திட்ட விவரம்

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 7 நாள்

இயேசுவின் பிரசன்னம்


Danny Saavedra


“அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: 'ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்' என்றாள்.”—லூக்கா 1:39–45



பிரயன் மற்றும் கேட்டி டார்வால்ட் எழுதிய ஒரு அருமையான பாடலின் வரிகள் இப்படியாக சொல்லுகின்றன: “நீர் இந்த அறைக்குள் நுழையும்போது, எல்லாம் மாறுகிறது; நீர் கொண்டு வரும் வெளிச்சத்தில் இருள் நடுங்கத் துவங்குகிறது. நீர் இந்த அறைக்குள் நுழையும்போது ஒவ்வொரு இதயமும் எரிய துவங்குகிறது, உம் பாதத்தில் இங்கு கீழ் உட்கார்ந்து உம்மை ஆராதிக்கும் போது, வேறு எதுவும் பொருட்டு இல்லை.” 



லூக்கா 1 ஐப் போன்ற ஒரு சில வேதாகமப் பகுதிகளே என்னை அதிக உணர்ச்சிகளால் நிரப்புகின்றன. இந்தக் காட்சியை என்னோடு கூட சற்று கற்பனை செய்துப் பாருங்கள். . . அனேக ஆண்டுகளாக காத்திருக்கும் இந்த மேசியா தன் மூலம் பிறக்கவிருக்கிறார் என்ற அற்புதமான, அதிசயமான, உலகை மாற்றும் செய்தியை தேவத்தூதன் காபிரியேல் மரியாளிடம் சொன்னதும், அவள் கிளம்பி தன் உறவினரான எலிசபெத்தைப் பார்க்க சென்றாள். அவர்களும் கருவுற்றிருப்பதாக தேவத்தூதன் மரியாளிடம் அறிவித்திருந்தார்.



சில நாட்களுக்குப் பின், அவள் வந்து, தன் உறவினரை வாழ்த்தினாள். அநேகமாக, "உங்களுக்கு சாமாதானம்" என்று வழக்கமாக சொல்லப்படும் வாழ்த்தை தான் சொல்லியிருப்பாள். அவள் அறைக்குள் நுழைந்த உடனேயே, மரியாளின் சத்தம் எலிசபெத்தின் காதுகளில் விழுந்தவுடனே, ஒரு அற்புதமான, அதிசயமான செயல் நிகழ்ந்தது: வயிற்றிலிருந்த குழந்தை கருவில் "மகிழ்ச்சியில் துள்ளியது". அவள் குரலின் சத்தத்திலேயே, பிறக்காத இயேசுவுக்கு ஒரு நாள் ஞானஸ்நானம் கொடுக்கவிருக்கும் பிறக்காத யோவான் அவளுக்குள் துள்ளினார். அற்புதம் அல்லவா?



இதைப் பற்றி, இறையியல் வல்லுனரான மேத்யூ பூல் இப்படியாகக் குறிப்பிடுகிறார், “தாயின் கருவில் குழந்தை அசைவது. . . வினோதமான விஷயம் அல்ல. . . ஆனால், இந்த அசைவு கண்டிப்பாக இயல்புக்கும் மேற்பட்டது. ” யோவான் தன் கருவில் உதைப்பதை, நகருவதை இதற்கு முன் எலிசபெத் உணர்ந்திருப்பார்கள், ஆனால் இப்படி இருந்ததில்லை. இது கருவில் ஆராதனை; 2 சாமுவேல் 6:14 இல் தாவீது “தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்" என்பது போன்றது இது, ஆனால் எலிசபெத்தின் வயிற்றில் நிகழ்ந்தது. அந்த தருணத்திலேயே பரிசுத்த ஆவியானவர் மூலம் அந்த துள்ளுதலுக்கான காரணத்தை அவள் உணர்ந்துக்கொண்டாள். ஆண்டவராகிய தேவக்குமாரன், மேசியா மற்றும் மீட்பர் அவளது பிரசனத்தில் இருக்கிறார் என்று அறிந்தாள். 



எனவே, உற்சாகமாக அவள் அறிவித்தாள், "என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது?" வேதாகமத்தின் ஒரு மொழிப்பெயர்ப்பான New English Translation இந்த வசனத்தை மொழிப்பெயர்த்த விதம் எனக்கு பிடித்திருக்கிறது: "ஆண்டவருடைய தாயார் என்னிடம் வருவதற்கு நான் யார்?”



இந்த பரிமாற்றத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும், என் கண்கள் கலங்குகின்றன. யாருடைய பிரசனத்தில் இருக்கிறாள் என்று அறிந்ததும் அவள் எப்படி உணர்ந்திருப்பாள் என்று உங்களளால் கற்பனை செய்ய முடிகிறதா? இது அவர் தான், அவர் இங்கு இருக்கிறார்; உன் இரட்சகரும் ஆண்டவருமாகிய அவர் உன் உறவினரின் கருவில் இருக்கிறார்! என்று பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தியதும் எப்படி இருந்திருக்கும்? என் நினைவுக்கு வருவது சிமியோன். புதிதாக பிறந்த மேசியாவை கையில் ஏந்தும் பாக்கியத்தை பெற்று, இயேசுவை பார்த்தப்போது, இப்படியாக சொன்னார்: “தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” (லூக்கா 2:31–32). 



நாம் இயேசுவின் பிரசனத்தை அனுபவிக்கும் போது, சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்மை கொண்டாடவும், சுத்தமான வெட்கமற்ற விதத்தில் துதிக்கவும் வைக்கும் ஒரு முழுமை, சமாதானம், உற்சாகம் இருக்கிறது. சங்கிலிகள் உடைகின்றன, செதில்கள் எடுக்கப்படுகின்றன, சுகம் ஏற்படுகிறது, இருள் ஓடுகிறது, களைத்தவர்கள் இளைப்பாருதளை கண்டடைகிறார்கள். இதைப் போல உலகத்தில் வேறு எதுவும் இல்லை! விசுவாசிகளாகிய நமக்கு ஒவ்வொரு நாளும் இந்த உண்மையில் வாழ முடிகிறது.  



நாம் ஒவ்வொருவரும் இதனை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன்; நமக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவனுடைய பிரசனத்தில் ஒவ்வொரு நொடியும் வாழும் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் நாம் எப்போதும் இழந்துவிடக் கூடாது என்றும் ஜெபிக்கிறேன். அவருடைய பிரசனத்தை நாம் எப்போதும் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்றும், தொடர்ந்து, தினமும் அவருடைய ஆவியின் புதிய நிறைவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.  



மரியாள் தன் கர்ப்பக்காலத்தில் செய்ததுப் போல, நாம் தேவனுடைய பிரசனத்தை செல்லும் இடமெல்லாம் சுமந்து செல்கிறோம். நம்மை சுற்றியுள்ளவர்களிடம் பகிர்ந்துக் கொல்வதர்காகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய மகிமையான பரிசை நமக்குள் சுமக்கிறோம்! அதனை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் ஒரி அறைக்குள் நுழையும் போது எப்படி இருக்கிறது? மக்கள் உங்களை எதிர்க்கொள்ளும் போது, உங்கள் குரலைக் கேட்கும் போது, எப்படி நடந்துக்கொள்கிறார்கள்? உங்களுக்குள் இருக்கும் தேவனின் பிரசன்னம் வெளியரங்கமாக இருக்கிறதா? உலகத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையின் மூலம் மின்னுகிறதா அல்லது அதனை மூடி, மறைத்து வைத்திருக்கிறீர்களா?  



நண்பர்களே, "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" கிறிஸ்துவின் வெளிச்சத்தை பிரகாசிக்கும் விதத்தில், மீட்பரின் பிரசனத்தை சுமந்து செல்லும் நாம் பண்டிகை விளக்குகள் நிறைந்த இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் பிரகாசிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். (மத்தேயு 5:16 NIV).


நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்