22
சொத்துக்களின் பாதுகாப்பு
1“ஒரு மனிதன் ஒரு எருதையோ, அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றால் அல்லது விற்றால் அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்க வேண்டும்.
2“திருடன் ஒருவன் வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிபட்டு அடித்து இறந்தால், அடித்தவன் இரத்தம் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல. 3ஆனால் அது சூரியன் உதித்த பின்னர் நடந்திருந்தால் இரத்தம் சிந்திய குற்றம் அவன்மீது இருக்கும்.
“திருடன் தன் திருட்டுக்கு இழப்பீடு செலுத்தியேயாக வேண்டும். ஆனால் அவனிடம் எதுவுமில்லையாயின் இழப்பீட்டைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்பட வேண்டும். 4அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடு இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் அதை இரு மடங்காய் அதன் உரிமையாளனுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
5“ஒருவன் தன் கால்நடைகளை, ஒரு வயலிலோ, திராட்சைத் தோட்டத்திலோ மேய்க்கின்றபோது, அவற்றைக் கட்டாக் காலியாக இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் அதற்கு இழப்பீடாக தன்னுடைய வயலிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும்.
6“தீ மூண்டு அது முட்செடிகளில் பரவி, தானியக் கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக் கதிர்களையோ, அல்லது முழு வயலையுமோ எரித்துவிட்டால், தீயை மூட்டியவன் அதற்காக இழப்பீடு செய்யவேண்டும்.
7“ஒரு மனிதன் தன் அயலவனிடம் வெள்ளியையோ அல்லது பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலவனுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்தத் திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரு மடங்காய் செலுத்த வேண்டும். 8ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டு உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களைத் தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகளின்#22:8 நீதிபதிகளின் – இந்த சூழலில் இறைவனின் என்றும் கூறலாம். முன்பாக வரவேண்டும். 9ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, ஆடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளைக் கொண்டுவர வேண்டும். நீதிபதியால்#22:9 நீதிபதியால் அல்லது இறைவனால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகின்றவன் மற்றவனுக்கு இரு மடங்காகக் கொடுக்க வேண்டும்.
10“ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால், அல்லது காயமடைந்தால், அல்லது ஒருவரும் காணாத வேளையில் பிடித்துக் கொண்டுபோகப்பட்டால், 11அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என கர்த்தர் முன்னிலையில் ஆணையிட வேண்டும். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சினை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இழப்பீடு எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 12ஆனால் அந்த மிருகம் அயலவனிடத்திலிருந்து களவு போயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காக இழப்பீடு கொடுக்க வேண்டும். 13கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதை சாட்சியாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்துக்காக அவன் இழப்பீடு செலுத்தும்படி கேட்கப்பட மாட்டான்.
14“ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், உரிமையாளன் இல்லாத வேளையில் அது காயப்பட்டால், அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு இழப்பீடு செலுத்த வேண்டும். 15ஆனால் மிருகத்தின் உரிமையாளன் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கின்றது.
சமூகப் பொறுப்பு
16“திருமணத்துக்கென நிச்சயிக்கப்படாத கன்னிப்பெண்ணை ஒருவன் வஞ்சித்து, அவளுடன் பாலுறவுகொண்டால், அவன் அவளுக்கான சீதனத்தை அவளுடைய தந்தைக்குக் கொடுக்க வேண்டும். அவள் அவனுக்கு மனைவியாயிருப்பாள். 17அப்பெண்ணின் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலுமாக மறுத்தாலும்கூட, கன்னிப்பெண்களுக்காகக் கொடுக்கப்படும் சீதனப் பணத்தை அவன் கொடுத்தேயாக வேண்டும்.
18“சூனியக்காரியை உயிரோடு வாழவிட வேண்டாம்.
19“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.
20“கர்த்தரைத் தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகின்றவன் எவனும் அழிக்கப்பட வேண்டும்.
21“அந்நியனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே அந்நியராய் இருந்தீர்களே.
22“விதவைகளையும், தந்தையற்ற பிள்ளைகளையும் தவறாக நடத்த வேண்டாம். 23நீங்கள் அவர்களை தவறாக நடத்தி, அவர்கள் என்னிடம் கதறும்போது, நான் நிச்சயமாக அவர்களின் கதறுதலைக் கேட்பேன். 24அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்வேன். அப்போது உங்கள் மனைவிமார் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள்.
25“என் மக்களில் ஏழையான ஒருவனுக்கு எவனாவது கடனாகப் பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப் போல அவனிடம் வட்டி வாங்கக் கூடாது. 26உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப் பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறைய முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 27ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் உறங்கும்போது, வேறு எதனால் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் முறையிடும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.
28“இறைவனை நிந்திக்கவோ, உங்கள் மக்களின் ஆட்சியாளர்களை சபிக்கவோ வேண்டாம்.
29“உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சைச் சாற்றுத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்க வேண்டாம்.
“உங்கள் மகன்மாருக்குள் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும். 30நீங்கள் உங்கள் ஆடு மாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அவ்வாறே செய்யவேண்டும். அவை பிறந்து ஏழு நாட்களுக்கு தங்களுடைய தாயுடன் இருக்கட்டும்; ஆனால் எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்க#22:30 கொடுக்க – பலியிட வேண்டும்.
31“நீங்கள் என் பரிசுத்த மக்களாயிருக்க வேண்டும். ஆகையால், காட்டுமிருகங்களினால் கிழிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம்; அதை நாய்களுக்குப் போடுங்கள்.”