YouVersion Logo
Search Icon

தானியேல் 8

8
செம்மறியாட்டுக்கடா, வெள்ளாடு குறித்த தரிசனம்
1நான் முன்பு கண்ட தரிசனத்தைத் தொடர்ந்து, பெல்ஷாத்சார் அரசனின் ஆட்சியின் மூன்றாவது வருடத்தில் தானியேலாகிய எனக்கு ஒரு தரிசனம் தோன்றியது. 2என்னுடைய தரிசனத்தில் நான் ஏலாம் மாகாணத்திலுள்ள, சூசான் எனப்பட்ட அரணிடப்பட்ட கோட்டையில் இருந்தேன். அந்தத் தரிசனத்தில் நான் ஊலாய் என்னும் கால்வாய் அருகில் இருக்கக் கண்டேன். 3நான் அங்கிருந்து நோக்குகையில், எனக்கு முன்பாக கால்வாயின் அருகே, இதோ! இரண்டு நீண்ட கொம்புகளுடன் செம்மறியாட்டுக்கடா ஒன்று நின்றது. அந்த இரண்டு கொம்புகளும் நீளமாக இருந்தன. ஆனாலும் அவற்றில் ஒன்று மற்றையதைவிட நீளமாய் இருந்தது. நீளமாக இருந்த கொம்போ இரண்டாவதாகவே#8:3 இரண்டாவதாகவே அல்லது பின்னரே வளர்ந்து வந்தது. 4அந்தச் செம்மறியாட்டுக்கடா நான் பார்த்துக்கொண்டிருக்கையில் மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளை நோக்கித் தாக்கியது. அதனை எதிர்த்து நிற்க எந்த மிருகத்தாலும் முடியவில்லை; அதன் கையிலிருந்து காப்பாற்றக்கூடியவர் ஒருவரும் இருக்கவில்லை. அது தன் விருப்பம் போல செயற்பட்டு, வலிமையுள்ளதாய் மாறியது.
5அதைப்பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வந்தது. அதன் கண்களுக்கிடையில் கம்பீரமான ஒரு கொம்பு இருந்தது. அது நிலத்தில் கால்படாமல் பூமி முழுவதையும் கடந்து வந்தது. 6அது நான் முன்னர் கால்வாயருகே பார்த்த இரண்டு கொம்புகளுள்ள செம்மறியாட்டுக்கடாவை நோக்கி வந்து, மிகுந்த சீற்றத்துடன் அதைப் பலம்கொண்டு மோதித் தாக்கியது. 7செம்மறியாட்டுக்கடாவை வெள்ளாட்டுக்கடா மூர்க்கத்துடன் நெருங்கித் தாக்கி முட்டிமோதி, அதன் இரண்டு கொம்புகளையும் நொறுக்கிவிட்டதை நான் கண்டேன். அச்செம்மறியாட்டுக்கடா எதிர்த்து நிற்க முடியாமல், வல்லமையிழந்து நின்றது. வெள்ளாட்டுக்கடா அதனை நிலத்தில் தள்ளிவீழ்த்தி மிதித்தது. அதன் வல்லமையிலிருந்து செம்மறியாட்டுக்கடாவைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. 8அந்த வெள்ளாட்டுக்கடா முன்பைவிட தன்னை அதிகமாக வலிமைபடுத்திக் கொண்டது. ஆனால் அது பலத்தில் உயர்ந்திருந்த வேளையில், அதன் பெரும் கொம்பானது உடைந்துவிட்டது. அந்த இடத்தில் வேறு நான்கு கம்பீரமான கொம்புகள் முளைத்து, ஆகாயத்துக் காற்றின் திசைகள் நான்கையும் நோக்கி வளர்ந்தன.
9அவற்றின் ஒன்றிலிருந்து இன்னொரு சிறிய கொம்பு முளைத்தது. அது ஆரம்பத்தில் சிறிதாய் முளைத்து, பின்னர் தெற்குக்கும் கிழக்குக்கும் எதிராகவும், அழகான நாட்டை#8:9 அழகான நாட்டை இஸ்ரயேல் நாட்டைக் குறிக்கின்றது நோக்கியும் பெரும் வல்லமையுடன் வளர்ந்தது. 10இவ்வாறு அது வானசேனையை எட்டும் வரை பெருத்து வளர்ந்து, வானசேனையில் சிலவற்றையும் நட்சத்திரசேனையில் சிலவற்றையும் பூமிக்கு விழத்தள்ளி, அவற்றை மிதித்துப் போட்டது. 11அது சேனையின் தலைவரைப் போல#8:11 சேனையின் தலைவரைப் போல அல்லது இறைவனைப் போல தானும் பெரியவனாயிருக்கும்படி, தன்னை உயர்த்திக்கொண்டது. அது அவரிடமிருந்து அன்றாட பலியையும் எடுத்துக்கொண்டது. அவரின் பரிசுத்த இடம் வீழ்த்தப்பட்டது. 12மீறுதல் காரணமாக பரிசுத்தவான்களின் சேனையும்#8:12 பரிசுத்தவான்களின் சேனையும் இறைமக்களும் என்றும் மொழிபெயர்க்கலாம், அன்றாட பலியும் அக்கொம்பிடம் ஒப்படைக்கப்பட்டன. அது, தான் செய்த எல்லாவற்றிலும் செழிப்படைந்தது. உண்மையோ நிலத்தில் தள்ளப்பட்டது.
13அப்போது பரிசுத்தர்#8:13 பரிசுத்தர் – இந்த அதிகாரத்தில் பரிசுத்தர் என்பது இறைத் தூதனை குறிப்பதாக இருக்கலாம். ஒருவர் பேசுவதை நான் கேட்டேன். மற்றொரு பரிசுத்தர், பேசிக்கொண்டிருந்த அந்தப் பரிசுத்தரிடம், “இந்தத் தரிசனம் நிறைவேற எவ்வளவு காலம் நீடிக்கும். அன்றாட பலியைப் பற்றியும், அழிவை உண்டாக்கும் மீறுதல் ஏற்படுதல், பரிசுத்த ஆலயம் ஒப்படைக்கப்படுதல், சேனை காலால் மிதிக்கப்படுதல் ஆகியவற்றைப் பற்றியதுமான தரிசனம் எப்போது நிறைவேறும்?” என்று கேட்டார்.
14அதற்கு மற்றைய பரிசுத்தர், “இரண்டாயிரத்து முந்நூறு மாலையும் காலையும் செல்லும். அதன் பின்னர் பரிசுத்த இடம் மீண்டும் பழைய நிலைக்கு மீளமைக்கப்படும்” என பதிலளித்தார்.
தரிசனத்தின் விளக்கம்
15தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக் கவனித்துப் பார்த்து, அதை விளங்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். அங்கே திடீரென்று எனக்கு முன்பாக வலிமையான மனிதனைப் போல் தோன்றிய ஒருவர் நின்றார். 16பின்னர் ஊலாய் என்னும் கால்வாயின் மறுபக்கத்திலிருந்து, ஒரு மனித குரல், “காபிரியேலே, இந்தத் தரிசனத்தின் விளக்கத்தை இந்த மனிதனுக்குத் தெரியப்படுத்து” எனச் சொல்லக் கேட்டேன்.
17எனவே அவர் நான் நின்ற இடத்தை நோக்கி நெருங்கி வந்தார். அப்போது நான் பயத்தினால் தரையில் முகம் பதித்து கீழே விழுந்தேன். அவர் என்னிடம், “மனுமகனே! இந்தத் தரிசனம் முடிவு காலத்தைப் பற்றியது என்பதை புரிந்துகொள்வாயாக!” என்றார்.
18அவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகம் பதித்தவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தேன். அப்போது அவர் என்னைத் தொட்டுத்தூக்கி, காலூன்றி நிற்கச் செய்தார்.
19அதன்பின்பு அவர் என்னிடம், “பிற்காலத்தில் இறைவனின்#8:19 இறைவனின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது கடுங்கோபத்தின் நாட்களில் என்ன நிகழப் போகின்றதென்பதை நான் சொல்லப் போகின்றேன். ஏனெனில் அந்தத் தரிசனம் நியமிக்கப்பட்ட முடிவு காலத்தைப் பற்றியது” என்றார். 20“நீ கண்ட இரண்டு கொம்புகளுடைய செம்மறியாட்டுக்கடா மேதிய, பெர்சிய நாட்டு அரசர்களைக் குறிக்கின்றது. 21அந்த சருமம் நிறைந்த வெள்ளாட்டுக்கடா, கிரேக்க அரசனாகும். அதன் கண்களுக்கிடையில் இருந்த பெரிய கொம்பு முதலாவது அரசனாகும். 22முறிந்துபோன கொம்பு இருந்த இடத்தில் முளைத்த அந்த நான்கு கொம்புகளும், அவனுடைய நாட்டில் இருந்து தோன்றப்போகின்ற நான்கு இராச்சியங்களாகும். ஆனால் முன்னர் இருந்த இராச்சியத்தின் வல்லமை இவற்றுக்கு இருக்காது.
23“அவர்களது ஆட்சிக் காலத்தின் முடிவில், மீறுதல் உச்சகட்டத்தை அடையும்பொழுது, கொடூர தோற்றமுடையவனும் சூழ்ச்சியில் வல்லவனுமான ஒரு அரசன் தோன்றுவான். 24அவன் மிகவும் வலிமையுடையவனாவான், ஆயினும் தனது சொந்தத் திறனினால் அல்ல. அவன் அதிர்ச்சி ஊட்டுகின்ற அழிவுகளைச் செய்து, தான் செய்பவற்றிலெல்லாம் வெற்றியடைவான். அவன் வலிமை வாய்ந்தவர்களையும், பரிசுத்த மக்களையும் அழிப்பான். 25இவ்வாறு அவன் வஞ்சனையை செழிக்கப்பண்ணி, தன்னை மிக உயர்ந்தவனாகக் கருதுவான். பலர் தாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணும்போது, அவர்களைக் கொன்றழிப்பான். அரசர்களுக்கெல்லாம் மகா உன்னதமானவராய் இருப்பவரை அவன் எதிர்த்து நிற்பான். ஆயினும் அவன் முறியடிக்கப்படுவான். ஆனால், மனித கையினால் அல்ல.
26“உனக்குக் கொடுக்கப்பட்ட பலியில்லாத மாலை வேளைகளையும், காலை வேளைகளையும் பற்றிய தரிசனம் உண்மையாக நடக்கப் போகின்றது. ஆயினும், இந்தத் தரிசனத்தை முத்திரையிட்டு மூடி வைப்பாயாக! ஏனெனில் இது அநேக வருடங்களுக்குப் பின்னர் நடக்கப்போவதைப் பற்றியது” எனச் சொன்னார்.
27தானியேலாகிய நான் முற்றாகச் சோர்வடைந்து அநேக நாட்கள் நோயுற்றிருந்தேன். அதன் பின்னர் நான் எழுந்து அரசனுக்குரிய அலுவல்களைக் கவனிக்கப் போனேன். ஆனால் அந்தத் தரிசனத்தில் கண்டவற்றால் நான் அதிர்ந்து போனேன். அந்தத் தரிசனம் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது.

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in