்றுக்கொள்ளட்டும், மீதியானது காட்டுமிருகங்களுக்கு உணவாகும். உன் திராட்சைத் தோட்டத்துக்கும், ஒலிவத் தோப்புக்கும் அவ்வாறே செய்வாயாக.
12“வாரத்தின் ஆறு நாட்கள் நீ உன் வேலையைச் செய், ஆனால் ஏழாம் நாள் ஓய்ந்திரு. அதில் உன் எருதும், உன் கழுதையும் இளைப்பாறட்டும். உன் வீட்டில் பிறந்த அடிமையும், அந்நியனும் இளைப்பாறி புத்துணர்வு பெறட்டும்.
13“நான் உனக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்வதில் கவனமாயிருப்பாயாக, அந்நிய தெய்வங்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டாம். அவற்றின் பெயரை உன் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம்.
மூன்று வருடாந்த பண்டிகைகள்
14“வருடத்தில் மூன்று முறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.
15“ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி, ஏழு நாட்களுக்கு புளிப்பூட்டப்படாத அப்பத்தை உண்ணு. ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய். ஏனெனில் அந்த மாதத்தில் நீ எகிப்திலிருந்து வெளியே புறப்பட்டு வந்தாய்.
“ஒருவனும் வெறுங்கையுடன் எனக்கு முன்பாக வரக் கூடாது.
16“நீ விதைத்த உன் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுவாயாக.
“பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உன் வயலின் விளைச்சலைச் சேர்க்கின்ற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுவாயாக.
17“இவ்வாறாக வருடத்தில் மூன்று முறை அனைத்து ஆண்களும் ஆண்டவராகிய கர்த்தர் முன்பாக வரவேண்டும்.
18“பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்த வேண்டாம்.
“எனது பண்டிகைப் பலியின் கொழுப்பை மறுநாள் காலைவரை வைத்திருக்க வேண்டாம்.
19“உன் நிலத்தின் முதற்பலன்களில் சிறந்தவற்றை உன் இறைவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
“வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்க வேண்டாம்.
தூதன் வழியை ஆயத்தப்படுத்தல்
20“இதோ, வழிநெடுகிலும் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கின்ற இடத்துக்கு உன்னைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன் ஒரு தூதனை அனுப்புகின்றேன். 21அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யாதிருங்கள், ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்க மாட்டார். 22அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை விரோதிப்பவர்களை நானும் விரோதிப்பேன். 23என் தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்துக்கு உங்களைக் கொண்டுசெல்வார். நான் அவர்களை முற்றாக அழித்தொழிப்பேன். 24நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் புனிதக் கற்களையும் துண்டுகளாக நொறுக்கிப் போட வேண்டும். 25நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தரையே வழிபடுங்கள். அவர் உங்கள் உணவையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். நான் உங்களிடமிருந்து நோயை நீக்கி விடுவேன். 26உங்கள் நாட்டில் ஒருவருக்கும் கருச்சிதைவோ, குழந்தைப்பேறற்ற நிலையோ இருக்காது. உங்கள் ஆயுட் காலத்தை முழுமையாக்குவேன்.
27“நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இனத்தையும் குழப்பமடையச் செய்வேன். உங்கள் பகைவரையெல்லாம் உங்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடச் செய்வேன். 28நான் உங்களுக்கு முன்னே குளவிகளை#23:28 குளவிகளை அல்லது பயங்கரத்தை அனுப்பி, ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியை விட்டுத் துரத்திவிடுவேன். 29ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்துக்குள்ளாகவே துரத்திவிட மாட்டேன். ஏனெனில் நாடு பாழாய்ப்போய், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாதளவு பெருகிவிடும். 30நீங்கள் பெருகி அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் வரை, நான் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முன்னிருந்து துரத்துவேன்.
31“செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல்#23:31 பெலிஸ்தியரின் கடல் மத்தியதரைக் கடல் வரைக்கும், பாலைவனம் தொடங்கி யூப்ரட்டீஸ் நதி வரைக்கும் உங்கள் எல்லையை நிலைநிறுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன், அப்போது நீங்கள் அவர்களை உங்கள் முன்பிருந்து வெளியே துரத்தி விடுவீர்கள். 32அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்ய வேண்டாம். 33உங்கள் நாட்டில் அவர்களை வாழவிட வேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். ஏனெனில் அவர்களது தெய்வங்களை நீங்கள் வழிபட்டால் நிச்சயமாக உங்களுக்கு அது கண்ணிப்பொறியாய் இருக்கும்.”

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 23: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល