யாத்திராகமம் 15
15
மோசே மற்றும் மிரியாமின் பாடல்
1அப்போது#15:1 அப்போது – கர்த்தர் எகிப்தியரை கடலில் அழித்த பின்னர் மோசேயும் இஸ்ரயேலரும் கர்த்தருக்குப் பாடிய பாடலாவது:
“நான் கர்த்தரைப் பாடுவேன்,
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கின்றார்.
அவர் குதிரையையும், அதை ஓட்டியவனையும்
கடலுக்குள் வீசி எறிந்தார்.
2“கர்த்தர் என் பலமும், என் பாடலுமாய் இருக்கின்றார்;
அவரே என் இரட்சிப்பும் ஆகினார்.
அவரே என் இறைவன், நான் அவரைத் துதிப்பேன்.
அவரே என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
3கர்த்தர் யுத்த வீரர்;
கர்த்தர் என்பதே அவரது பெயர்.
4அவர் பார்வோனின் தேர்களையும், அவனது இராணுவத்தையும்
கடலுக்குள் தள்ளிவிட்டார்.
பார்வோனின் அலுவலர்களில் சிறந்தவர்கள்
செங்கடலில் மூழ்கினார்கள்.
5ஆழமான கடல் அவர்களை மூடியது;
ஒரு கல்லைப் போல் ஆழத்திலே அமிழ்ந்தார்கள்.
6கர்த்தாவே, உமது வலது கரம்
வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது.
கர்த்தாவே உமது வலது கரம்
எதிரியை நொறுக்கியது.
7“உம்மை எதிர்த்தவர்களை
உமது மாட்சிமையின் மகத்துவத்தினால் கீழே தள்ளி வீழ்த்தினீர்.
உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்;
அது அவர்களை வைக்கோலைப் போல் எரித்தது.
8உமது மூக்கின் சுவாசத்தினால்
தண்ணீர் குவிந்தது.
பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப் போல் நின்றன;
ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்து போயிற்று.
9பகைவன், ‘நான் பின்தொடர்வேன்,
அவர்களைப் பிடிப்பேன்.
கொள்ளையைப் பங்கிடுவேன்;
அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.
என் வாளை உருவுவேன்,
என் கை அவர்களை அழிக்கும்’
என்று பெருமையுடன் கூறினான்.
10“ஆனால், நீரோ உமது மூச்சை#15:10 மூச்சை அல்லது காற்றை ஊதினீர்,
கடல் அவர்களை மூடியது.
அவர்கள் ஈயத்தைப் போல்
வலிமையான தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
11கர்த்தாவே, தெய்வங்களுள்
உம்மைப் போல் யார் உளர்?
பரிசுத்தத்தில் மாட்சிமையும்,
மகிமையில் வியக்கத்தக்கவரும்,
அதிசயங்களை செய்கின்றவருமான
உம்மைப் போல் யார் உளர்?
12“நீர் உமது வலது கரத்தை நீட்டினீர்,
பூமி அவர்களை விழுங்கிற்று.
13நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உமது நிலையான அன்பினால் வழிநடத்தினீர்.
நீர் வசிக்கும் பரிசுத்த இடத்துக்கு,
உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டினீர்.
14இனங்கள் அதைக் கேட்டு நடுங்கும்;
பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
15ஏதோம் நாட்டின் தலைவர்கள் திகிலடைவார்கள்,
மோவாப் நாட்டின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும்,
கானான் நாட்டின் மக்களும் கரைந்து போவார்கள்;
16பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும்.
கர்த்தாவே, உமது மக்கள் கடந்துபோகும் வரை,
நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும் வரை,
உமது கரத்தின் வல்லமையினால்
கல்லைப் போல் அவர்கள் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
17ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தான மலையில்
நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்;
அந்த இடத்தையே நீர் உமது வசிப்பிடமாக்கினீர்,
கர்த்தாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தின.
18“கர்த்தர் என்றென்றும்
அரசாளுவார்.”
19பார்வோனின் குதிரைகள் தேர்களோடும், குதிரை வீரர்களோடும் கடலுக்குள் சென்றன. அப்போது கர்த்தர் கடல் நீரைத் திருப்பி அவர்கள்மேல் கொண்டுவந்தார்; ஆனால் இஸ்ரயேலரோ நடுக் கடலிலே உலர்ந்த தரையில் நடந்து போனார்கள். 20அப்போது இறைவாக்கினளான ஆரோனின் அக்கா மிரியாம், தன் கையில் ஒரு தம்புராவை எடுத்துக்கொண்டாள்; மற்றைய எல்லாப் பெண்களும் தம்புராக்களோடும் நடனத்தோடும் அவளைப் பின்தொடர்ந்தார்கள். 21அப்போது மிரியாம் அவர்களைப் பார்த்து,
“கர்த்தரைப் பாடுங்கள்,
ஏனெனில் அவர் உன்னதத்தில் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும் அதை ஓட்டியவனையும்
கடலிலே வீசியெறிந்து விட்டார்”
என்று பாடினாள்.
மாராவின் கசப்பான தண்ணீர்
22அதன் பின்னர் மோசே இஸ்ரயேலரைச் செங்கடலிலிருந்து சூர் பாலைவனத்துக்கு நடத்திச் சென்றார். மூன்று நாட்களாக பாலைவனத்தில் பிரயாணம் செய்த அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. 23அவர்கள் மாரா என்னும் இடத்துக்கு வந்தபோது, அந்த இடத்திலுள்ள தண்ணீர் கசப்பாயிருந்தபடியால், அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை. அதனாலேயே அந்த இடம் மாரா#15:23 மாரா – கசப்பு என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது. 24எனவே இஸ்ரயேல் மக்கள், “நாங்கள் எதைக் குடிப்போம்?” என்று கேட்டு மோசேக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
25மோசே கர்த்தரை நோக்கிக் கதறினான், அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அவன் அதைத் தண்ணீருக்குள் எறிந்தபோது, தண்ணீர் இனிப்பாக மாறியது.
கர்த்தர் அங்கே ஒரு விதிமுறையையும், ஒரு சட்டத்தையும் ஏற்படுத்தி, அவர்களைப் பரீட்சித்தார். 26அவர், “நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தரின் குரலைக் கவனமாய்க் கேட்டு, அவருடைய பார்வையில் சரியானதைச் செய்து, அவருடைய கட்டளைகளைக் கவனித்து, அவருடைய அனைத்து விதிமுறைகளையும் கைக்கொண்டு நடப்பீர்களானால், நான் எகிப்தியர்மீது கொண்டுவந்த நோய்களில் எதையும் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்; ஏனெனில் நானே உங்களைக் குணமாக்குகின்ற கர்த்தர்” என்றார்.
27அதன் பின்னர் அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள், அங்கே பன்னிரண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்சை மரங்களும் இருந்தன; அவர்கள் அங்கே நீரூற்றருகே முகாமிட்டார்கள்.
ទើបបានជ្រើសរើសហើយ៖
யாத்திராகமம் 15: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.