திட்ட விவரம்

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 4 நாள்

வாகுதத்தத்தின் மகன், இயேசுவின் சாயல்


Danny Saavedra  


“என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்.”—ஆதியாகமம் 22:8



நீங்கள் இப்படி ஒன்றை செய்ய அவசியப்படாது என்று நினைத்த ஒரு வித்தியாசமான காரியத்தை எப்போதாவது உங்களை செய்ய சொன்னார்களா? நீங்கள் மட்டும் இல்லை. ஆதியாகமம் 22இல், ஒரு விசித்திரமான கட்டளையை தேவன் ஆபிரகாமுக்கும் கொடுத்தார்.  



ஆபிரகாம் தன் மகனை பலியிடும்படி தேவன் சொன்னார். என்னது? வாகுத்தத்தத்தின் மகனையா? ஒரு பெரிய தேசத்தை அவன் மூலம் அல்லவா எழுப்ப வேண்டியிருந்தது? ஆமாம், அந்த மகன் தான். "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு. . . அவனைத் தகனபலியாகப் பலியிடு," என்று தேவன் சொன்னார். (ஆதியாகமம் 22:2 NIV). 



இது ஆபிரகாமுக்கு இதயத்தை உடைக்கும், சொல்ல முடியாத வேதனையை கொடுத்திருக்கும். நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை பலியிட கேட்கப்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? நீங்கள் நோவாவை போல கீழ்ப்படிதல் உள்ளவராக இருப்பீர்களா அல்லது யோனாவை போல எதிர் திசையில் ஓடிவிடுவீர்களா? தேவனின் இந்த கோரிக்கை எவ்வளவு முட்டாள்தனமாகவும் நியாயமற்றதாகவும் தென்பட்டிருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஈசாக்கு ஆபிரகாமின் அன்பு மகன். மேலும், தேவனின் ஒப்பந்தத்தின் எதிர்காலாம் அவனை சார்ந்திருந்தது. ஈசாக்கு ஒரு அற்புதம், ஆபிரகாம் மற்றும் சாராளின் விசுவாசத்திற்கு பதிலாக தேவன் கொடுத்த ஈவு. 



ஆனால் தேவன் ஆபிரகாமை கேட்டு, உடனடியாக அவரை விசுவாசத்தில் கீழ்ப்படிந்தார். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் சாத்தியமற்ற, கடினமான முடிவு போல தென்படுவதை நாம் சந்திக்க நேரும். . . நம்மால் புரிந்துக் கொள்ள முடியாததாக அது இருக்கும். ஆனால் நாம் தேவனின் குணத்தை புரிந்துக்கொள்ளும் போது, நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பை புரிந்துக்கொள்ளும் போது, அவரது சித்தம் நம் நன்மைக்கும் அவரது மகிமைக்குமே என்று நாம் அறியும்போது, நாம் அவரை நன்றியுணர்வுள்ளவர்களாக கீழ்படிய முடியும், ஏனென்றால் அவரை அன்புக்கூர்ந்து, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் நன்மைக்கு எதுவாக அவர் செய்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28).



தேவ சித்தம் எப்போதும் அவரது வாக்குத்தத்தத்தை மீறாது என்று ஆபிரகாம் அறிந்திருந்தார். "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்" (ஆதியாகமம் 21:12) என்ற வாக்குத்தத்தத்தை இந்த உண்மையுள்ள தகப்பன் பற்றிக்கொண்டார். தன் மகனை பலியிட அனுமதித்தாலும், தேவனால் ஈசாக்கை மீண்டும் உயிர்பெற செய்ய முடியும் என்று ஆபிரகாம் நம்பினார். (எபிரேயர் 11:17–19). இதில் நாம் விசுவாசத்தின் உண்மையான தன்மையை பார்க்கிறோம். அது விளக்கங்களைக் கேட்பதில்லை; வாக்குத்தத்தங்களில் தங்கியிருக்கும். அதனால் தான் "நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்" (ஆதியாகமம் 22:5) என்று தன் வேலைக்காரரிடமும், “தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார். . .” (ஆதியாகமம் 22:8 NIV) என்று தன் மகனிடமும் அவரால் சொல்ல முடிந்தது.



இந்த கதையில் அடிக்கடி நாம் மறந்து விடுகிற ஒன்று ஈசாக்கின் விசுவாசமும் கீழ்ப்படிதலும். அடிக்கடி, நாம் இந்த கதையை கற்பனை செய்கையில், ஈசாக்கை ஒரு சிறு பையனாக நினைக்கிறோம். ஆனால் அவன் 18 முதல் 33 வயதுக்குள் இருந்திருக்க வேண்டும் என்று அனேக வேதாகம வல்லுனர்கள் நம்புகிறார்கள். தகன பலிக்கான விறகை எல்லாம் கொண்டு வரும் அளவுக்கு பெரியவனாகவும் பலசாலியாகவும் அவன்
இருந்திருக்க வேண்டும் அல்லவா? 



உலகத்தின் பாவங்களை சுமக்க வந்த தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் மூலம் மீட்பு என்னும் தேவனின் திட்டத்திற்கு ஈசாக்கின் கதையுடன் ஒரு அருமையான ஒப்புமையை பார்க்கிறோம். சம்பவித்த காரியங்களை ஈசாக்கு அறிந்திருந்தான் என்று அனேக வல்லுனர்கள் நம்புகிறார்கள். தான் பலியாவதற்காக வேண்டிய கட்டைகளை சுமந்து சென்றான், பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் போதும் அமைதியாக இருந்தான். ஆபிரகாம் கத்தியை உயர்த்தியப்போதும் அவன் தடுக்கவில்லை. விருப்பத்துடன், தன் தந்தைக்கு தன்னையே விட்டுக் கொடுத்தான் . . . இயேசுவைப் போலவே! ஜேம்ஸ் ஈ குட்மேன் என்பவர் ஈசாக்கைப் பற்றி இப்படியாக சொல்லுகிறார், “அவனுக்கு எல்லாம் தெரிந்திருந்தது, விருப்பத்துடன் விட்டுக் கொடுத்தான், அமைதியாக இருந்தான், எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் போராடவில்லை.” அலெக்ஸான்ட்ரியாவை சேர்ந்த கிளெமென்ட் இப்படியாக எழுதியிருக்கிறார், "அவர் (இயேசு) தான் ஈசாக்கு. . . கிறிஸ்து கடவுளின் மகனாகவும் பலியாகவும் இருந்ததுப் போல, ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கும் இருந்தான்.” 



இறுதியில், ஆபிரகாமின் கையை தேவன் தடுத்து நிறுத்தி, மற்றொரு பலியைக் கொடுத்தார். “ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.” (ஆதியாகமம் 22:14). தேவன் ஆட்டுக்குட்டியை கொடுத்த அந்த தருணத்தின் கொண்டாட்டம் தான் கிறிஸ்துமஸ்! 



பார்ப்பதற்கு முட்டாள்தனமாக தென்படும் ஒன்றை தேவன் செய்ய சொல்லுகிறாரா? உங்களுக்கு புரியாத, உங்கள் அளவுக்கு மிஞ்சிய ஒன்றை செய்ய சொல்லுகிறாரா? ஒரு வேளை வேறொரு ஊருக்கோ நாட்டுக்கோ போக சொல்லுகிறாரா, அல்லது ஒரு புதிய வேலையை செய்ய சொல்லுகிறாரா, அல்லது உங்கள் வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ ஒரு வேத ஆராய்வுக் குழுவைத் துவங்க சொல்லுகிறாரா? ஒரு வேளை உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ, உங்கள் வகுப்பில் படிக்கும் ஒருவரிடமோ, உங்களுடன் வேலை செய்யும் ஒருவரிடமோ சுவிசேஷத்தை பகிர்ந்துக் கொள்ள உங்களை தேவன் நடத்தலாம். ஆபிரகாமிடமிருந்து கற்றுக் கொண்டு அந்த அழைப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் விசுவாசத்திலும் கீழ்ப்படிதலிலும் ஒரு படி எடுத்து வைக்கும் போது, உங்களை ஆசீர்வதிக்க, அதன் மூலம் உங்களைக் கொண்டு செல்லவும், உங்களிலும் உங்கள் மூலமாகவும் அற்புதமான செயல்களை செய்ய அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்!


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்