திட்ட விவரம்

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 8 நாள்

ஒரு பிரமாண்டமான பாடல்


Danny Saavedra


“அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்."—லூக்கா 1:46–55



உங்களுக்கு நிகழ்ந்த மிகச் சிறந்த காரியம் என்ன? உங்களால் கொள்ள முடியாத அளவு சந்தோஷத்தை கொடுத்த அந்த ஒரு தருணம் அல்லது சம்பவம் எது? எனக்கு, என் மனைவி எங்கள் முதல் குழந்தையுடன் கருவுற்றிருக்கிறாள் என்று கண்டுபிடித்தது தான். எங்கள் நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட செல்லும் முன், என் பிறந்த நாள் அன்று என்னிடம் இதைச் சொன்னாள்.



அதற்கு ஒரு ஆண்டு முன் தான் கருவுற்றாள், ஆனால் அந்த குழந்தையை இழந்து விட்டோம். கடந்த முறை அப்படி நடந்ததால், மக்களிடம் இதை பற்றி சொல்ல முதலில் பயந்தோம், ஆனால் இந்த முறை வித்தியசாமாக உணர்ந்தோம். இது நிஜமானது என்று ஆண்டவர் சொல்வதை நான் உண்மையாகவே உணர்ந்தேன். இதனால், பயம் எங்கள் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பறித்து விட நாங்கள் விடவில்லை. எனவே இந்த செய்தியை எங்கள் நண்பர்களிடம் அந்த இரவில் சொல்ல முடிவு செய்தோம்.  



என் வாழ்க்கை முழுவதும் நான் ஒரு தந்தை ஆக வேண்டும் என்று நான் விரும்பினேன், எனவே அந்த தருணம் கடைசியாக வரும் போது, என் மகிழ்ச்சி பொங்கியது. ஜூட் என்று எங்கள் மகனுக்கு பெயரிட்டோம். அதற்கு துதி என்று அர்த்தம். அற்புதமான, இரக்க குணமுள்ள, பெலனுள்ள, தனித்துவம் கொண்ட, படைப்பாற்றல் கொண்ட பிள்ளையாகிய என் ஜுடுக்காக என் மழு இதயத்தோடு தேவனை துதிக்காத நாளே இல்லை. 



இன்று, நாம் வேதாகமத்திலேயே மிக அழகான ஒரு பகுதியைப் பார்க்கப் போகிறோம். இது வார்த்தைகளின் தொகுப்பிலேயே மிக அழகான ஒன்று. . . இது மரியாள் ஆண்டவரைத் துதித்து பாடின பாடல். 



இந்த தருணத்தில் நீங்கள் மரியாளாக இருப்பதாக சற்று கற்பனை செய்து பாருங்கள். சில நாட்களுக்கு முன், ஒரு தேவத்தூதன் ஆண்டவரிடமிருந்து வந்து நீங்கள் பரிசுத்த ஆவியால் கர்ப்பம் தரிப்பீர்கள் என்றும், ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட, அதிக காலம் எதிர்ப்பார்க்கப் பட்ட மேசியாவை சுமக்கப்போகிறீர்கள் என்றும் சொல்லியிருக்கிறான் . . .



சர்ப்பத்தின் தலையை ஒரே முறையாக நசுக்கப் போகிறவர் . . .



உலகத்தில் இருக்கும் அனைத்துக் குடும்பங்களும் அவர் மூலம் ஆசீர்வதிக்கப்படும் வித்தானவர் . . . 



தாவீதின் சிம்மாசனத்தில் சதாக்காலமும் அமரப்போகும் ராஜா. . .



மனுக்குலம் அனைத்தையும் விடுவிக்கும் ரட்சகர் . . .



இந்த அதிர்ச்சியான செய்திக்கு அவளது பதில் என்ன? “அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்." (லூக்கா 1:38). ஆஹா! எனவே, அவள் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கருவுற்றிருந்த தன் உறவினரைப் பார்க்க செல்கிறாள். அவளை வாழ்த்தியதுமே, மரியாள் ஆண்டவரின் தாயாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் எல்லா பெண்களுக்கும் மேல் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று எலிசபெத் ஆவியானவர் மூலம் அறிவிக்கிறாள். இந்தத் தருணத்தில் தான் மரியாளால் தன் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடக்க முடியவில்லை! “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது." என்று அறிக்கையிடுகிறாள்.



நீங்கள் கவனித்துப் பார்த்தால், மரியாளின் துதிப் பாடலுக்கும், 1 சாமுவேல் 2இல் இடம் பெறும் அன்னாளின் பாடலுக்கும் அனேக ஒருமைப்பாடுகள் இருக்கின்றன. இதைப் பற்றி இறையியல் வல்லுனரான அலெக்சாண்டர் மெக்லாரென் இப்படியாக எழுதுகிறார், “சாதாரண கிராமத்துப் பெண் ஆண்டவரின் தாயாக இருப்பதால் கவிஞர் ஆக வேண்டுமா என்ன? தன் சொந்த உணர்சிகளை தனக்கு மிகவும் பழக்கமான வடிவங்களில் அமைத்திருக்கிறாள் என்பது தான் அதிக சாத்தியம் அல்லவா? முக்கியமாக அன்னாளின் பாடல் அவளுடையது போல இருப்பது? இந்த பழைய சங்கீதங்கள் தன்னுடைய மின்னும் உணர்சிகளுக்கு வடிவம் கொடுக்கும் அச்சாக உள்ளுணர்வால் செயல்பட்டன. புதுமை இல்லாதது தான் இந்த பாடலின் உண்மைத் தன்மையையேக் காட்டுகிறது.” உங்கள் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலையை அனுபவிக்கும் போது ஒரு பாடல், ஒரு சங்கீதம், அல்லது வேதப்பகுதி உடனே உங்கள் சிந்தனையில் உதித்து நீங்கள் உணரும் அதே காரியத்தை வெளிப்படுத்த எப்போதாவது உதவியுள்ளதா? மரியாளுக்கும் அப்படி தான் நிகழ்ந்திருக்க வேண்டும்! அன்னாளின் பாடலை நினைவுக் கூர்ந்து, அவள் உணர்ந்த புரிந்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சி, நன்றியுணர்வு, மற்றும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்த அதனை உபயோகித்தாள்.



நண்பர்களே, இன்னும் கிறிஸ்துமசுக்கு ஒரு வாரம் கூட இல்லாத இந்நிலையில், நான் உங்களுக்கு ஒன்று நினைவுப் படுத்தட்டும்: மரியாளின் துதிப் பாடல் நமதாகலம்! நாம் இதே வார்த்தைகளை ஆண்டவருக்குப் பாடலாம். மரியாள் அறிக்கை செய்ததுப் போல, “வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது,” நாமும் கூட பொங்கும், அடக்கமுடியாத சந்தோஷத்துடன் இந்த துதியை உரத்த சத்தத்தோடு சொல்ல வேண்டும். இயேசுவினால், தேவன் நமக்கு செய்திருக்கும் பெரியக் காரியங்களை நாம் எல்லாரும் உரத்த சத்தத்தில் பாடலாம்! ஒவ்வொரு நாளும், நம் வாழ்க்கை தேவனுக்கான நடக்கும், பேசும், உயிர்வாழும், சுவாசிக்கும் துதிப் பாடலாக இருக்கக்கூடும்.  



இன்றைக்கு, இயேசுவுக்கு உங்கள் துதிப் பாடலை தெரிவிக்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சொல்லுங்கள், பாடுங்கள், அல்லது எழுதுங்கள். ஒரு ஆழமான முக்கியம் வாய்ந்த ஆராதனைப் பாடலை, அல்லது வேதாகமப் பகுதியை, அல்லது சங்கீதத்தை நீங்கள் பயன்படுத்தி அதை உங்களுக்கென்று தனித்துவப் படுத்தலாம். நம் வல்ல தேவனாகிய பிதாவுக்கு உங்கள் சந்தோஷத்தையும் நன்றியையும் அறிவியுங்கள்!


வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்