தானியேல் 10
10
மனிதனைப்பற்றிய தரிசனம்
1பெர்சியாவின் அரசன் கோரேஸின் ஆட்சியின் மூன்றாவது வருடத்தில், பெல்தெஷாத்சார் என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு செய்தி வெளிப்படுத்தப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்தச் செய்தியைப் பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது.
2தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கம் அனுஷ்டித்தேன். 3மூன்று வாரங்கள் முடிவடையும் நாள்வரை நான் சிறப்பான உணவை உண்ணவில்லை. இறைச்சியையோ, திராட்சைரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை.
4முதலாம் மாதம்#10:4 முதலாம் மாதம் – யூதரின் நாட்காட்டியில் முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய நதியான இதெக்கேல்#10:4 இதெக்கேல் – இது திக்ரீசு நதியின் எபிரேய பெயர். ஆற்றின் கரையில் நான் நின்றேன். 5நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை அணிந்து, இடுப்பில் ஊப்பாசின் என்ற ஊரின் தூய தங்கத்தால் செய்யப்பட்ட இடைப்பட்டியைக் கட்டிய ஒருவர் நின்றார். 6அவரது உடல் புஷ்பராகக்கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப் போலிருந்தது. அவரது கண்கள் சுடர்விட்டெரியும் தீப்பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் மினுக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரலொலி மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.
7தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த ஆட்கள் எவரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததனால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். 8எனவே நான் மட்டும் தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாற்றமடைந்து வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். 9அப்போது அவரது பேசும் சத்தத்தை நான் கேட்டேன். அதைக் கேட்டவுடன், நான் தரைவரைக்கும் தலையைக் குனிந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன்.
10உடனே ஒரு கை என்னைத் தொட்டு, என் கைகளாலும் முழங்காலாலும் உடலைத் தாங்கி, நடுங்கியவாறு நான் நிற்கும்படி செய்தது. 11அதன் பின்னர் அவர் என்னிடம், “மிக மதிப்புக்குரிய தானியேலே, நான் இப்போது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்றார். இதை அவர் சொன்னபோது, நான் நடுக்கத்தோடு எழுந்து நின்றேன்.
12அப்போது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்பட வேண்டாம். நீ புரிந்துணர்வைத் தேடவும், அதை அடையும்படியாக உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்து நீ மன்றாடிய வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த மன்றாட்டின் காரணமாகவே நான் வந்திருக்கிறேன். 13ஆனால் பெர்சியா அரசின் இளவரசனாகிய வானவன்#10:13 வானவன் – காவல் இறைதூதன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து எதிர்த்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய வானவன் மிகாயேல் எனக்கு உதவி செய்ய வந்தான். 14இப்போது, இனிவரும் காலத்தில் உனது மக்களுக்கு நிகழப்போவதை விளக்குவதற்கே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே” என்றான்.
15அவர் என்னிடம் இப்படிச் சொன்னபோது, நான் பேச முடியாதவனாய் தரைவரை முகம் தாழ்த்தினேன். 16உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்போது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்கு முன்பாக நின்றவரைப் பார்த்து, “ஆண்டவனே, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, பலமற்றவனாய் இருக்கின்றேன். 17ஆண்டவனே, உமது அடியவனாகிய நான் ஆண்டவனாகிய உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பலம் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை” என்றேன்.
18மனிதனைப் போல் காணப்பட்ட அவர் மீண்டும் என்னைத் தொட்டு எனக்குப் பலம் தந்தார். 19“மிக மதிப்புக்குரிய மனிதனே, பயப்படாதே! என்னுடன் சமாதானம் இருப்பதாக! இப்போது திடம்கொண்டு தைரியமாயிரு” என்றார்.
என்னுடன் அவர் அவ்வாறு பேசியபோது, நான் பலம்கொண்டு, “பேசும் ஆண்டவனே, நீர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன்.
20தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனாகிய வானவனுக்கு எதிராக மீண்டும் போராடப் போகின்றேன். நான் போகின்றபோது, கிரேக்க இளவரசனாகிய வானவனும் வருவான். 21ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கின்றது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசனாகிய வானவன் மிகாயேலைத் தவிர இவர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவி செய்யவில்லை.
Currently Selected:
தானியேல் 10: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.