YouVersion Logo
Search Icon

தானியேல் 9

9
தானியேலின் மன்றாடல்
1அது மேதியரின் சந்ததியைச் சேர்ந்த அகாஸ்வேருவின் மகன் தரியு, பாபிலோனியரின் இராச்சியத்துக்கு அரசனாக்கப்பட்ட வருடமாயிருந்தது. 2அந்த ஆட்சிக் காலத்தின் முதல் வருடத்தில் தானியேலாகிய நான், எருசலேமின் அழிவு எழுபது வருடங்கள் நீடிக்கும் என்பதை வேதவசனங்களிலிருந்து#9:2 வேதவசனங்களிலிருந்து – எபிரேய மொழியில் நூல்களிலிருந்து என்றுள்ளது புரிந்துகொண்டேன். இதை இறைவாக்கினன் எரேமியாவுக்குக் கர்த்தர் கொடுத்திருந்த வார்த்தையிலிருந்து அறிந்துகொண்டேன். 3எனவே நான் உபவாசித்து, துயரஆடை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து இறைவனாகிய ஆண்டவரிடம் விண்ணப்பத்துடனும் வேண்டுதலுடனும் கெஞ்சி மன்றாடினேன்.
4நான் என் இறைவனாகிய கர்த்தரிடத்தில் மன்றாடி, பின்வருமாறு பாவங்களை ஒப்புக்கொண்டேன்:
“ஆண்டவரே! மகத்துவமுடையவரும் பயபக்திக்குரியவருமான இறைவனே, உம்மில் அன்பு செலுத்தி, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகின்ற எல்லோருடனும் உமது நிலையான அன்பின் உடன்படிக்கையைக் காத்துக்கொள்கின்றவரே! 5நாங்கள் பாவம் செய்து தவறிழைத்தோம்; தீமை செய்து, உமக்கெதிராகக் கலகம் செய்தோம். நாங்கள் உமது கட்டளைகளையும், நீதிச்சட்டங்களையும் விட்டு விலகினோம். 6உமது அடியவர்களாகிய இறைவாக்கினர்கள் எங்களுடைய அரசர்களுடனும், தலைவர்களுடனும், எங்கள் முன்னோர்களுடனும், இந்த நாட்டின் மக்கள் எல்லோருடனும் உமது சார்பாக#9:6 சார்பாக பெயரில் பேசியபோது, அவர்களுக்கு நாங்கள் செவிசாய்க்காமல் இருந்தோம்.
7“ஆண்டவரே! நீதி உம்முடையது, வெளிப்படையான அவமானமோ இன்று எம்முடையது. இன்று யூதாவின் மக்களும், எருசலேமின் குடிகளும், சமீபமும் தொலைவிலுமான நாடுகள் எங்குமுள்ள இஸ்ரயேலராகிய எல்லோரும் அவமானத்துக்குள்ளாகி இருக்கின்றோம். அவர்கள் உமக்குத் துரோகம் செய்ததால், நீர் அவர்களை நாடுகள் எங்கும் சிதறடித்தீர். 8கர்த்தாவே! நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்ததனால் எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், முன்னோர்களுக்கும் வெளிப்படையான அவமானம் சொந்தமாகியது. 9நாங்கள் இறைவனுக்கு#9:9 இறைவனுக்கு – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது எதிராக கலகம் செய்திருந்தாலும், எங்கள் இறைவனாகிய ஆண்டவருக்கோ, இரக்கமும் மன்னிக்கும் தன்மையும் சொந்தமானவை. 10நாங்கள் எங்கள் இறைவனாகிய கர்த்தரின் குரலுக்கு கீழ்ப்படியவும் இல்லை; தனது அடியவராகிய இறைவாக்கினர் மூலம் அவர் அளித்த வழிமுறைகளை கைக்கொள்ளவும் இல்லை. 11இஸ்ரயேலர் யாவரும் உமது நீதிச்சட்டத்தை மீறினார்கள். உமக்குக் கீழ்ப்படிய மறுத்து வழிவிலகிப் போனார்கள்.
“ஆகவே நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தினால், இறைவனின் அடியவனாகிய மோசே தனது நீதிச்சட்டப் புத்தகத்தில் எழுதியுள்ளபடி சாபமும், ஆணையிட்டு உறுதிப்படுத்தப்பட்ட விளைவுகளும் எங்கள்மீது கொட்டித் தீர்க்கப்பட்டன. 12எங்கள்மேல் பேரழிவைக் கொண்டுவந்து, எங்களுக்கும் எங்கள் ஆளுநர்களுக்கும் எதிராகக் கூறப்பட்ட உமது வார்த்தைகளை நீர் நிறைவேற்றி விட்டீர். எருசலேமுக்கு எதிராகச் செய்யப்பட்டதைப் போன்று உலகத்தில் உள்ள வேறு எந்த இடத்துக்கெதிராகவும் ஒருபோதும் செய்யப்படவில்லை. 13மோசேயின் நீதிச்சட்டத்தில் எழுதியுள்ளதைப் போலவே, இந்தப் பேரழிவு எங்கள்மேல் வந்தது. ஆயினும் நாங்கள் எங்கள் பாவங்களை விட்டுத் திரும்பி உமது உண்மையிலிருந்து அறிவு பெற்று, எங்கள் இறைவனாகிய கர்த்தரின் தயவைக் கெஞ்சிக் கேட்கவில்லை. 14எனவே, கர்த்தர் இந்த பேரழிவை தமது மனதில் வைத்துக் காத்திருந்து, இப்போது நம்மீது கொண்டுவந்துள்ளார். ஏனெனில் இறைவனாகிய எங்கள் கர்த்தர் தாம் செய்யும் எல்லாவற்றிலும் நியாயமுள்ளவர். நாங்கள் அவரது குரலுக்கு கீழ்ப்படியாமல் இருந்திருக்கின்றோம்.
15“இறைவனாகிய எங்கள் ஆண்டவரே! நீர் உம்முடைய மக்களை எகிப்திலிருந்து வல்லமைமிக்க கரத்தினால் வெளியே கொண்டுவந்தீர். அதனால் இந்நாள் வரைக்கும் உம்முடைய பெயரை நிலைபெறச் செய்தீர். இருந்தும் நாங்களோ பாவம் செய்துவிட்டோம். தீமை செய்துவிட்டோம். 16ஆண்டவரே, உமது நீதியான அனைத்துச் செயல்களுக்கும் ஏற்றபடி, உமது பட்டணமும் உமது பரிசுத்த மலையுமான எருசலேமைவிட்டு உமது கோபத்தையும், கடும் சீற்றத்தையும் விலக்கி விடுவீராக! ஏனெனில் எங்கள் பாவங்களும் எங்கள் முன்னோர் செய்த அநியாயங்களும், எருசலேமையும் உமது மக்களையும் எங்களைச் சுற்றியுள்ளவர்கள் யாவருக்கும் முன்பாக கேலிக்குரியனவாக மாற்றிவிட்டன.
17“இப்போதும் எங்கள் இறைவனே, உமது அடியவன் என் மன்றாடுதல்களையும், விண்ணப்பங்களையும் கேட்பீராக! ஆண்டவரே! பாழாய்க் கிடக்கின்ற உமது பரிசுத்த இடத்தை உமது பெயரின் பொருட்டு தயவுடன் பார்த்திடுவீராக! 18என் இறைவனே! செவிசாய்த்துக் கேட்பீராக! உமது கண்களைத் திறந்து பாழாய்க் கிடக்கும் உமது பெயர் தரிக்கப்பட்ட பட்டணத்தின் அழிவைப் பார்த்திடுவீராக! இந்த மன்றாடுதலை எங்கள் நீதியின் பொருட்டு நாங்கள் கேட்காமல், உமது பெரிய இரக்கத்தை முன்வைத்தே கேட்கிறோம். 19ஆண்டவரே, கேட்பீராக; ஆண்டவரே, மன்னித்திடுவீராக! ஆண்டவரே கவனித்துக் கேட்டுச் செயலாற்றிடுவீராக! உமது பட்டணம் உமது பெயரைத் தரித்துள்ளது, உமது மக்களும் உமது பெயரைத் தரித்துள்ளனர். ஆதலால் என் இறைவனே, உமது பொருட்டு தாமதிக்காது செயற்படுவீராக!” என்றேன்.
எழுபது “ஏழுகள்”
20இவ்வாறு நான் குரலெழுப்பி, எனது பாவங்களையும், எங்கள் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் இறைவனாகிய எனது கர்த்தரின் பரிசுத்த மலைக்காக#9:20 பரிசுத்த மலைக்காக – எருசலேம் மன்றாடிக் கொண்டிருந்தேன். 21இவ்வாறு நான் மன்றாடிக் குரலெழுப்பிக் கொண்டிருக்கும்போது, முன்னர் தரிசனத்தில் நான் கண்ட மனித தோற்றமுடையவரான காபிரியேல் என்பவர், மாலைநேர பலி செலுத்தும் வேளையில் விரைவாகப் பறந்து என்னிடத்தில் வந்தார். 22அவர் வந்து அறிவுறுத்தி எனக்குச் சொன்னதாவது: “தானியேலே உனக்கு நுண்ணறிவையும், புரிந்துணர்வையும் தரவே நான் இப்போது வந்திருக்கிறேன். 23நீ வேண்டுதல் செய்யத் தொடங்கியவுடனேயே பதில்#9:23 பதில் – எபிரேய மொழியில் வார்த்தை ஒன்று அனுப்பப்பட்டது. அதை உனக்குச் சொல்லவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இறைவனின் பார்வையில்#9:23 இறைவனின் பார்வையில் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது நீ மிகவும் மதிப்புக்குரியவனாக இருக்கின்றாய். ஆதலால் செய்தியைக் கவனமாய்க் கேட்டு, தரிசனத்தின் விளக்கத்தைப் புரிந்துகொள்.
24“உன் மக்களைக் குறித்தும் உங்கள் பரிசுத்த நகரத்தைக் குறித்தும், மீறுதல் முடிவுக்கு வரவும் பாவம் நிறுத்தப்படவும் கொடுமை நிவர்த்தி செய்யப்படவும் நித்தியமான நியாயம் கொண்டுவரப்படவும் தரிசனமும் இறைவாக்கும் முத்திரையிடப்படவும் மகா பரிசுத்த இடம் அபிஷேகம் செய்யப்படவும் நியமிக்கப்பட்ட காலம் எழுபது ஏழுகள்#9:24 எழுபது ஏழுகள் – 7 என்பது 7 வருடங்கள் என்ற கணக்கின்படி மொத்தம் 490 வருடங்கள். ஆகும்.
25“நீ இதை அறிந்து ஞானத்துடன் விளங்கிக்கொள். எருசலேம் மீண்டும் புதுப்பித்து கட்டியெழுப்பப்படும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, அபிஷேகம் செய்யப்பட்டவரான ஆளுநர் வரும் வரைக்கும் ஏழு ஏழுகளும்#9:25 ஏழு ஏழுகளும் – 7 என்பது 7 வருடங்கள் என்ற கணக்கின்படி மொத்தம் 49 வருடங்கள். அறுபத்திரண்டு ஏழுகளும்#9:25 அறுபத்திரண்டு ஏழுகளும் – 7 என்பது 7 வருடங்கள் என்ற கணக்கின்படி மொத்தம் 434 வருடங்கள். செல்லும். வீதிகளும், அகழிகளும் உடையதாய் அதைக் கட்டுவார்கள். ஆயினும் துன்ப காலங்களிலேயே அது கட்டப்படும். 26அறுபத்திரண்டு வாரங்களின் பின் அபிஷேகம் செய்யப்பட்டவர் நீக்கப்பட்டு ஒன்றுமில்லாதிருப்பார். வரவிருக்கின்ற ஆட்சியாளரின் மக்கள் பட்டணத்தையும், பரிசுத்த ஆலயத்தையும் அழித்துப்போடுவார்கள். முடிவு வெள்ளம் போல் வரும். முடிவுவரை யுத்தம் தொடரும். அழிவுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. 27அந்த ஆட்சியாளன் ஒரு ஏழுக்கு#9:27 ஒரு ஏழுக்கு – 7 என்பது 7 வருடங்கள். உடன்படிக்கை ஒன்றை பலருடன் உறுதிப்படுத்துவான். ஆயினும் அந்த ஒரு ‘ஏழின்’ மத்தியில் பலி மற்றும் காணிக்கைக்கு அவன் ஒரு முடிவை உண்டுபண்ணுவான். அழிவைச் செய்கின்றவன், நியமிக்கப்பட்ட முடிவு அவன்மீது வரும்வரை ஆலயத்தின் ஒரு முனையின்மேல் அழிவைக் கொண்டுவரும் அருவருப்பை வைப்பான்” என்றார்.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in