யாத்திராகமம் 16
16
மன்னாவும் காடையும்
1முழு இஸ்ரயேல் சமூகமும் ஏலிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய பின்னர் இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள், ஏலிமுக்கும் சீனாய் மலைக்கும் இடையேயுள்ள சீன் பாலைவனத்தை வந்தடைந்தார்கள். 2அந்தப் பாலைவனத்திலே முழு இஸ்ரயேல் சமூகத்தினரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள். 3இஸ்ரயேலர் அவர்களிடம், “நாங்கள் கர்த்தரின் கையால் எகிப்திலே இறந்திருக்கலாமே! நாங்கள் அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து, விரும்பிய உணவையெல்லாம் உட்கொண்டோமே; ஆனால் நீங்கள், இந்த முழு மக்கள் கூட்டமும் பட்டினியால் இறக்கும்படி இந்தப் பாலைவனத்துக்குள் எங்களைக் கொண்டுவந்திருக்கின்றீர்கள்” என்றார்கள்.
4அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொருநாளும் வெளியே போய் அந்தந்த நாளுக்குப் போதுமானதைச் சேர்க்க வேண்டும். அதன்மூலமாக அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். 5ஆறாம் நாளிலோ, மற்றைய நாட்களில் சேகரித்ததைவிட இரண்டு மடங்கு அதிகமாக சேகரிக்க வேண்டும். அந்தநாளிலே அவர்கள் கொண்டுவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார்.
6ஆகவே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், 7நாளை காலையிலோ கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முணுமுணுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாக முணுமுணுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள். 8மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் உண்பதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டியளவு அப்பத்தையும் தருவார்; அப்போது கர்த்தரே இதைத் தருகின்றார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முணுமுணுப்பைக் கர்த்தர் கேட்டிருக்கிறார். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, கர்த்தருக்கு எதிராகவே முணுமுணுக்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராய் முணுமுணுக்க நாங்கள் யார்?” என்றார்.
9அதன் பின்னர் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமூகத்தினரிடமும், ‘எல்லோரும் கர்த்தருக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முணுமுணுப்பைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றார்.
10ஆரோன் முழு இஸ்ரயேல் சமூகத்தினரோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, கர்த்தரின் மகிமை மேகத்திலே தோன்றியது.
11அப்போது கர்த்தர் மோசேயிடம், 12“நான் இஸ்ரயேலருடைய முணுமுணுப்பைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியை உட்கொண்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்போது நானே உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.
13அன்று மாலையில் காடைகள் பெரிய கூட்டமாய் வந்து அவர்களது முகாமை மூடிக்கொண்டன. மறுநாட் காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப் படலம் படிந்தது. 14பனி நீங்கிய பின்னர், தரையில் உறைபனி போன்ற மெல்லிய துணிக்கைகள் பாலைவன நிலத்தில் காணப்பட்டன. 15அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
அப்போது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காகக் கர்த்தர் கொடுத்திருக்கும் அப்பம். 16கர்த்தர் கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் உண்ணக்கூடிய அளவையே சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர்#16:16 ஓமர் – இது சுமார் 1.4 கிலோ கிராம். அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றார்.
17இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். 18அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்தபோது, அதிகமாகச் சேர்த்தவனுக்கு தேவைக்கதிகமாக இருக்கவுமில்லை, குறைவாகச் சேர்த்தவனுக்கு போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தமக்கு வேண்டிய அளவையே சேர்த்திருந்தார்கள்.
19அப்போது மோசே அவர்களிடம், “ஒருவரும் மறுநாள் காலைவரை அதில் எதையும் வைத்திருக்கக் கூடாது” என்று சொன்னார்.
20ஆனாலும் சிலர் மோசே சொன்னதைக் கேளாமல் அதிலொரு பகுதியை காலைவரை வைத்திருந்தார்கள். அது புழுப்பிடித்து நாற்றமெடுத்தது. அதனால் மோசே அவர்கள்மீது கோபங்கொண்டான்.
21காலைதோறும் ஒவ்வொருவனும் தனக்குத் தேவையான அளவைச் சேர்த்தான். வெய்யில் ஏறினபோது அது உருகிப்போனது. 22வாரத்தின் ஆறாம் நாளில், ஒவ்வொருவரும் ஒருவருக்கு இரண்டு ஓமர் வீதம் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள், சமூகத் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள். 23அப்போது மோசே அவர்களிடம், “கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே; நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக, கர்த்தருக்குப் பரிசுத்த சபத் ஓய்வுநாளாக இருக்கவேண்டும். எனவே, இன்றே சுட வேண்டியதை சுட்டு, அவிக்க வேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் உட்கொண்ட பின்னர் மிகுதியானதை காலைவரை வைத்திருங்கள்” என்றான்.
24எனவே அவர்கள், மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை. 25அப்போது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைய தினமே அதை உண்ணுங்கள். ஏனெனில் இன்றைய நாள் கர்த்தருக்குரிய சபத்#16:25 சபத் – கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓய்வுநாள் ஓய்வுநாளாய் இருக்கின்றது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காண மாட்டீர்கள். 26நீங்கள் வாரத்தில் ஆறு நாட்களும் அதைச் சேர்க்க வேண்டும். சபத் ஓய்வு நாளாகிய ஏழாம் நாளில் அது கிடைக்காது” என்றார்.
27ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம் நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை. 28அப்போது கர்த்தர் மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்துக்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்? 29கர்த்தர் உங்களுக்கு சபத் ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால் ஆறாம் நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கின்றார். ஆகையால் ஏழாம் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்தில் இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக் கூடாது” என்றார். 30எனவே மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31இஸ்ரயேல் மக்கள் அந்த அப்பத்தை மன்னா என்று அழைத்தார்கள். அது கொத்தமல்லி விதை போன்றும், வெள்ளை நிறமாகவும், தேனில் தயாரித்த பலகாரத்தின் சுவையுடையதாகவும் இருந்தது. 32அப்போது மோசே இஸ்ரயேல் மக்களிடம், “கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்டிருப்பது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, உங்களுக்குப் பாலைவனத்தில் உண்ணக் கொடுத்த அப்பத்தை வரப்போகும் உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுவதற்காக, அந்த மன்னாவில் ஒரு ஓமர்#16:32 ஒரு ஓமர் – சுமார் 1400 கிராம் அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்” என்றார்.
33மேலும் மோசே ஆரோனிடம், “நீ ஒரு சாடியை எடுத்து, ஒரு ஓமர் அளவு மன்னாவை அதற்குள் போட்டு, வரப்போகும் தலைமுறையினருக்காகக் கர்த்தருக்கு முன்பாக அதை வைப்பாயாக” என்றார்.
34கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் மன்னாவை எடுத்து அது பாதுகாக்கப்படும்படி சாட்சிப் பெட்டியின்#16:34 சாட்சிப் பெட்டி – இது உடன்படிக்கைப் பெட்டி யாத். 25:10-12 ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பாக வைத்தான். 35இஸ்ரயேலர் தாங்கள் குடியேற வேண்டிய நாட்டுக்கு வரும் வரைக்கும் நாற்பது வருடமாக மன்னாவை உண்டார்கள்; கானானின் எல்லைக்கு வரும்வரை மன்னாவை உண்டார்கள்.
36(ஒரு எப்பா#16:36 ஒரு எப்பா – சுமார் 23 லீட்டர் அளவின் பத்திலொரு பங்கே ஒரு ஓமர்#16:36 ஓமர் – சுமார் 2 லீட்டர் ஆகும்.)
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 16: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.